உயிர்களைக் காவு வாங்கிய 'ஆன்லைன் ரம்மி' - 'தடா' போட்ட தமிழக அரசு!

- +0
- +0
ஆன்லைன் சூதாட்டம் மூலம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அவல சூழ்நிலை ஏற்பட்டது. பல இளைஞர்கள் பணத்தை இழப்பதோடு, உயிர்களை மாய்த்துக் கொண்டதால் உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு இன்று தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுகிறது. மீறி விளையாடினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6 மாதம் தண்டனையும் விதிக்கப்படும். ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். ஆன்லைன் மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனை தடுக்கப்படும். பணம் வைத்து விளையாடுபவர்கள், கணிணி, உபகரணங்கள் தடை செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது.
பணமிருப்பவர்களை விட அன்றாட வாழ்க்கைக்கு பாடுபடும் நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த பலர் இந்த ஆன்லைன் ரம்மியால் சீரழிந்தனர். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்திற்காக ஆன்லைன் ரம்மியில் பணத்தை போட்டு ஏமாந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
கடந்த மார்ச் மாதம் விழுப்புரத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் பணிமுடிந்து வீட்டிற்குத் திரும்பும் வழியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வை தொடர்ந்து பலரும் இதனால் தற்கொலை செய்துகொண்டனர். இந்தநிலையில் இந்த தடை தற்போது அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இணைய மோசடி
- தற்கொலை
- Smartphone Games
- online game addict
- ஆன்லைன் கேம்ஸ்
- ஆன்லைன் ரம்மி
- சூதாட்டம்
- Online rummy games
- Rummy Games
- Rummy deaths
- +0
- +0