‘இந்திய தொழில்நுட்பத் தீர்வுகளை பயன்படுத்தும் நேரமிது’ - பிரதமர் மோடி பெருமிதம்!

By YS TEAM TAMIL|19th Nov 2020
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கர்நாடகாவின் முதன்மை வருடாந்திர தொழில்நுட்ப நிகழ்வான பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.19) வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.


மாநாட்டில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பங்கேற்றார். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பெருமிதம் கொண்டார். அவர்,

"இந்திய அரசு தொழில்நுட்பத்தை அனைத்து திட்டங்களிலும் ஒரு முக்கியப் பகுதியாக ஆக்கியுள்ளது. எங்கள் திட்டங்கள் கோப்புகளைத் தாண்டி, இந்தியர்களின் வாழ்க்கையிலும் பாதித்திருப்பதற்கு தொழில்நுட்பமே பிரதான காரணம். COVID-19 வைரஸுக்கு எதிராக ஒரு குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி போட முடியும் என்ற நம்பிக்கையையும் இது தருகிறது.”

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் தொடங்கிய டிஜிட்டல் இந்தியா, வெறும் ஒரு அரசாங்க முன்முயற்சியாக இல்லாமல் அது இந்தியர்களின் வாழ்க்கை முறை ஆகியுள்ளது.


வளர்ச்சிக்கு மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை தேசம் அனுபவிக்க இது அனுமதித்துள்ளது. மத்திய அரசு வெற்றிகரமாக டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளுக்கான சந்தையை உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் மனித கவுரவத்தை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் இந்திய விவசாயிகள் ஒரே கிளிக்கில் பண ஆதரவைப் பெற்றனர். கொரோனா ஊரடங்கின் போது பல்லாயிரக்கணக்கான ஏழைகளுக்கு விரைவான மற்றும் தேவையான உதவி கிடைப்பதை தொழில்நுட்பம் உறுதிசெய்தது.


லாக்டவுனின் போது வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் எங்கிருந்தும் வேலை செய்வதற்கும் தீர்வுகள் தொழில்நுட்பத்தால் ஏற்படுத்தப்பட்டது. நெருக்கடியின் போது மக்களை ஒன்றிணைக்க தொழில்நுட்பம் உதவியது.


தகவல் சகாப்தத்தில் இந்தியா தனித்துவ முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது நாம் தகவல் சகாப்தத்தின் நடுவில் இருக்கிறோம். இன்னும் இதில் மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. இந்தியா இப்போது தகவல் சகாப்தத்தில் முன்னேற தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகள் உலகிற்கு பயன்படுத்தப்பட வேண்டிய நேரம் இது.


நம்மிடம் சிறந்த சிந்தனை மற்றும் மிகப்பெரிய சந்தை உள்ளது. நமது தொழில்நுட்ப தீர்வுகள் உலகளவில் செல்லக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது.

“தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் என்பதே எங்கள் அரசின் நிர்வாக மாதிரியாகும்," என்று பேசினார்.

பிரதமர் மோடியுடன் 25க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் சிந்தனைத் தலைவர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல் : யுவர்ஸ்டோரி