Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

சாகச விரும்பிகளுக்கு கேம்ப் பயண அனுபவத்தை அளிக்கும் நிறுவனம்!

5 நண்பர்கள் நிறுவிய மும்பையைச் சேர்ந்த Moonstone Hammock தனித்துவமான சாகசப் பயண அனுபவத்தை வழங்குகிறது.

சாகச விரும்பிகளுக்கு கேம்ப் பயண அனுபவத்தை அளிக்கும் நிறுவனம்!

Tuesday October 29, 2019 , 4 min Read

இன்றைய நவீன தலைமுறையினர் கார்கள் அதிகம் வாங்காமல் இருக்கலாம். வீடு வாங்குவதற்கு பதிலாக வாடகை வீட்டில் இருக்க விரும்பலாம். ஆனால் வார இறுதியை செலவிடுவதில் மிகவும் கவனமாகவே இருக்கின்றனர். குறிப்பாக 30 வயதிற்கும் குறைவானவர்களிடையே ட்ரெக்கிங், கேம்ப் என சுற்றுலா சென்று கூடாரம் அமைத்து தங்குவது பிரபலமாகி வருகிறது.


காட்டுப்பகுதிகளில் ஆடம்பரமான வகையில் கூடாரம் அமைத்து தங்குவதில் இன்றைய தலைமுறையினர் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். கல்லூரி நண்பர்கள் ஐந்து பேர் ஒன்றிணைந்து Moonstone Hammock என்கிற ஸ்டார்ட் அப்பை நடத்துகின்றனர். இங்கு பயணம் மேற்கொள்வோரின் பிரத்யேக தேவைக்கேற்ப முகாம்கள் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. சாகசப்பிரியர்கள் அதிகம் அறியப்படாத பசுமையான இடங்களை ரசிக்க இந்த ஸ்டார்ட் அப் உதவுகிறது.

1

இந்திய சந்தையில் இது ஆரம்பநிலையில் இருப்பினும் 2018ம் ஆண்டில் அமெரிக்காவில் 70 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் ஒருமுறையாவது முகாமிட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் கட்டுரையில் 2019 வட அமெரிக்க கேம்பிங் அறிக்கையை சுட்டிக்காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போக்கு இந்தியாவில் உள்ள நவீன தலைமுறையினரை வெகுவாக ஈர்த்துள்ளது. இவர்கள் திட்டமிடப்பட்ட சுற்றுலாக்களுக்கு பதிலாக ஆடம்பரமான கூடாங்களில் தங்குவது, சாகசப் பயணங்கள் போன்றவற்றையே விரும்புகின்றனர்.


இன்றைய நவீன தலைமுறையினரின் பயண விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுகிறது மும்பையைச் சேர்ந்த Moonstone Hammock. இந்த ஸ்டார்ட் அப் மாறிவரும் இவர்களது பயண விருப்பத்தைக் கண்டு உந்துதல் பெற்று கர்நாடகாவின் ஹம்பி மற்றும் கோகர்னா, உத்தரகாண்ட் பகுதியில் ரிஷிகேஷ், மஹாராஷ்டிரா பகுதியின் கர்ஜத் ஆகிய நான்கு இடங்களில் கூடாரம் அமைத்து புதுமையான அனுபவங்களை தொகுத்து வழங்குகிறது.


முகாமிடுதல் என்பது ஏற்கெனவே பல காலமாக பழக்கத்தில் இருந்து வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் இந்த எளிமையான வெளிப்புற நடவடிக்கைகள் மிகப்பெரிய துறையாக வளர்ச்சியடைந்துள்ளது, என்கிறது இந்த ஐவர் குழு.

”முகாம் அமைக்கும் இடத்தில் பயணிகளுக்குக் கிடைக்கும் அனுபவமே எங்களது தனித்துவமான அம்சமாகும். வார இறுதியில் செல்லும் வழக்கமான பயணம் போலல்லாமல் ஒட்டுமொத்த பயண ஏற்பாடும் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும். இதுவே எங்களது போட்டியாளர்களிடம் இருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது,” என்றனர் நிறுவனர்கள்.

பயணம் மீதான ஆர்வம்

பிரதிக் ஜெயின், ரோஹித் துபே, அபிஷேக் தபோல்கர், மேக் தோஷி, பிரதீப் சிங் ஆகியோர் ஒன்றிணைந்து Moonstone Hammock தொடங்கினார்கள். 2006ம் ஆண்டு ஜூனியர் கல்லூரியில் தொடங்கிய இந்நிறுவனர்களின் நட்பு 14 ஆண்டுகளாக தொடர்கிறது. இவர்கள் அனைவருக்குமே பயணங்களில் ஆர்வம் இருந்தது.

”நாங்கள் அனைவரும் சேர்ந்து பலமுறை பயணம் செய்தோம். எங்களுக்கு கூடாரங்கள் அமைத்தல், மலையேற்றம் போன்றவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக மும்பை, புனே போன்ற பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து அதேபோன்ற அனுபவத்தை மக்களுக்கு வழங்க விரும்பினோம்,” என்கின்றனர் இந்த தொழில்முனைவர்கள்.

2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நண்பர்கள் ஐவரும் Moonstone Hammock என்கிற பெயரில் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக நிறுவினார்கள். பயணம் மேற்கொள்பவர்களுக்கு விசேஷனமான உணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக கவனமாக இந்தப் பெயரை தேர்வு செய்தனர்.


இதன் முகாம்களில் கயாகிங், திறந்தவெளி விருந்துகள், திறந்தவெளி திரையரங்கு, போன்ஃப்யர், நீச்சல் குளம், நேரடி பாலிவுட் இசை நிகழ்ச்சி போன்றவை இடம்பெற்றிருக்கும். Moonshine Hammock நிறுவனத்திற்கு சொந்தமான கஃபே உள்ளது. இதில் நூலகம் மற்றும் போர்ட் விளையாட்டுகளுக்கென தனிப்பிரிவும் உள்ளது.

”சுருக்கமாகச் சொல்வதானால் அனைவரின் தேவைகளும் பூர்த்திசெய்யப்படும்,” என்கின்றனர் இக்குழுவினர்.

ஆடம்பரமான கூடாரங்கள் (ஆடம்பர வசதிகளுடன்கூடிய பெல் வடிவிலான கேன்வாஸ் கூடாரம்), மிதக்கும் கூடாரங்கள் ஆகியவை இவர்களது சிறப்பம்சம் ஆகும்.

2

அனைவருக்கும் சிறந்த அனுபவம்

ஒரு லட்ச ரூபாயுடன் சுயநிதியில் தொடங்கப்பட்ட Moonstone Hammock அனைவருக்கும் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. ஆறு வயதுடையவர்கள், அறுபது வயதுடையவர்கள், தனியாக முகாமிடுபவர்கள், தம்பதிகள், குழுவினர், கார்ப்பரேட் ஊழியர்கள் மற்றும் குடும்பங்கள் என பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.


”நாங்கள் இரண்டு பருவங்களில் வருடம் முழுவதும் செயல்படுகிறோம். அக்டோபர் முதல் மே மாதம் வரை ’வொயிட் நைட்ஸ்’ என்றும் பருவமழை காலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை Sirmiri என்றும் திட்டமிடப்படுகிறது,” என்றனர் நிறுவனர்கள்.

”இரண்டு சீசன்களிலும் வாரநாட்கள், வார இறுதி நாட்கள் என பயண திட்டங்களும் கட்டணமும் மாறுபடும் என்றாலும் முகாம்கள் வருடத்தின் 365 நாட்களும் செயல்படும்,” என்றார்.

வார இறுதி நாட்களில் ஆடம்பரமான கூடாரங்களில் தங்குவதற்கு ஒரு நபருக்கான கட்டணம் 5,000 ரூபாய். மிதக்கும் கூடாரங்களுக்கான கட்டணம் ஒரு நபருக்கு சுமார் 3,500 ரூபாய் ஆகும். வழக்கமாக தரையில் அமைக்கப்படும் கூடாரங்களுக்கு 2,900 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதேசமயம் இதே அனுபவங்களை வார நாட்களில் பெற விரும்பினால் அதற்கான கட்டணம் கணிசமான அளவு குறைவாக இருக்கும். இந்தத் தொகையானது தங்கும் வசதி, உணவு மற்றும் இதர நடவடிக்கைகளுக்கான செலவையும் உள்ளடக்கியதாகும்.

”கார்ப்பரேட் பயண ஏற்பாடுகள் மூலமாகவே எங்களது முக்கிய வருவாய் ஈட்டப்படுகிறது. கடந்த நிதியாண்டில் எங்களுடன் பதிவு செய்தவர்களில் 25 சதவீதம் பேர் குடும்பங்களாகவே பதிவு செய்திருந்தனர். எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. ஏனெனில் குடும்பங்கள் இணைந்துகொள்ளும்போது சிற்பபாக செயல்படும் உணர்வு ஏற்படுகிறது,” என்று நிறுவனர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிறுவனம் தொடங்கப்பட்டு நான்காண்டுகள் ஆன நிலையில் சராசரி தக்கவைப்பு வீதம் 10 முதல் 15 சதவீதத்துடன் நிலையான வளர்ச்சி காணப்படுகிறது. புதிதாக பதிவு செய்பவர்கள் எண்ணிக்கையும் சுமார் 60 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.

அமைப்புசாரா சந்தையில் செயல்படுதல்

இந்தியாவில் நாட்டின் ஜிடிபியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு 2017-ம் ஆண்டு இருந்த 234.03 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் 2018ம் ஆண்டு 492.21 பில்லியன் டாலராக அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. மிகப்பெரிய சந்தைப் பிரிவுகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. சாகசப் பயணம் என்பது இந்தத் துறையில் மிகப்பெரிய துணைப்பிரிவாகும்.

”ஒட்டுமொத்த சாகசப் பயணத் துறையில் அமைப்புசாரா சந்தைப் பகுதி 65 சதவீதம் பங்களிக்கிறது. இந்த அமைப்புசாரா பிரிவில் செயல்பட்டு இந்தியாவின் முகாம் சேவையளிக்கும் மிகப்பெரிய சங்கிலித் தொடர் நிறுவனமாக செயல்பட விரும்புகிறோம்,” என்றது Moonstone Hammock குழு.

இந்த ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் இருந்தே லாபகரமாக செயல்படுகிறது. இதன் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2.5 மடங்கு அதிகரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் விரிவாக்கப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

”மஹாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் விரிவடைய தற்போது புதிய பகுதிகளையும், முகாம் அமைப்பதற்கான புதிய இடங்களையும் ஆய்வு செய்து வருகிறோம்,” என்றனர் இக்குழுவினர்.

முகாம் அமைப்பதற்கான புதிய இடங்களை இணைத்துக்கொள்வதுடன் அடுத்த ஐந்தாண்டுகளில் 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதையும் இலக்காகக் கொண்டுள்ளனர்.

”ஒத்த சிந்தனையுடைய தனிநபர்களை பணியிலமர்த்தி Moonstone Hammock குடும்பத்தை பெரிதாக்க விரும்புகிறோம்,” என்றனர்.


அதுமட்டுமல்லாது இக்குழுவினர் தொடர்ந்து நிலையாக செயல்படுவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர்.

“இத்தனை ஆண்டுகளில் எங்களது முகாம்களில் தங்கி எங்களது சேவைகளைப் பெற்றுக்கொண்ட பயனர்களே எங்களுக்கு வருவாய் ஈட்டித் தந்துள்ளனர். எனவே தரமான சேவையளிப்பதற்கே தொடர்ந்து முன்னுரிமை வழங்குவோம்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: சுத்ரிஷ்னா கோஷ் | தமிழில்: ஸ்ரீவித்யா