'முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை' - எடப்பாடி பழனிசாமி புகாருக்கு டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டிற்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகுந்த புள்ளிவவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டிற்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்றும், முதலீடுகள் நிச்சயம் வரும் என்பதை உறுதி செய்து கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான 14 நாள் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இதனிடையே, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்ற மாநில முதல்வர்கள் ஈர்த்த முதலீட்டைவிட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குறைந்த முதலீட்டையே கொண்டு வந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்திற்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் அமெரிக்க பயணம்
முதல்வரின் அமெரிக்க பயணத்தில் ரூ.7,616 கோடி அளவில் புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக கூறியுள்ள அமைச்சர், இன்னும் கூடுதல் முதலீடு மற்றும் அதிக வேலைவாய்ப்பிற்கான முதல் கட்ட பணிகளே முடிந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட பணிகள் என்றால் இது ஆரம்பம் மட்டுமே, பணிகளை துவக்கும் நிறுவனங்கள் என்பதை பலவகையில் உறுதி செய்யப்பட்ட நிறுவனங்களுடன் மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது, முதலீடு செய்ய முன்வந்த எல்லா நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை, என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பயணத்தில் கையெழுத்தான அனைத்து ஒப்பந்தங்களும் 100 சதவீதம் நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பல மாநிலங்களில், பேச்சு வார்த்தை நடைபெறும் போதே முதலீடுகள் வருவதாக அறிவித்துவிடுவதாகவும், ஆனால் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி முதலீடு வருவதை உறுதி செய்த பிறகே தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போடுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உறுதியான முதலீடு
எனவே, மற்ற மாநிலங்களை விட நமது மாநிலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேறும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு அளவை விட அவை எந்த அளவு முதலீடாக மாறும், வேலைவாய்ப்பாக மாறும் என்பதே முக்கியம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியால் பல்வேறு வெற்று ஒப்பந்தங்கள் போடப்பட்டன என்று குற்றம்சாட்டிய அமைச்சர், உறுதியாக முதலீடாக மாறக்கூடிய நிறுவனங்களுடன் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களே பலன் தரும் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இருந்த கியா மோட்டார்ஸ் தனது முடிவை மாற்றிக்கொண்டு ஆந்திரா சென்றது என்றும், இதனால் உருவாக இருந்த வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு இழந்தது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று ஃபோர்டு நிறுவன ஆலை மீண்டும் செயல்பட இருப்பது ஒரு சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பழனிசாமியால் பதில் அளிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சி சாதனை
அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2019 ல், 197 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, 2,59,534 கோடி முதலீடு வரும் என்றனர். ஆனால், 86,190 கோடி முதலீடு மட்டுமே வந்தன. அதிலும், திமுக ஆட்சிக்கு வந்த பின் தான், முந்திய ஆட்சி ஒப்பந்தங்கள் என காழ்ப்புணர்வு காட்டாமல், அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்ப்பட்டன, என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2021ல் மு.க.ஸ்டாலின் முதல்வரான பின், இதுவரை 891 ஒப்பந்தங்கள் மூலம் 10,06,709 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளன என்றும், இதில் 535 ஒப்பந்தங்கள் செயல்பட்டிற்கு வந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். 60 சதவீதத்திற்கு மேல் செயல்பாடு பெற்றுள்ளது.
பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் செய்யாத சாதனையை மூன்றே ஆண்டுகளில் திமுக செய்துள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், புதிதாக தொழில் துவங்க தகுதியுள்ள எவர் வந்தாலும் சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது என்றும், திராவிட மாடல் ஆட்சியின் தொழில்துறை சாதனங்களை குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan