'கொரோனா பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட வேண்டும்’ - உச்சநீதிமன்றம்!
இந்த தேசிய நெருக்கடி காலத்தில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை கூடங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பரிசோதனைக் கூடங்களில் இரண்டிலுமே, கொரோனா வைரஸ் பரிசோதனைக் கட்டணம் இலவசமாக மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும் நிலையில், தனியார் பரிசோதனைக் கூடங்கள் ரூ.4,500 கட்டணம் வசூலிக்கும் நிலையில், பொதுநலன் நோக்கிலான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கு அரசு பின்னர் அந்தத் தொகையை அளிக்க வேண்டுமா என்பது பற்றி பின்னர் தீர்மானிக்கலாம் என வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்திய நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் எஸ்.ரவீந்தரன் தெரிவித்தனர்.
"இந்த தேசிய நெருக்கடி காலத்தில், கோவிட்-10 பரிசோதனைக்காக தனியார் பரிசோதனைக் கூடங்கள் ரூ.4,500 வசூலிப்பது நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு எட்டாததாக இருக்கும் எனும் மனுதாரர் கருத்தில் அர்த்தம் இருப்பதாகக் கருதுகிறோம். மேலும், ரூ.4,500 செலுத்த முடியாத காரணத்திற்காக யாரும் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள முடியாத நிலை வரக்கூடாது,” என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
"தேசிய இடர் காலத்தில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் தங்கள் தாராள மனதை வெளிப்படுத்தி முக்கியப் பங்காற்ற வேண்டும்,” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
"கோவிட்-19 சோதனையை இலவசமாக மேற்கொள்ள அங்கீகாரம் பெற்ற தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கு பதில் மனுதாரர்களுக்கு உத்தரவிடக் கோரும் மனுதாரரின் வாதத்தில் அர்த்தம் இருப்பதாகக் கருதுகிறோம்,” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
"தனியார் பரிசோதனைக் கூடங்கள் சோதனையை இலவசமாக செய்ய வேண்டுமா அல்லது இதற்கான தொகையை அரசு பின்னர் செலுத்த வேண்டும் என்பதை பிறகு பரிசீலிக்கலாம்,” என்றும் தெரிவித்தனர்.
பரிசோதனைகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. துவக்கத்தில் பரிசோதனை செய்வதில் பின் தங்கியிருந்த இந்தியா பின்னர் தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கும் அனுமதி அளித்தது. இருப்பினும் இந்தியா இன்னமும் குறைந்த பரிசோதனை விகிதத்தையே கொண்டுள்ளது.
தமிழில்: சைபர்சிம்மன்