ஒரு அவுட்லெட்டில் தொடங்கி, இன்று 200 கடைகள்; ரூ.100 கோடி அளவு விற்பனை செய்யும் டீ வணிகம்!

தொழில்முனைவில் ஆர்வம் கொண்ட அனுபவ் துபே, ஆனந்த் நாயக் இருவரும் தொடங்கிய Chai Sutta Bar இன்று 200 அவுட்லெட்களுடன் விரிவடைந்து இஞ்சி டீ, சாக்லேட் டீ, மசாலா டீ என ஏராளமான சுவைகளில் வாடிக்கையாளர்களுக்கு மண் குடுவையில் விற்பனை செய்து வருகிறது.
2 CLAPS
0

சிஏ, எம்பிஏ, யுபிஎஸ்சி, மருத்துவம், பொறியியல் இதுபோன்ற பிரிவுகளில் ஒன்றை தங்கள் குழந்தைகள் தேர்வு செய்யவேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். அனுபவ் துபே, ஆனந்த் நாயக் இவர்கள் இருவரின் பெற்றோரும் இப்படித்தான் நினைத்தார்கள்.

எல்லோர் விருப்பம் ஒன்று போல் இருப்பதில்லையே. இவர்களுக்கு தொழில்முனைவிலேயே அதிக ஈடுபாடு இருந்தது. இவர்கள் போட்டித் தேர்வுகள் எழுதி முயற்சி செய்யாமல் இல்லை. ஆனால், தேர்ச்சி பெறவில்லை. சிறிதும் வருத்தமின்றி தொழில்முனைவுக் கனவை நிறைவேற்றிக்கொள்ள இருவரும் முடிவெடுத்தார்கள்.

“எந்தத் தொழிலைத் தேர்வு செய்யலாம் என்று யோசித்தோம். 50 லிட்டர் பெட்ரோல் போட்டுக்கொள்வோம். சாலைகளில் சுற்றி வருவோம். கண்ணெதிரே தெரியும் வாய்ப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த சமயத்தில், டீ குடிக்கும் மக்கள் அதிகமிருப்பதால் இதற்கான தேவை எல்லா இடங்களில் இருப்பது புரிந்தது,” என்கிறார் அனுபவ்.

தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்கள் டீயைத்தான் அதிகம் குடிக்கிறார்கள். டீ உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாக IBEF அறிக்கை தெரிவிக்கிறது.

அதிக வாய்ப்பு இருப்பதை உணர்ந்த இவர்கள் இருவரும் 2016ம் ஆண்டு இந்தூரில் டீ-கஃபே தொடங்க முடிவு செய்தார்கள். 30 லட்ச ரூபாய் முதலீடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

வித்தியாசமான பெயர் வைக்க விரும்பிய இவர்கள் Chai Sutta Bar எனப் பெயரிட்டனர்.

மக்களை ஈர்க்க பல வகையான விளம்பர உத்திகளைப் பயன்படுத்தியதாக அனுபவ் நினைவுகூர்ந்தார்.

“முதல் அவுட்லெட்டை பெண்களுக்கான ஹாஸ்டலுக்கு வெளியில் அமைத்தோம். பெண்களை ஈர்த்துவிட்டால் போதும், ஆண்களைக் கவர்வது கடினமாக இருக்காது. அவர்கள் தாங்களாகவே வந்துவிடுவார்கள் என்று யோசித்தோம்,” என்றார்.

ஆனந்த், அனுபவ் இருவரும் மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று Chai Sutta Bar பற்றிப் பேசினார்கள்.

“எங்களுக்கு நண்பர்கள் அதிகம். அவர்களை வந்து அவுட்லெட்டில் உட்காரச் சொல்வோம். பார்ப்பவர்களுக்கு நிறைய கூட்டம் இருப்பது போன்ற உணர்வையும் தொழில் சிறப்பாக நடக்கும் உணர்வையும் ஏற்படுத்தினோம்,” என்கிறார்.

2016ம் ஆண்டு இப்படி ஒரே ஒரு அவுட்லெட்டுடன் தொடங்கப்பட்ட இவர்களது பயணம் இன்று இந்தியாவின் 100 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட அவுட்லெட்களுடன் விரிவடைந்துள்ளது. இதில், 5 அவுட்லெட்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது. மற்ற 195 அவுட்லெட்கள் ஃப்ரான்சைஸ் மாதிரியில் செயல்படுகின்றன.

தனித்துவமான அம்சங்கள்

விலையும் சேவையளிக்கப்படும் விதமும் மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டும் முக்கிய அம்சம் என்கிறார் அனுபவ்.

”எங்கள் பிராண்ட் எல்லோருக்கானது. Chaayos, Chai Point போன்ற பிரபல பிராண்டுகள் போலல்லாமல் Chai Sutta Bar டீ 10 ரூபாய் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. மற்ற பிராண்டுகளின் ஆரம்ப விலை 100 அல்லது 120 ரூபாய். இது எல்லோராலும் செலவு செய்யக்கூடிய தொகை இல்லை,” என்கிறார்.

Chai Sutta Bar அவுட்லெட்களில் வாடிக்கையாளர்களுக்கு மண் குடுவையில் டீ கொடுக்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் மண் பாண்டங்கள் செய்யும் சுமார் 500 குடும்பங்களிடமிருந்து தினமும் 3 லட்சம் குடுவைகள் வாங்குகின்றன.

எளிமையாக ஒரே ஒரு டீ வகையுடன் தொடங்கப்பட்ட இந்தத் தொழில் முயற்சி இன்று இஞ்சி டீ, சாக்லேட் டீ, மசாலா டீ, ஏலக்காய் டீ, துளசி டீ, குங்குமப்பூ டீ என பல்வேறு சுவைகளை மெனுவில் இணைத்துக்கொண்டுள்ளது.

இவை தவிர சாண்ட்விச், பாஸ்தா, நூடுல்ஸ், பர்கர் போன்ற உணவுப்பொருட்களையும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

அனைத்து அவுட்லெட்களையும் சேர்த்து ஒட்டுமொத்த விற்பனை அளவு 100 கோடி ரூபாய் என்கிறார் அனுபவ்.

வெளிநாடுகளைச் சென்றடைந்த இந்திய பிராண்ட்

Chai Sutta Bar இந்திய சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு செயல்பட்டு வரும் நிலையில் முதல் வெளிநாட்டு அவுட்லெட் துபாயில் திறக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் துபாய் அவுட்லெட் தொடங்கப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைகின்றன.

மத்திய கிழக்கு சந்தையில் செயல்படத் தீர்மானித்த இவர்கள் முதலில் துபாயிலும் அதைத் தொடர்நது ஓமன் நாட்டிலும் செயல்பட திட்டமிட்டனர்.

“இந்தியர்கள், பங்களாதேசிகள், பாகிஸ்தானியர்கள் போன்றோர் எங்கள் டீயை விரும்பிக் குடிக்கிறார்கள்,” என்கின்றனர்.

இந்திய சந்தையிலும் அந்நிய சந்தையிலும் மேலும் விரிவடைய திட்டமிட்ட சமயத்தில் பெருந்தொற்று பரவல் தொடங்கியதால் இத்திட்டம் தடைபட்டது.

பெருந்தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப மாதங்களில், விவரிக்க இயலாத அளவிற்கு சிக்கல்களை சந்தித்ததாக அனுபவ் தெரிவிக்கிறார். அவுட்லெட்கள் மூடப்பட்டபோதும் வாடகை, சம்பளம் போன்ற செலவுகளை சமாளிக்கவேண்டியிருந்ததால் 2021-ம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டில் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறார்.

இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு நிறுவனத்தைப் பற்றிய உள்ளடக்கம் உருவாக்கப்பட்டது. Chai Sutta Bar யூட்யூப் சேனல் தொடங்கப்பட்டு 26,000 சப்ஸ்கிரைபர்கள் இணைந்தனர். டீ தயாரிக்கும் கலை, நிறுவனத்தின் பயணம் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த சேனலில் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

வரும் நாட்களில் இந்திய செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் அதேசமயம் அமெரிக்கா, யூகே, கனடா போன்ற நாடுகளில் விரிவடையவும் திட்டமிடப்பட்டிருப்பதாக அனுபவ் தெரிவிக்கிறார்.

“போட்டி முக்கியம். அப்போதுதான் நாங்கள் தொடர்ந்து எங்களை மேம்படுத்திக்கொண்டு மென்மேலும் சிறப்பாக செயல்படமுடியும்,” என்று சந்தையில் நிலவும் போட்டிகளை நேர்மறையான அணுகுமுறையுடன் எதிர்கொள்கிறார் அனுபவ்.

ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா