‘26வது முயற்சியில் வெற்றி’ - தொழிலில் தொடர் தோல்விக்குப் பின் யூட்யூபில் வெற்றி பெற்ற நண்பர்கள்!
மென்பொருள் நிறுவனப் பணியைத் துறந்து 7 புத்தொழில் முயற்சிகளில் தோல்வியுற்றவர்கள் மதன் மற்றும் பரமேஸ்வரன். 0 முதலீட்டில் 26 ஆவதாக தொடங்கிய யூடியூப் சேனலின் கன்டென்ட் பிரபலமடைந்ததில் இ-காமெர்ஸ் மூலம் வேகமாக வளர்ந்து வருகின்றனர்.
இலக்கு ஒன்று! அதனை அடைய ஏங்கிய மனங்கள் இரண்டு! இவற்றுடன் மூன்றாவதாக சேர்ந்த முயற்சி! நான்கு கரங்களுடன் நம்பிக்கை எனும் ஐந்தாவது கரத்தையும் கொண்டு கடினமாக உழைத்ததன் பிரதிபலனாக வெற்றி எனும் வெளிச்சத்தை பார்த்திருக்கின்றனர் தமிழ் யூடியூபர்களான மதன் மற்றும் பரமேஸ்வரன்.
தொழில்முனைவராக வேண்டும் என்ற நோக்கம் முடிவிற்கு வந்துவிட்டது என்று திக்கற்று இருந்தவர்களுக்கு வெளிச்சம் தரும் விடிவெள்ளியாய் அமைந்தது ‘ஆலயம் செல்வீர்’ என்ற யூடியூப் சேனல். இருவரும் சேர்ந்து எப்படி வெற்றிப்பாதையை அமைத்தார்கள் என்று யுவர் ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
"எனக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கோவையில் பொறியியல் படித்தேன். மதன் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அவர் சிவகாசியில் பொறியியல் படித்தார். பல இடங்களில் பணிபுரிந்த பின்னர், 2000ம் ஆண்டில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் போது நாங்கள் இருவரும் அறிமுகமாகி நண்பர்களானோம்.
அதன் பிறகு, நாங்கள் இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றச் சென்றுவிட்டோம். ஆனாலும் எங்களுடைய நட்பு மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. 20 ஆண்டுகளாக பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறோம், நாங்கள் எப்போதெல்லாம் சந்தித்து பேசுகிறோமோ அப்போதெல்லாம் எதிர்காலத்தில் இருவரும் சேர்ந்து ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என பேசி வைத்திருந்தோம்," என்கிறார் பரமேஸ்வரன்.
”பன்னாட்டு நிறுவனத்தில் கை நிறைய சம்பளம், இதர சலுகைகள் இருந்தாலும் வாழ்க்கையில் நாம் என்ன சாதித்தோம் என்பது இருக்க வேண்டும். இதற்காகவே 2002ம் ஆண்டிலேயே 10 ஆண்டுகளில் பணியை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தோம்,” என்கிறார் மதன்.
புத்தொழில் முனைவராவதற்கு முன்னர் கடைசியில் நான் MTS நிறுவனத்தின் தமிழ்நாடு வர்த்தகப் பிரிவுத் தலைவராக இருந்தேன், மதன் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் ஆட்களைத் தேர்வு செய்யும் துறையின் தலைவராக இருந்தார். முதன்முதலாக நாங்கள் தொடங்கிய தொழில்முனைவு முயற்சியானது HR அடிப்படையில் நிறுவனங்களுக்கு POACHME என்ற செயலி மூலம் ஆட்களைத் தேர்வு செய்து கொடுக்கும் பணி.
எங்களின் மொத்த சேமிப்பு பணத்தையும் கொண்டு சொந்த முதலீட்டில் (bootstrap) செய்து Spize box, PHL hiring, Industrial Consumable Solutions, டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவைகள் வழங்கும் Spize Media என சுமார் 20 முதல் 25 சிறுநிறுவனங்களைத் தொடங்கினோம். இவற்றில் எல்லாம் பெரிதாக பணத்தை சேமிக்க முடியாவிட்டாலும் பெரிதாக எதையும் இந்த நிறுவனங்களில் சாதிக்கவில்லை என்கிறார் மதன்.
தொடர்ந்து பேசிய பரமேஸ்வரன், ஒவ்வொரு நிறுவனத்திலுமே ஒரு புதிய அனுபவத்தை நாங்கள் பெற்றோம், சொல்லப்போனால் Spize Media என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் தொடங்கியதன் மூலமாகத் தான் முகநூல் விளம்பரம், யூட்டியூப் போன்றவை பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொண்டோம்.
POACHME செயலியை சுமார் 30 லட்ச ரூபாய் செலவில் வடிவமைத்து நிறுவனங்களையும் பணியாளர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படும் வகையில் உருவாக்கினோம். எங்களின் சேவையைப் பெறுவதற்காக நிறுவனங்கள் வந்த அளவிற்கு பணியாளர்கள் வரவில்லை, இதற்கு மார்க்கெட்டிங் முறையில் குறைபாடு இருப்பதே காரணம் என்பதை உணர்ந்து கூகுள் விளம்பரம் உள்ளிட்ட டிஜிட்டல் விளம்பரங்கள் பற்றி அறிந்து கொள்வதற்குள் அந்த செயலியின் தொழில்நுட்பம் பழைமையாகிவிட்டதால் அது கைகொடுக்காமல் போனது.
எனினும் இதற்காக நாங்கள் கற்றுக்கொண்ட டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்தி கைகொடுக்கத் தொடங்கியது என்கிறார் மதன். நண்பர்கள் சிலர் அவர்களின் நிறுவனங்களுக்கு Social media மார்க்கெட்டிங் செய்து கொடுக்கக் கேட்டுக் கொண்டனர். அதனால் இதற்கு நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்ந்து Spize Media தொடங்கினோம். நாங்கள் சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் துறைக்குள் நுழைந்தோம். முகநூல் மற்றும் கூகுளில் எப்படி விளம்பரமாக செயல்படுத்த வேண்டும் என்று பயிற்சியாக நடத்தத் தொடங்கினோம்.
இது மட்டுமின்றி இடைப்பட்ட காலத்தில் சினி டிவி, ஜெயா டிவிக்கு ஒரு சீரியல் எடுக்கும் முயற்சி என பல விஷப்பரிட்சைகளைச் செய்திருக்கோம். கஜினி முகமது போல தொடர் தோல்விகளைக் கண்டு 26வதாக நாங்கள் துவங்கிய ‘ஆலயம் செல்வீர்’ என்ற யூடியூப் சேனலே எங்களுக்கு வெற்றிக்கான வெளிச்சத்தை காட்டியது.
”எத்தனை தோல்விகளைச் சந்தித்தாலும் அதனை வென்று நிற்கக் கூடிய திறன் எங்கள் இருவருக்குமே இருந்தது, நாங்கள் இருவருமே மார்க்கெட்டிங் துறையில் இருந்தவர்கள் என்பதால் எதுவுமே கைகொடுக்காவிட்டாலும் அந்த மாதத்தில் ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தி அதில் பெறக்கூடிய கட்டணத்தை அந்த மாதச் செலவுகளை சமாளிப்பது என்று கட்டமைத்துக் கொண்டோம்.”
எங்கள் இருவருக்குமே ஆலயங்களுக்கு பயணிப்பது பிடித்த விஷயம், என்னுடைய மகன் மற்றும் மதனின் மகள் ஏன் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டனர் இன்றைய தலைமுறையினர் கோவிலுக்குள் ஏன் செல்ல வேண்டும், கோவிலில் இருக்கும் ஆன்மீக விஷயங்கள், பழங்காலத்து உணவு, மருந்து மற்றும் இயற்கை வாழ்வியல் முறைகள் என்ன, சித்தர்களின் குறிப்புகள் என்ன என்பதை விளக்கும் விதமாகவே 2018ம் ஆண்டில் ’ஆலயம் செல்வீர்’ யூடியூப்பை தொடங்கினோம்.
பெரிய நிறுவனமாகத் தொடங்கிய அதே இடத்தில் 8 ஆண்டுகள் இறுதியில் நாங்கள் 2 பேர் மட்டுமே ஒரு சிறிய இடத்தில் அலுவலகமாக வைத்து செயல்பட்டு வந்தோம். ஹோட்டல் துறையையும் நாங்கள் விட்டுவைக்கவில்லை.
’இட்லி வடா’ என்ற உணவகத்தை வேறு ஒருவருடன் இணைந்துத் தொடங்கினோம், ஆனால் அதையும் கடைசியில் அந்த மூன்றாவது பார்ட்னரிடமே கொடுத்துவிட்டு கையில் இருந்த பணத்தை ஊழியர்களுக்கு சம்பளமாகத் தந்துவிட்டு ஜீரோ பேங்க் பேலன்சுடன் மனஅமைதிக்காக கோவில்களுக்குச் செல்லத் தொடங்கினோம்,” என்கிறார் மதன்.
கைக்கொடுத்த கோவில் ட்ரிப்
திருவண்ணாமலை ஆலயம் மற்றும் மூக்குப்பொடி சித்தர் பற்றி வீடியோ எடுத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அலுவலகத்தை இடம் மாற்ற, ஹோட்டல் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க என பணத்தேவை இருந்தது. ரூ.10லட்சம் வங்கிக்கடன் கேட்டிருந்தோம், அதுவும் கிடைக்கவில்லை. இப்போதைய சூழலில் இரண்டு பேரில் ஒருவர் வேலைக்குச் சென்றுவிட்டு மற்றொருவர் தொழிலை பார்க்கலாம், சம்பாதிப்பவர் மற்றவருக்கு நிதியுதவி செய்யலாம் என்று முடிவு செய்துவிட்டு சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம்.
செஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்த சித்தர் ஒருவரை யதேச்சையாக பார்த்தோம், அவர்கள் எங்களைப் பற்றி சில ஆருடங்களை நாங்கள் கேட்காமலே சொன்னது மிக ஆச்சரியமாக இருந்தது. அவர் சில நாட்டு மருந்துகளின் பெயர்களைச் சொல்லி அவற்றை வாங்கி வரச்சொன்னார். அந்த நேரத்தில் எங்கு கிடைக்கும் என்று நான் தயங்கிய போதும் மதன் முயற்சித்துப் பார்க்கலாம் என்று சொன்னதால் ஒரு நாட்டு மருந்துக் கடையைத் தேடிப் பிடித்துச் சென்று அவர் கூறிய பொருட்களை வாங்கி வந்து கொடுத்தோம்.
”அவற்றை பொடியாக்கிக் கொடுத்த சித்தர், இதனை தொழில் செய்யும் இடத்தில் ஒரு மண்டலத்திற்கு தூபமிடச் சொன்னார். நாங்களும் அப்படியே செய்து வந்தோம். 48வது நாள் தனியார் வங்கி ஒன்றில் இருந்து எங்களுக்கு ரூ.2.5 லட்சம் கடன் கிடைத்தது, அதே போல, முதன்முதலில் யூடியூப்பில் இருந்து முதல் வருமானமாக ரூ.12 ஆயிரம் கிடைத்தது எங்களுக்கு பிடிப்பை கொடுத்தது,” என்று மெய்சிலிர்க்கிறார் பரமேஸ்வரன்.
இந்த இடைபட்ட 48 நாட்களில் எங்களின் ‘ஆலயம் செய்வீர்’ சேனல் 1 லட்சம்+ சப்ஸ்கிரைபர்களை எட்டியதால், எங்கள் யூடியூப் சேனல் நற்பெயர் பெறத் தொடங்கியது. ”எங்களுக்கு கண்ணுக்குத் தெரிய அனுபவம் கொடுத்த சித்தரின் தூபப்பொடியை நண்பர்களுக்கும் பரிந்துரைத்தோம், அதனை எப்படி பார்வையாளர்கள் உருவாக்க வேண்டும் என்று ஒரு வீடியோவும் எங்களது சேனலில் பதிவிட்டோம். சப்ஸ்கிரைபர்களில் சிலர் அப்பொடியை தயாரித்துக் கொடுக்க வேண்டுகோள் விடுத்தனர், அவர்களிடம் முன்பணம் பெற்று பொருட்களை வாங்கி தூபப்பொடிய தயாரித்துக் கொடுத்தோம்.”
அப்போது கூட இதில் இ-வணிகம் செய்யும் வாய்ப்பு இருப்பதை நாங்கள் உணரவில்லை. பின்னர், பெங்களூரு, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட இடங்களில் இருந்து மக்கள் அவர்களுக்கு மூலப்பொருள் கிடைக்காததால் உற்பத்தி செய்து கொடுக்கும்படி கேட்டனர். இதனால் முதன்முதலில் 5 கிலோ மட்டும் வாங்கி வந்து தூபப்பொடியை தயார் செய்து அவர்களுக்கு பேக் செய்து கொடுத்தோம். இதனை நேரடியாக நெருப்பில் போட்டு பயன்படுத்த முடியாததால் கப் சாம்பிராணியாகத் தரும்படி நேயர்கள் கேட்டுக்கொண்டதால் அதனை எப்படி தயார் செய்வது என்று எங்களது தேடலைத் தொடங்கினோம்.
எங்களுடைய நேயர்களிலேயே ஒருவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அவரே கப் சாம்பிராணியாக தயாரித்துத் தர ஒப்புக்கொண்டார். மக்களுக்குக் கொடுக்கும் பொருள் எந்த கலப்படமும் இல்லாமல் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவருமே உறுதியாக இருந்தோம்.
எனவே, ரசாயன கலப்பு இல்லாமல் கப் சாம்பிராணி செய்யலாம் என்ற வழியை கண்டுபிடித்தோம், கரித்தூளை வைத்து கப்பும் அதில் தூபப்பொடி கலவையை மரவள்ளிக்கிழங்கு மாவின் மூலம் ஒன்றாக சேர்க்கலாம் என்ற முறையை அறிந்தோம்.
“எந்த இயந்திரங்களின் உதவியும் இல்லாமல் கிராமப்புற இல்லத்தரசிகள் குடிசைத் தொழிலாக இதனைச் செய்து வருகின்றனர். 2 ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் பாக்கெட் கப் சாம்பிராணிகள் விற்றுவிட்டோம், இப்படியாக எங்களின் இ-வர்த்தகப் பயணமானது தொடங்கியது,” என்றனர்.
அதன் பின்னர், aalayamselveer.com என்ற வர்த்தக இணையதளத்தைத் தொடங்கினோம். இப்போது கலப்படமில்லாத குங்குமம், கோசாலையில் இருந்து நேரடியாக உற்பத்தி செய்யப்படும் விபூதி, 25 மூலிகைகள் அடங்கிய குளியல்பொடி, பத்தமடை பாய் என்று உள்ளூரில் இருக்கும் குடிசைத்தொழில் கலைஞர்களிடம் இருந்து நேரடியாகப் பெற்று விற்பனை செய்கிறோம்.
தரமான பொருட்களை உற்பத்தி செய்பவர்களால் மக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்க்கும் வழி தெரியவில்லை. அவர்களைத் தேர்ந்தெடுத்து நாங்கள் இந்தக் கலைஞர்களையும் மக்களையும் இணைக்கும் பாலமாக இருக்கிறோம் என்கிறார் பரமேஸ்வரன்.
வளர்ச்சிப் பாதையில் ‘ஆலயம் செல்வீர்’
வியாபார நோக்கத்தில் மட்டும் பொருட்களை நாங்கள் எங்களுடைய தளத்தில் விற்கவில்லை விபூதி, குங்குமம் உள்ளிட்டவற்றை கலப்படமில்லாமல் எப்படி தூய்மையாக தயாரிப்பது என்றும் கூட நாங்கள் வீடியோக்களாக பதிவிடுகிறோம். அது மற்ற கால்நடை விவசாயிகளுக்கும், குடிசைத் தொழிலாளர்களுக்கும் உதவியாக இருக்கும்.
”தொழில் ரகசியத்தைச் சொல்லிவிட்டால் விற்பனை இருக்காது என்று பலரும் நினைக்கிறார்கள், ஆனால், எங்களுடைய பிளஸ் பாயின்டே தயாரிப்பு முறையை சொல்லிவிடுவோம், அப்படி முடியாத பட்சத்தில் எங்களிடம் வாங்கிக்கொள்ளலாம் என்பது தான். அந்த வெளிப்படைத்தன்மை பிடித்துப்போனதால் சப்ஸ்கிரைபர்களின் நன்மதிப்பைப் பெற முடிந்தது.”
ஒரு பொருளாக விற்பனையைத் தொடங்கி, இப்போது மூலிகைப் பொருட்கள், அலிகார்க், மொரதாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிரத்யேகமாக தெய்வச்சிலைகளை தேடிக் கொண்டு வந்து விற்பனைக்குக் கொடுக்கிறோம். சுமார் 150க்கும் மேற்பட்ட பொருட்கள் இப்போது ஆலயம் செல்வீர் தளத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு பொருளின் தரமும் பரிசோதனை செய்யப்பட்டு பின்னரே வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது, அதில் எந்த சமரசமும் இல்லை.
சிறிய அளவில் வீட்டில் இருந்தே செய்து வந்தோம், கொரோனா காலத்தில் அதிக அளவில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் தஞ்சாவூரில் சொந்தமான யூனிட் மற்றும் சென்னையில் இரண்டு இடங்களில் அலுவலகம் என்று வளர்ச்சிப்பாதையை எட்டியுள்ளோம் என்கிறார் மதன்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் 500 பொருட்களை இ-காமர்ஸ் விற்பனையில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த 500 பொருட்களில் குறைந்தபட்சம் 100 பொருட்களாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த கைவினைக்கலைஞர்கள் மற்றும் விவசாயிகளின் பொருட்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்காக இருக்கிறது.
பெருந்தொற்று காலத்தில் இ-வர்த்தகம் அத்தியாவசியமான நேரத்தில் நாங்களும் எங்களது இணைய வர்த்தகத்தைத் தொடங்கியதால் தொழிலில் வெற்றி பெற முடிந்தது. சொல்லப்போனால் நாங்கள் அறிமுகம் செய்த 150 பொருட்களுமே பெருந்தொற்று காலத்தில் தான் அதிக வாடிக்கையார்களைப் பெற்றுத் தந்தது.
வீட்டில் இருந்து விற்பனையைத் தொடங்கினோம் ஓராண்டுக்கு முன்னர் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களிலும் எங்களின் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் நல்ல ரேட்டிங் கிடைக்கிறது.
ஆலயம் செல்வீர் சேனலிலும் கவனம் செலுத்துகிறோம். இப்போது சுமார் 12.6 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
வெற்றியின் ரகசியம் கண்டது எப்படி?
எங்களின் வெற்றிக்கான மந்திரமாக நாங்கள் கருதுவது Content, Community, Commerce என்ற 3'C' கள் தான் காரணம் என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில் மற்றவர்கள் செய்யும் தவறு முதலில் காமர்ஸ் கட்டமைத்துவிட்டு அதற்கான கம்யூனிட்டி உருவாக்கி அதன் பின்னரே கன்டென்ட் எழுதுவார்கள். இதில் இருந்து சற்றே வேறுபட்டதால் எங்களின் 3சி மாடல் வெற்றியைத் தந்திருப்பதாகக் கருதுகிறோம்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் பலருக்கும் இருக்கும் ஒரே கனவு எப்படியாவது தனித்தன்மையாக எதையாவது செய்து ஒரு தொழில்முனைவராக வேண்டும் என்பதாக இருக்கும். இதில் நாம் கண்முன்னே பார்க்கும் விஷயம் என்னவென்றால் ஒரு வேகத்தில் புத்தொழிலுக்கு வருபவர்கள் எவ்வளவு திறமை இருந்தாலும் குறைந்தது 2 வருடம் வரை முயற்சித்து விட்டு சிறிது சறுக்கல் வந்த உடனேயே பன்னாட்டு நிறுவனப் பணிக்கே திரும்பி விடுகின்றனர். தொடர் முயற்சி செய்யாமல் பாதியிலேயே கைவிட்டுவிடுகின்றனர்.
”தொழில்முனைவு வெற்றிக்கு 2 ஆண்டுகள் போதுமான காலமல்ல, உங்களை முழுமனதோடு அர்ப்பணித்து குறைந்தது 6 ஆண்டுகளாவது கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் செய்தால் வெற்றி பெறலாம். இன்னொரு விஷயம் ஆடம்பரத்தை தவிர்த்து சூழ்நிலை மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்,” என்கிறார் பரமேஸ்வரன்.
ஜீரோவில் தொடங்கி 26வதாகத் தொடங்கிய ஆலயம் செல்வீர் கைகொடுத்ததால் இப்போது எங்களது குழுவானது 10 பேராக விரிவாக்கம் அடைந்துள்ளது. இது மட்டுமின்றி வீட்டில் இருந்தே சில மணி நேரங்கள் மட்டும் பணியாற்றக் கூடிய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு பொருளாதார உதவி செய்யும் விதத்தில் விளம்பரங்களைக் கையாளும் பணியை கொடுத்திருக்கிறோம்.
நாங்கள் வளர்ந்ததோடு எங்களைப் போன்று ஜெயிக்க வேண்டும் என்று கஷ்டப்படுகிறவர்களுக்கும் உதவுகிறோம் என்ற திருப்தி இதில் கிடைக்கிறது. வாசகர்கள் விரும்பும் பொருட்கள் சென்னை மற்றும் தஞ்சாவூரில் இருக்கும் யூனிட்டுகளில் இருந்து அனுப்பப்படுகிறது, இவை அனைத்தும் தானியங்கி முறையில் அமைத்திருக்கிறோம்.
புத்தொழிலில் ஜெயிப்பது என்பதே ஒரு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும் சவால் என்ற நிலையில் குடும்பத்தின் ஒத்துழைப்பும், அவர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையாலுமே நிலைத்திருக்கக் கூடிய நிதானமான வெற்றியை அடைய முடிந்திருக்கிறது.
“ஆலயம் செல்வீர் சேனலின் சப்ஸ்கிரைபர்களை 1 கோடியாக அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து கன்டென்ட் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். ஏனெனில் சேனலில் கன்டென்ட் இருந்தால் மட்டுமே கம்யூனிட்டியை கட்டமைக்கலாம் அதன் மூலம் காமெர்ஸ் வளர்ச்சியடையும், கோவிட்க்கு பின்னர் உலகம் முழுவதும் வெற்றி பெறும் மாடல் இதுவே, அது எங்களுக்கு இயற்கையாகவே அமைந்து விட்டது,” என்கின்றனர்.
செலிப்ரிட்டிகள் கிடையாது, ஆடம்பர கேமராக்கள், எடிட்டிங்கிற்கு தனி ஸ்டுடியோ என்று எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. சித்தர்களின் நூல்களைப் படித்து அவற்றில் தாங்கள் உள்வாங்கிய மற்றும் ஆராய்ந்த விளக்கங்களை வைத்து வீடியோக்களை கன்டென்ட்டுகளாகப் போட்டு வருகின்றனர் இவர்கள்.
ஒரு வீடியோவிற்கான ஆராய்ச்சிகளை செய்துவிட்டு கையில் இருக்கும் போனில் பரமேஸ்வரன் வாய்ஸ் பதிவு செய்து அனுப்ப அதனை தன்னுடைய போனிலேயே எடிட் செய்து பதிவேற்றுகிறார் மதன்.
வெற்றி எனும் வேட்கை உனக்குள் இருந்தால் தோல்வி எனும் தடைகள் கண்ணுக்குத் தெரியாது என்பதை நிரூபித்துள்ளனர் மதன் மற்றும் பரமேஸ்வரன்.