'சூதாடும் ஆன்லைன் கேம்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள்' - தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம்!
ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட கணக்கை உருவாக்க, வாடிக்கையாளரை அறியும் (KYC) நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்த விதிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம், பணம் வைத்து விளையாடும் கேம்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட கணக்கை உருவாக்க, வாடிக்கையாளரை அறியும் (KYC) நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்த விதிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.

என்னென்ன விதிமுறைகள்?
- முதல் முறை லாகின் செய்யும் போது கேஒய்சி நடைமுறை ஆதார் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பிறகு, இரண்டாவது கட்டமாக, ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் உறுதி செய்ய வேண்டும். ஆதாருடன் இணைந்த போன் எண்ணுக்கு இது அனுப்பி வைக்கப்படும்.
- பணம் வைத்து விளையாடும் கேம்களில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்க முடியாது. இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை, இந்த கேம்களில் லாகின் செய்ய அனுமதி கிடையாது.
- மாநிலத்தில் ஆன்லைன் கேம் மோகத்தை குறைப்பதிலும் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு மேல் விளையாடும் போது, அது தொடர்பான விவரம் பாப் அப் வடிவில் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த எச்சரிக்கை செய்திகள் 30 நிமிடத்திற்கு ஒரு முறை தோன்றும்.
- இந்த கேம்களின் இணையதளங்களில் நுழையும் போது, ஆன்லைன் கேம்கள் அடிமையாக்கும் தன்மை கொண்டவை எனும் எச்சர்க்கை வாசகம் இடம் பெற வேண்டும்.
- மேலும், இந்த கேம்கள் பயனாளிகளுக்கான தினசரி, வார மற்றும் மாதாந்திர வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும்.
ஆன்லைன் கேமிங் துறை அதிகரிக்கும் ஜி.எஸ்டி வரியை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி காரணமாக, ஆன்லைன் கேமிங் மேடைகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இது பயனாளிகள் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
தொடர்புடையவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான கலந்தாலோசனைக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விதிமுறைகளை அகில இந்திய கேமிங் கூட்டமை வரவேற்றுள்ளது.
“இந்தியாவுக்கு வெளியே இருந்து செயல்படும் சட்டவிரோத கேம்கள் தான், பயனாளிகள், பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்,“ என கூட்டமைப்பின் சி.இ.ஓ ரோலாண்ட் லாண்டர்ஸ் கூறியுள்ளார்.
”இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, துறை மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். புதிய விதிகளி சில அம்சங்கள் குறித்து கேமிங் துறை ஆழமாக பரிசீலிக்க வேண்டும் என்றாலும், சமநிலை வாய்ந்த, முற்போக்கான விதிமுறைகளை உருவாக்குவதில் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம், என்றும் தெரிவித்தார்.