பதிப்புகளில்
ஸ்டார்ட்-அப் நாயகர்கள்

தமிழகத்தின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து உருவாகி சிறப்பாகச் செயல்படும் ஸ்டார்ட் அப்’கள்!

YS TEAM TAMIL
15th Apr 2019
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

22 ஆண்டுகள் பழமையான பாரத்மேட்ரிமோனி தளம், ஸ்டார்ட் அப் யூனிகார்ன் ஃப்ரெஷ்வொர்க்ஸ் என சிங்காரச் சென்னையில் பல்வேறு முக்கிய தொழில் முனைவர்கள் செயல்படுகின்றனர்.

ஆனால் தொழில்முனைவு என்பது சென்னைக்கானது மட்டுமல்ல. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்தும் பல சுவாரஸ்யமான ஸ்டார்ட் அப்கள் உருவாகி வருகின்றன. மெட்ரோ நகரங்கள் போன்று இவர்கள் ஊடகங்களில் பிரபலமாக பேசப்படாவிட்டலும் இவர்களும் கவனிக்கத்தக்க விதத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் அத்தகைய ஸ்டார்ட் அப்கள் சிலவற்றை யுவர்ஸ்டோரி இங்கே வழங்குகிறது.

1. ஃபார்ம் அகெயின் (Farm Again)

ஃபார்ம் அகெயின் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொழில்நுட்பத்தையும் பாரம்பரிய விவசாய முறைகளையும் ஒன்றிணைத்து முழுமையான தீர்வளிக்கிறது.

நிறுவனர்களான பென் ராஜா, ராஜ் கான்சம் இருவரும் தங்களது கார்ப்பரேட் பணியை விட்டு விலகி விவசாயம் சார்ந்த பாரம்பரிய சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த ‘ஃபார்ம் அகெயின்’ அறிமுகப்படுத்துவதற்காக பென்னின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு மாற்றலாகினர். பென் யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில் குறிப்பிடும்போது,

”விவசாயிகளுக்கு சரியான தகவல்கள் சென்றடைவதில்லை. வர்த்தகர்கள் அவர்களிடம் ரசாயனங்களை விற்பனை செய்கின்றனர். அவர்களுக்கு விவசாய கண்காட்சிகள் மூலமும் வர்த்தகர்கள் வாயிலாகவும் மட்டுமே தகவல்கள் கிடைக்கிறது,” என்றார்.

ஒவ்வொரு ஃபார்ம் அகெயின் நிலத்திலும் ஐஓடி சாதனம் ஒன்று ஈரப்பதம் குறித்தும் மண் வளம் குறித்தும் தகவல்களை வழங்குகிறது. தண்ணீர் மற்றும் உர உள்ளீடுகளை கட்டுப்படுத்தும் பைப்களின் நெட்வொர்க்கை ஒழுங்குப்படுத்துகிறது.

இந்நிறுவனர்கள் 2,500 ஏக்கர் நிலப்பரப்பை ஆர்கானிக் பண்ணையாக மாற்றியுள்ளனர். அதே போல் பொருட்கள் எந்த நிலத்தில் விளைந்தவை என்பதைத் தெரிந்துகொள்வதற்கான வழிமுறைகளையும் உருவாக்கியுள்ளனர். இந்த ஸ்டார்ட் அப் 1,000 விவசாயிகளை இணைத்துக்கொண்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் உள்ள முன்னணி சில்லறை வர்த்தகர்களுடனும் இணைந்துள்ளது.

2. Hoopoe on a Hill

பழனி மலை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆதிவாசி சமூகத்தினரிடமிருந்து அதிகப்படியான தேன் வாங்கப்பட்டதால் நிஷிதா வசந்த், ப்ரியாஸ்ரீ மணி இருவரும் 2015ம் ஆண்டு கொடைக்கானலைச் சேர்ந்த Hoopoe on a Hill என்கிற ஸ்டார்ட் அப்பைத் துவங்கினார்கள். இந்த ஸ்டார்ட் அப் ஆர்கானிக் தேனை பதப்படுத்தி, பேக் செய்து விற்பனை செய்கிறது. அத்துடன் ஆர்கானிக் தேன் தொடர்புடைய பொருட்களையும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விற்பனை செய்கிறது.  

பருவநிலை, பூக்கள், தேன் உற்பத்தி செய்யும் தேனீயின் வகை ஆகியவற்றைப் பொறுத்து தேன் வழங்கப்படுகிறது. இவை கண்ணாடி பாட்டில்களில் பேக் செய்யப்படுவதற்கு முன்பு நன்கு வடிகட்டப்படுகிறது.

இந்நிறுவனம் ஆஃப்லைனில் சில்லறை வர்த்தகத்தில் துவங்கப்பட்டாலும் சில மாதங்களிலேயே ஆன்லைன் சில்லறை வர்த்தகத்திற்கு விரிவடைந்தது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு தேன்மெழுகு ராப்பர்களை அறிமுகப்படுத்தினர். இந்த ராப்பர்கள் மறுபயன்பாட்டிற்கு உகந்தது. அத்துடன் மக்கக்கூடியது.

காலி பாட்டில்கள், பேக்கேஜ் செய்யத் தேவையான பொருட்கள் போன்றவற்றை பெங்களூருவில் உள்ள விற்பனையாளர்களிடம் இக்குழுவினர் வாங்குகின்றனர். Hoopoe on a Hill தற்போது இந்தியா போஸ்ட் பார்சல் சேவையுடன் இணைந்து கொடைக்கானலில் இருந்து இந்தியா முழுவதும் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இவர்களைப் பற்றி: கொடைக்கானலின் இயற்கை தேன் உங்கள் வீட்டு வாசலில்: இரு தோழிகள் தொடங்கிய தேன் விற்பனை ஸ்டார்ட்-அப்

3. பட்டீஸ் கஃபே (Buddies Cafe)

கார்ப்பரேட் நிர்வாகி நிர்மல் ராஜ் தேநீர் பிரிவில் புதுமையை புகுத்தும் நோக்கத்தோடு 2012-ம் ஆண்டு கோயமுத்தூரில் பட்டீஸ் கஃபே அறிமுகப்படுத்தினார். வொயிட், க்ரீன், ஐஸ் டீ, பழம் மற்றும் மூலிகை சார்ந்த தேநீர் என 70-க்கும் மேற்பட்ட தேநீர் வகைகளை வழங்குகிறது.

வணிகத்தை அமைத்து வளர்ச்சியடைந்ததில் சந்தித்த சவால்கள் குறித்து நிர்மல் யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்துகொண்டபோது, “நாங்கள் அதிக நம்பிக்கையுடன் பட்டீஸ் கஃபே துவங்கினோம். ஆனால் எங்களது ஆரம்பகால திட்டத்தின்படி எதுவும் நடக்கவில்லை. முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பதால் பல தவறுகள் செய்தோம். எங்களது கணக்கீடுகளின்படி வருவாய் இருக்கவில்லை. லாபகரமாக செயல்பட பல ஆண்டுகள் ஆனது,” என்றார்.

பட்டீஸ் கஃபே எக்ஸ்பிரஸ் விநியோக அவுட்லெட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிர்மலுக்கு சொந்தமான Danjo Teas என்கிற பிராண்டும் உண்டு. இது பட்டீஸ் கஃபேயில் மட்டும் கிடைக்கிறது. 2018-ம் ஆண்டு இந்நிறுவனம் நாள் ஒன்றிற்கு 12,000 ரூபாய் ஈட்டியதாக தெரிவித்தது. தற்போது கஃபே பொறுப்பாளர், தேநீர் தயாரிப்பவர்கள், சுத்தம் செய்யும் பணியாளர்கள் என 10 பேர் அடங்கிய குழுவாக செயல்படுகின்றனர்.

இவரைப்பற்றி விரிவாக படிக்க: தென்னிந்தியாவில் 60 வகை தேநீர் வழங்கும் முதல் டீ கஃபே: நிறுவனர் நிர்மல் ராஜின் சுவைமிகு கதை!

4. யங் ட்ரெண்ட்ஸ் (Young Trendz)

சென்னை என்ஐஎஃப்டி கல்வி நிறுவனத்தில் படித்த பிஹாரைச் சேர்ந்த ப்ரவீன் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்துஜா இருவரும் மாணவர்களாக இருந்தபோதே தொழில்முனைவு முயற்சியைத் துவங்கினர்.

2015-ம் ஆண்டு பத்து லட்ச ரூபாய் முதலீட்டுடன் 18-28 வயது வரையிலுள்ள இளைஞர்களை இலக்காகக் கொண்டு ’யங் ட்ரெண்ட்ஸ்’ என்கிற ஆடை பிராண்டை துவங்கினார்கள். இவர்களது தயாரிப்புகள் இளைஞர்களைக் கவரும் வகையில் அவர்களுக்கேற்றவாறு வேடிக்கையான க்ராஃபிக்ஸ்களைக் கொண்டுள்ளது.

தயாரிப்பை உருவாக்கி தடையற்ற வகையில் சந்தைப்படுத்த விரைவிலேயே இந்தியாவின் பின்னலாடை மற்றும் உற்பத்தி மையமான திருப்பூருக்கு மாற்றலாயினர். இந்த முயற்சி துவங்கப்பட்ட இரண்டாண்டுகளில் இருவரும் 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டினர். இன்று ஃப்ளிப்கார்ட், அமேசான், வூனிக், பேடிஎம் போன்ற ஆன்லைன் தளங்கள் வாயிலாகவும் சொந்த மின் வணிக வலைதளம் வாயிலாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

30 பேர் அடங்கிய குழுவாக செயல்படும் யங் ட்ரெண்ட்ஸ் கிடங்கு தெலுங்கானா, கர்னாடகா, ஹரியானா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் உள்ளது.

இவர்களைப் பற்றி: 2 ஆண்டுகளில் டி-ஷர்ட் விற்பனையில் 20 கோடி ரூபாய் ஈட்டிய சென்னை NIFT-ல் படித்த இளைஞர்கள்!

5. ஹேப்பி ஹென்ஸ் (Happy Hens)

இந்தியாவில் கிட்டத்தட்ட 80 சதவீத முட்டைகள் கூண்டிற்குள் வளர்க்கப்படும் கோழிகளிடம் இருந்து வந்தவை. ஆனால் மகிழ்ச்சியான கோழிகளில் இருந்து மட்டுமே ஆரோக்கியமான முட்டைகள் கிடைக்கும் என நம்புகிறது மதுரையைச் சேர்ந்த கோழிப்பண்ணை ஸ்டார்ட் அப்பான ’ஹேப்பி ஹென்ஸ்’.

2012-ம் ஆண்டு அசோக் கண்ணன், மஞ்சுநாத் மாரப்பன் ஆகியோரால் நிறுவப்பட்ட ’ஹேப்பி ஹென்ஸ்’ பறவைகள் சுதந்திரமாக வலம் வரவும் முட்டை போடவும் தேவையான இடவசதியை வழங்குகிறது. தானியங்கள், மூலிகைகள் நிறைந்த உணவு வழங்கப்படுகிறது.

நாட்டில் இத்தகைய வெளிப்புறச் சூழலில் உருவாகும் முட்டையை வழங்கும் முதல் பிராண்ட் ஹேப்பி ஹென்ஸ் மட்டுமே என்று இந்நிறுவனம் தெரிவிக்கிறது. இன்று இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் 5,000 முட்டைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்நிறுவனத்தின் 20 ஃப்ரான்சைஸி விவசாயிகள் உள்ளனர். ஹேப்பி ஹென்ஸ் பற்றி விரிவாக: தொடர் தோல்வியை தாண்டி, லட்சங்களில் நாட்டுக்கோழி முட்டை உற்பத்தி: இந்தியா முழுதும் விற்பனை செய்யும் ‘ஹேப்பி ஹென்ஸ்’

ஆங்கில கட்டுரையாளர் : அபூர்வா பி | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக