டீ-ஷர்ட்கள் வழியாக, தமிழ் மொழியை உலகெங்கும் பரப்பும் கோபிநாத்!

ஒரு தமிழனாக தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் பரப்புவது தன் கடமை என்று, இதையே தொழிலாய் முனைந்து ஆர்வமாய் ஈடுபட்டு வருகிறார் கோபிநாத் ரவிராஜன்.
0 CLAPS
0

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய செம்மொழி, நம் தமிழ் மொழி. இம்மொழியின் சொல்லும்-சுவையும், இலக்கணமும்- இலக்கியங்களும், கலாச்சாரமும்-பண்பாடும், பெருமையையும்-புகழையும் போற்றாத புலவர்கள், கவிஞர்கள் பாரில் இல்லை. இத்தனை பேர்பெற்ற தமிழ் மொழி, அதன் ஆதிக்க இடமான, தமிழ் நாட்டிலேயே அழிந்து வருவது, வருத்தத்திற்குரிய விஷயமாகும். ஒரு தமிழனாக இந்த மொழியையும் கலாச்சாரத்தையும் பரப்புவது தன் கடமை என்று, இதையே தொழிலாய் முனைந்து ஆர்வமாய் ஈடுபட்டு வருகிறார் கோபிநாத் ரவிராஜன். யுவர்ஸ்டோரி தமிழ் உடன் பகிர்ந்து கொண்ட அவரது தொழில் பயணம் உங்கள் பார்வைக்கு!

"இலவம்" முதல் "வில்வா" வரை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் பிறந்த கோபிநாத், 2012இல் தன் பொறியியல் படிப்பை முடித்தார். பின் இவரும் இவரது நண்பர்களும் கூட்டு சேர்ந்து தொழில் முனைவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். ஆறு, ஏழு மாதங்கள் கழித்து, 'இலவம்' எனும் ஆடை ப்ராண்ட் பெயரில் சட்டைகளைத் தயாரித்து, விற்பனை செய்யத் தொடங்கினர்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் முதலிய நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடையே, இவர்களது 'தமிழ் வார்த்தைகள் அச்சடிக்கப்பட்ட சட்டைகளுக்கு' நல்ல வரவேற்பு கிடைத்து, லாபகரமான தொழில் செய்து வந்தனர். ஆனால் பங்குதாரர்களுக்கிடையே ஏற்பட்ட சிக்கல்களினால், அதிலிருந்து வெளியேறி, மார்ச் 2015இல் கோபிநாத், சொந்தமாக "வில்வா" எனும் பெயரில், இணையதளம் மூலம் டி-ஷர்ட் விற்பனையை செய்யத் தொடங்கினார்.

ஏன் தமிழ்? எதற்கு 'வில்வா'?

வேலைவசதியும் பணத்தேவையும்தான், பல தமிழர்கள் வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் தஞ்சமடையக் காரணமாக இருக்கிறது. அதன் விளைவாக கலாச்சாரத்தையும், பாரம்பாரியத்தையும் பின்பற்ற முடியாத சூழலுக்குத் தள்ளப்படுக்கின்றனர். தமிழன் என்ற உணர்வை நமக்குள் ஊக்கப்படுத்தமாறு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தோம். அப்பொழுதுதான் இந்த டீ-ஷர்ட்கள் ஐடியா தோன்றியது. தமிழைக் கொண்டு யாரும் இதுபோல் செய்ததில்லை. வடமாநிலங்களில் மட்டும் ஹிந்தி மொழிக் கொண்டு சட்டைகளைத் தயாரித்து கொண்டிருந்தனர்.

"எத்தனையோ பேர் ஆங்கிலத்தில் கொச்சையான வார்த்தைகள் கொண்ட டீ-ஷர்ட்களைச் கூச்சமின்றி வெளியில் அணிந்து செல்லும்போது, ஏன் எழுச்சி ஊட்டக் கூடிய பாரதியாரின் வரிகளையோ அல்லது திருவள்ளுவரின் குறள்களையோ கொண்ட டீ-ஷர்ட்களை மக்களிடம் சென்று சேர்க்கக்கூடாது?"

என்று நினைத்தோம். தமிழ் டீ-ஷர்ட்கள் திட்டத்தைச் செயல்படுத்தினோம். ஏராளமான பயன்களை அளிக்கும் வில்வ மரம்போல் தொழில் செய்ய வேண்டும் என்று, "வில்வா" எனும் பெயரில் தொடங்கினேன், என்றார் கோபிநாத்.

வியாபாரமும் விற்பனையும்

லிவைஸ், நைக்கி, ரீபோக், அடிடாஸ், ஜாக்கி போன்ற ஆடை ப்ரண்ட்கள் இன்று உலகளவில் விரிவடைந்து, அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ் ப்ரண்ட்கள் பொறுத்தவரையில் 'ராம்ராஜ்', 'பொம்மிஸ்' போன்ற குறைந்த ப்ரண்ட்களே இருக்கின்றன. தமிழிலும் உலக புகழ்பெற்ற ஆடை ப்ரண்ட்களை உருவாக்குவதே எங்கள் எதிர்கால நோக்காகும்.

image

முதலீட்டாளர்கள் பலர் என் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தாலும், நிறுவனத்தின் நோக்கம் வியாபார நோக்கமாய் மாறிவிடும் என்று நான் அவர்களை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. என் தமிழ் நோக்கத்திற்கு துணை புரியுமாறு முதலீட்டாளர்கள் வந்தால், நிச்சயம் ஏற்றுக்கொள்வேன் என்றார் கோபிநாத்.

தற்போது எங்களிடம் 2000 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். பெரும்பாலும் 25 வயதிலிருந்து 40 வயதுடையோர்களிடம் நல்ல விற்பனை உள்ளது. இதுவரை பல்வேறு நிறுவனங்களுக்கென 10,000 இருந்து 15,000 டீ-ஷர்ட்கள் தயாரித்து, டெலிவரி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களைத் தொடர்பு கொண்டு, அங்குள்ள ஏஜென்சிகள் மூலமாக எங்கள் டீ-ஷர்ட்கள் விநியோகிக்கப்படுகிறது. சென்னையில் இரண்டு நாட்களுக்குள், வெளியூருக்கு நான்கு நாட்களுக்குள், வெளிநாடுகளுக்கு ஏழு நாட்களுக்குள் ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படுகிறது. சமூக வலைத்தளங்கள் வழியாக மார்க்கெட்டிங் செய்து, அவர்களைத் தொடர்பு கொள்ள முடிகிறது என்று கூறினார் கோபிநாத்.

பாரதியின் "அச்சம் தவிர்" எனும் கூற்றும், வள்ளுவரின் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்,"   

எனும் குறளும் அச்சடிக்கப்பட்ட டீ-ஷர்ட்கள் நன்கு விற்பனை ஆகின்றன. குறிப்பாக பொங்கல், தீபாவளி போன்ற தமிழ் திருநாள் காலங்களில் சிறந்த விற்பனை காணப்படுகிறது என்றார்.   

எதிர்கொள்ளும் சவால்களும்! கூட்டு முயற்சியும்!

"பேர்போன ப்ரண்ட் சட்டைகளை 1000 ரூபாய் கொடுத்து வாங்கும் மக்கள், அதே தரத்தோடு ஆடைகளைத் தயாரித்தாலும், அவற்றை விலை குறைவாக எதிர்பார்க்கிறார்கள். அதே அளவு பணத்தை இந்த டீ-ஷர்ட்களுக்குக் கொடுக்க முன்வருவதில்லை. மக்களிடையே இருக்கும் இந்த மனப்பான்மையை எதிர்கொள்வது, கடினமான ஒன்றாக உள்ளது."

சமீபத்தில் இலங்கை நாடுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளோம். அங்குள்ள மக்களிடைய ஆர்டர்களைக் கொண்டு சேர்ப்பது சற்று சிரமமாக இருக்கிறது.

ஐந்து, ஆறு மாதங்களுக்கு முன்பு, "தமிழ் டீ-ஷர்ட்ஸ்" எனும் இணையதளத்தை தொடங்கினோம். எங்களைப் போலவே தொழில் செய்யும் 'அங்கி', 'தைத்திங்கள்' ஆகிய ப்ராண்ட்கள் ஒன்று சேர்ந்து விற்பனை செய்யும் இணையதளம் இது. ஒரே நோக்கத்தோடு தனித்தனியாக செயல்படாமல், சேர்ந்து செயல்பட்டு பயன்பெறுவதே, இதன் நோக்கம். இதனால், நன்கு தொழில் வளர்ச்சி காணவும் முடிகிறது.

வெளியூர்களுக்கு செல்லும்போதும், நான் நேரில் பார்க்காத என் ஆன்லைன் வாடிக்கையாளர்கள், எங்கள் டீ-ஷர்ட்கள் அணிந்திருப்பதை எதர்ச்சியாக பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கும் என்று பூரிக்கிறார், கோபிநாத்.

image

அடுத்தகட்ட திட்டங்களும் இலக்குகளும்

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றமாதிரியான ஆடைகள் தற்போது சோதனை வடிவில் உள்ளது. நல்ல வரவேற்பு கிடைத்தால், அவற்றையும் வெளியிட்டு விடுவோம்.

சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் கடைகள் திறக்கவும் முடிவெடுத்துள்ளோம். 

* 'வில்வா கார்ட்' எனும் இணையதளம் வழியாக கிடைப்பதற்கு அரிதான தமிழ் பாரம்பரியம் சார்ந்த பொருட்களும், மூலிகைகள், மருந்துகள் விற்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் வர்ம கலைகளை, வல்லுனர்கள் கொண்டு கற்று கொடுக்கும் நிறுவனம் ஒன்று நிறுவுவதும், என் லட்சியங்களில் ஒன்றாகும்.

வெற்றிகளுக்கும் இலக்குகளுக்கும் குடும்பம் மற்றும் நண்பர்களின் துணைதான் எனக்கு உறுதுணையாக இருக்கிறது. அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள தமிழ் சங்கம், என் தொழில் விரிவடைவதில் நன்கு துணை புரிகின்றனர்.

2025-க்குள் தமிழ்நாட்டில் 40 வில்வா கடைகளையும், வெளிநாடுகளில் 30-35 வில்வா கடைகளையும் நீங்கள் எதிர்ப்பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார், கோபிநாத்.

இதுதவிர, 'ஜல்லிக்கட்டு' போன்ற நம் தமிழ் பாரம்பரிய அடையாளங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கிடையே கொண்டு சேர்க்கவும், நம்மாழ்வாரை பின்பற்றி, 'விதைவங்கி' எனும் திட்டம் மூலம் இயற்கை விதைகளை விற்போர்களையும் ஒருங்கிணைத்து விற்பனை செய்ய, நிதி திரட்டும் பணிகளையும் மேற்கொண்டுள்ளோம்.

ஊக்கமும் உலகத்திற்கு தன் கருத்தும்

'தோசா ப்ளாசா' நிறுவனத்தின் உரிமையாளரான பிரேம் கணபதி என்பவரும், இ-மெயில் கண்டுப்பிடிப்பாளர் டாக்டர் சிவா அய்யாதுரை அவர்களும் என்னை ஊக்கவிக்கும் முன்மாதிரிகள், என்றும் பகிர்ந்து கொண்டார்.

இறுதியாக தொழில்முனைவோருக்கு தான் கூற விரும்புவதாய்,

"தொழில் முனைந்திடுங்கள்! உங்களால் உலகையே ஆள முடியும்!"
"தமிழை உலகாளும், பின்பு 'தமிழே' உலகாளும்"

எனும் தனக்குப் பிடித்த வரிகளைக் கூறி விடைக்கொண்டார், கோபிநாத் ரவிராஜன்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்