Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

மஞ்சள் காமாலையில் உயிரிழக்கும் பச்சிளம் குழந்தைகளை காக்கும் கருவியை உருவாக்கிய மருத்துவர்!

மஞ்சள் காமாலையில் உயிரிழக்கும் பச்சிளம் குழந்தைகளை காக்கும் கருவியை உருவாக்கிய மருத்துவர்!

Monday February 25, 2019 , 3 min Read

”இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றன. இதில் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணம் மஞ்சள்காமாலை. சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கிடைத்தால் இந்தக் குழந்தைகள் உயிர் பிழைக்கலாம்,” என்கிறார் டாக்டர் கிரண் காந்தி.

இவர் லட்சக்கணக்கான உயிர்களை காக்கக்கூடிய கருவியை உருவாக்கியுள்ளார். பொதுவாக பச்சிளம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்படுவதுண்டு. நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்கும் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் ஐந்தில் நான்கு குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கான சரியான சிகிச்சை முறைகளில் ஒன்று போட்டோதெரபி. இதில் பிலிருபின் அளவின் நச்சுத்தன்மையை எதிர்த்துப் போராட வெளிச்சம் பயன்படுத்தப்படும்.

பச்சிளம் குழந்தைகளின் உடலில் சூரியவெளிச்சம் படும்போது மஞ்சள் காமாலை குணமாகிவிடும். ஆனால் மூன்றாம் உலக நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் 60 சதவீத பச்சிளம் குழந்தைகளுக்கு இதற்கான சிகிச்சை தேவைப்படுகிறது. இதில் இந்தியாவும் அடங்கும்.

இந்த வசதி பெரும்பாலான பெரிய மருத்துவமனைகளில் கிடைக்கிறது. ஆனால் பச்சிளம் குழந்தைகளை மரணத்திலிருந்து மீட்டெடுக்கக்கூடிய இத்தகைய வசதி கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை.

மயக்கவியல் நிபுணரான கிரண் வட கர்நாடகாவின் பகல்காட் பகுதியில் இருபதாண்டுகளுக்கும் மேலாக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தை நடத்தி வருகிறார். பச்சிளம் குழந்தைகளுக்கான போட்டோதெரபி சிகிச்சையுடன்கூடிய தீவிர சிகிச்சை பிரிவு கொண்ட வெகு சில மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று.

”தற்போது சந்தையில் கிடைக்கக்கூடிய கருவி அதிக விலை கொண்டதாகவும் அதிக எடை கொண்டதாகவும் உள்ளது. இந்தக் கருவியைப் பயன்படுத்த பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு (NICU) அமைப்பு அவசியம். அத்துடன் குழந்தையை அதன் தாயிடமிருந்து தனிமைப்படுத்தியே சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும். இத்தகைய பராமரிப்பு கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைப்பதில்லை,” என கிரண் விவரித்தார்.

பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதங்களைப் பார்க்கும்போது இந்தியா 12-வது இடத்தில் உள்ளது என யூனிசெஃப் அறிக்கை தெரிவிக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கப்படாததால் நேரும் உயிரிழப்புகளைத் தவிர்த்து பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற அவர்களது வீட்டிற்கே கருவியைக் கொண்டு சேர்ப்பதே சரியான தீர்வு என்பதை உணர்ந்தார். எனவே கர்நாடகாவின் ஹூப்ளி பகுதியில் 2016-ம் ஆண்டு Lifetrons Innov Equipments என்கிற மருத்துவ தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பைத் துவங்கினார்.

கிராமப்புறங்களிலும் தொலைதூரப்பகுதிகளிலும் உள்ள மருத்துவ சுகாதார மையங்களில் படுக்கைக்கு அருகில் வைக்கக்கூடிய, பச்சிளம் குழந்தைகளுக்கான போட்டோதெரபி யூனிட்டை உருவாக்க விரும்பினார். இந்த யூனிட் எளிதாக பயன்படுத்தும் வகையிலும் குறைந்த விலையிலும் எளிதாக எடுத்துசெல்லக்கூடிய வகையில் சிறியளவிலும் இருக்கவேண்டும் என திட்டமிட்டார். ஆனால் கிரண் ஒரு மருத்துவர். பொறியாளர் அல்ல.

மருத்துவர் கருவியின் வடிவமைப்பாளராக மாறினார்...

போட்டோதெரபி யூனிட் எப்படி இருக்கவேண்டும் என்பதில் அவருக்கு தெளிவு இருந்தது. ஆனால் அதை உருவாக்கும் செயல்முறையில் பல்வேறு நிலைகளும் சவால்களும் அடங்கியிருந்தது. கிரண் முதலில் அடிப்படை வடிவமைப்பை உருவாக்கி பொறியாளர்கள் அடங்கிய குழு ஒன்றிடம் ஒப்படைத்தார்.

”கருவி எப்படி இருக்கவேண்டும் என்பதையும் குறிப்பிட்ட வகையில் அது வடிவமைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் பொறியாளர்களிடம் விவரிப்பது மிகவும் கடினமாக இருந்தது,” என்று நினைவுகூர்ந்தார்.

வடிவமைப்பிற்காக மூன்றாண்டுகள் செலவிட்டார். மருத்துவக் கருவியை உற்பத்தி செய்வதற்காக சந்தையில் கிடைக்கும் வெவ்வேறு அச்சுகள் குறித்து தெரிந்துகொண்டார். சரியான மாடலை உருவாக்குவதற்காக கேட் டிசைன்ஸ் குறித்து தெரிந்துகொண்டார்.

”நான் இரண்டு கேட் டிசைனர்களையும் இரண்டு பொறியாளர்களையும் பணியிலமர்த்தினேன். இரண்டு பொறியாளர்களில் ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். மற்றவர்கள் ஹூப்ளியைச் சேர்ந்தவர்கள்,” என்றார் கிரண்.

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கிரண் இந்த முயற்சிக்காக வெவ்வேறு நபர்களுடன் உரையாடியபோதும் முன்வடிவத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதும் சி.எம்.படீலைச் சந்தித்தார். இவர் ஹூப்ளியில் இருக்கும் தேஷ்பாண்டே ஃபவுண்டேஷன் சாண்ட்பாக்ஸ் ஸ்டார்ட் அப்ஸ் என்கிற இன்குபேடரை நடத்தி வருகிறார். இங்குதான் இந்தக் குழு கருவியுடன்கூடிய ஆய்வகத்தை அமைத்தது. அப்போதிருந்து இந்தக் கருவியை தயாரிக்கத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் கிடைத்தது. கடந்த மார்ச் மாதம் நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் அவர்களால் Lifetron-ன் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.

இக்குழுவினர் பயன்படுத்திய பெரும்பாலான மூலப்பொருட்கள் ஹூப்ளியில் இருந்தே பெறப்பட்டது. எலக்ட்ரானிக் பொருட்கள் பெங்களூருவில் இருந்து பெறப்பட்டது. வரவிருக்கும் வாரங்களில் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதால் சாண்ட்பாக்ஸில் பொருத்தும் வரிசை (assembly line) உருவாக்கும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

காப்புரிமை நிலுவையில் உள்ள Lifetron போட்டோதெரபி யூனிட்டின் விலை 30,000 ரூபாய். தற்போது சந்தையில் கிடைக்கும் யூனிட்கள் இதைக் காட்டிலும் இருமடங்காக 60,000 ரூபாய் விலையில் கிடைக்கிறது. Lifetron கருவி முழுமையான பேட்டரி பேக்அப் வசதியுடன் கிடைக்கிறது.

இதை ஆரம்ப சுகாதார மையங்களில் எளிதாகப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே ஹூப்ளியிலும் கிரணின் மருத்துவமனையிலும் மருத்துவ ரீதியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ உபகரணங்களுக்கான சான்றிதழ் வழங்கும் அமைப்பில் இக்குழு இந்த கருவிக்கான சான்றிதழுக்காக விண்ணப்பித்துள்ளது.

 ”இந்த ஆண்டு ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து நான்கு கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளோம். முதல் சில மாதங்களில் பெறப்பட்டு நிலுவையில் உள்ள 100 ஆர்டர்களை விரைவில் பூர்த்தி செய்ய உள்ளோம். எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய சிறியளவிலான போட்டோதெரபி யூனிட் உலகளவிலான சந்தையில் செயல்படும் என்று நம்புகிறோம்,” என்றார் கிரண்.

நகர்புறங்களையும் கிராமப்புறங்களையும் ஒன்றிணைத்தல்

இந்தியாவில் Forus Healthcare, Cyclops Medtech, InnAccel, Sattva Medtech என ஹெல்த்கேர் உபகரணங்கள் பிரிவில் செயல்படும் பல்வேறு ஸ்டார்ட் அப்கள் உள்ளன. 2017-ம் ஆண்டில் 160 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டிருந்த ஹெல்த்கேர் துறை 2020-ம் ஆண்டில் 280 பில்லியன் டாலரை எட்டும் என IBEF அறிக்கை தெரிவிக்கிறது.

நம்பகமான மருத்துவ சாதனங்களுக்காக தேவை நாட்டில் அதிகரித்து வருகிறது. GE Healthcare, Philips, Davin போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் எளிதாக நகர்த்தக்கூடிய சிறியளவிலான உபகரணங்களை உருவாக்கும் பிரிவில் செயல்பட்டாலும் தொலைதூர கிராமப்புறங்களில் இத்தகைய செயல்பாடுகள் அதிகம் இல்லை. Lifetron இந்த நிலையை மாற்றவே முயற்சி செய்து வருகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா