'சாய் கிங்ஸ்' நிறுவனம் 1 மில்லியன் டாலர் நிதி முதலீடு பெற்றது!
சென்னையின் சங்கிலித் தொடர் தேநீர் விற்பனை நிறுவனமான Chai Kings நிறுவனத்தில், சென்னை ஏஞ்சல்ஸ் மற்றும் சிலர் ஒரு மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி ஏஞ்சல் முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான, ’தி சென்னை ஏஞ்சல்ஸ்’ (The Chennai Angels), சென்னையின் சங்கிலித் தொடர் தேநீர் விற்பனை நிறுவனமான 'சாய் கிங்க்ஸ்' நிறுவனத்தில் ஒரு மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிதிச் சுற்றில் ஐதராபாத் ஏஞ்சல்ஸ் மற்றும் TiE இந்தியா ஏஞ்சல்ஸ் ஆகிய நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.
'சாய் கிங்ஸ்' (Chai Kings) நிறுவனம் 2016ல் துவக்கப்பட்டு, 40 நிலையங்களுடன் சென்னையின் மிகப்பெரிய சங்கிலித்தொடர் தேநீர் விற்பனை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. சுகாதாரமான சூழலில், நியாயமான விலையில் இந்நிறுவனம் பல வகையான தேநீர் வழங்குகிறது.
சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கும் தேநீர் டெலிவரி செய்கிறது. இதற்காக சுற்றுச்சூழலுக்கு நட்பான புதுமையான காகித பிளாஸ்கை பயன்படுத்துகிறது.
இந்தியா முழுவதும் செயல்பாடுகளை விரிவாக்கும் திட்டத்துடன் அடுத்த ஐந்தாண்டுகளில் 100 மையங்களைk கொண்டிருக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் சாய் கிங்ஸ் நிறுவனத்தில், தி சென்னை ஏஞ்சல்ஸ், முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
“இந்த பிரிட்ஜ் நிதி சுற்றில் சாய் கிங்ஸுடன் கை கோர்ப்பதில் உற்சாகம் கொள்கிறோம். நிறுவனம் வலுவான தலைமையுடன் இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்து வளர்வதற்கான சாத்தியத்தைக் கொண்டுள்ளதாக நம்புகிறோம். நீடித்த வளர்ச்சி கொண்டு, வளர்ச்ச் வாய்ப்புள்ள இந்திய கியு.எஸ்.ஆர் மீதான எங்கள் ஈடுபாட்டை இது உறுதிப்படுத்துகிறது,” என சென்னை ஏஞ்சல்ஸ் முதலீடு பிரிவுத் தலைவரான பியூஷ் பண்டாரி கூறியுள்ளார்.
“சென்னையில் எங்கள் பிராண்ட் சாய் கிங்ஸ் பெற்றுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிதி, புதிய நகரங்களில் விரிவாக்கம் செய்ய உதவும். நடப்பு ஆண்டில் கோவை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நுழைய உள்ளோம். 5 ஆண்டுகளில் 100 மையங்கள் எனும் இலக்கை அடைய விரும்புகிறோம்,” என்று சாய் கிங்ஸ் சி.இ.ஓ ஜாபர் சாதிக் கூறியுள்ளார்.
தி சென்னை ஏஞ்சல்ஸ், இந்தியாவின் முன்னணி ஏஞ்சல் முதலீடு குழுக்களில் ஒன்றாக விளங்குகிறது. 2007ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிறுவனத்தில் விதை மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் பல உறுப்பினர்களாக உள்ளன.