24 கிரையோஜெனிக் கொள்கலன்களை இறக்குமதி செய்யும் டாடா குழுமம்: பாராட்டிய பிரதமர் மோடி!

இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை குறைக்க டாடா குழுமம் உதவி!
29 CLAPS
0

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் இந்தியாவில் நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தணிக்க திரவ ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்காக கிரையோஜெனிக் கொள்கலன்களை இறக்குமதி செய்வதாக டாடா குழுமம் செவ்வாயன்று ட்விட்டரில் அறிவித்துள்ளது. இது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலைக்கு இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடுமையான படுக்கைகள் பற்றாக்குறையும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இதுதொடர்பான தகவல்கள், செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதனை அடுத்து தான், டாடா குழுமம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

இது தொடர்பாக, நேற்று இரவு ட்வீட் செய்த டாடா குழுமம்,

"இந்திய மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள் பாராட்டத்தக்கது, டாடா குழுமத்தில் நாங்கள் COVID-19க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த முடிந்தவரை செய்ய கடமைப்பட்டுள்ளோம். இங்குள்ள ஆக்ஸிஜன் நெருக்கடியைத் தணிப்பது சுகாதார உள்கட்டமைப்பை உயர்த்துவதற்கான ஒரு முயற்சியாகும்."

"டாடா குழுமம் திரவ ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்காக 24 கிரையோஜெனிக் கொள்கலன்களை இறக்குமதி செய்கிறது. இது நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை குறைக்க உதவும்," என்று கூறியிருந்தது. இதேபோல் மற்றொரு பதிவில்,

"விமானங்கள் மூலம் கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்படும். ஆக்ஸிஜன் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை ஆதரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்," என்றும் குறிப்பிட்டு இருந்தது.

ஏற்கனவே, இந்த வார தொடக்கத்தில், டாடா குழுமத்தின் ஒரு பிரிவான டாடா ஸ்டீல் "200-300 டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கு வழங்குகிறோம். நாங்கள் ஒன்றாக இந்த போரில் இருக்கிறோம், நிச்சயமாக அதை வெல்வோம்!" என்று பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று ஒரு முயற்சியில், முகேஷ் அம்பானி ஈடுபட்டு இருக்கிறார். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒரு நாளைக்கு 700 டன் மருத்துவ தர ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, டாடா குழுமத்தின் இந்த உதவி பாராட்டுகளை பெற்றுவரும் நிலையில், பிரதமர் மோடி டாடா குழுமத்தை பாராட்டி இருக்கிறார். டுவிட்டரில்,

“டாடா குழுமத்தின் இரக்க சைகை இது. இந்திய மக்கள் கோவிட் -19 -க்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

Latest

Updates from around the world