The Family Man 2 காப் 'முத்துப்பாண்டி' ஆக ஜொலித்த டாக்டர் ரவீந்திர விஜய்!

’தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாம் சீசனில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் டாக்டர் ரவீந்திர விஜய்.
3 CLAPS
0

வீட்டை அலுவலகமாகவும் பள்ளியாகவும் மாற்றமுடியுமானால் திரையரங்காகவும் மாற்றமுடியும் அல்லவா?

பொழுதுபோக்கிற்காக திரையரங்குகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு திரையரங்கு அனுபவத்தை வீட்டிலேயே கொண்டு சேர்க்கின்றன ஓடிடி தளங்கள். கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இந்தத் தளங்களில் திரைப்படங்களையும் திரைத்தொடர்களையும் காண்போர் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

அந்த வகையில், அமேசான் பிரைமில் 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட 'தி ஃபேமிலி மேன்’ சீசன் -1 (The Family Man) தொடர் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. ராஜ், டிகே இருவரும் இணைந்து இந்தத் தொடரை இயக்கி உள்ளனர். இதைத் தொடரந்து ஜூன் மாதம் 4-ம் தேதி ஃபேமிலி மேன் இரண்டாம் சீசன் வெளியாகியது. மும்பை, தமிழ்நாடு, லண்டன், பிரான்ஸ் என வெவ்வேறு இடம், மொழிகளுடன் விரிகிறது இந்தத் தொடரின் கதைக்களம்.

சர்ச்சைகளுக்குக் குறைவில்லாத ‘தி ஃபேமிலி மேன்-2’-வில் காட்சிகள் சென்னை மற்றும் தமிழகப் பகுதிகளில் வருவதால், அதில் பல தென்னிந்திய நடிகர்கள் நடித்துள்ளனர். மும்பையில் இருந்து சென்னை வரும் டாஸ்க் குழுவிற்கு உதவியாக இருக்கும் சென்னை போலீஸ் அதிகாரியாக முத்துப்பாண்டி என்னும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரவீந்திர விஜய்.

ஃபேமிலி மேனின் ஹீரோ ஸ்ரீகாந்த் திவாரி என்கிற மனோஜ் பாய்பாய் உடன் கடைசி க்ளைமாக்ஸ் வரை பயணிக்கிறார் முத்துப்பாண்டி எனும் ரவீந்திர விஜய்.

‘முத்து... என அன்போடு அழைக்கும் டாஸ்க் குழுவுடன் சிறப்பாகச் செயல்படும் அதிகாரியாக வரும் ரவீந்திர விஜய், பல இடங்களில், தென்னிந்தியா பற்றிய வடமாநிலத்தவர்களின் புரிதலை கரெக்ட் செய்கிறார்.

தொடக்கத்தில் அவர் அக்குழுவுடன் சற்று விலகி கடுகடுத்தாலும், பின்னர் மெல்ல அனைவருடன் ஒன்று கூடி ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொண்டு மிஷனை கையாள்கின்றனர்.

முத்து கேரக்டரை நேர்த்தியாக நகர்த்திச் சென்றுள்ள ரவீந்திர விஜய், இந்த சீசன் ஃபேமிலி மேனில் பளிச்சென்று தனியாகத் தெரியும் அளவிற்கு தனது நடிப்பு மற்றும் ஸ்கிரீன் பிரசன்சை தந்துள்ளார் என்றே சொல்லலாம்.

யார் இந்த ரவீந்திர விஜய்?

ரவீந்திர விஜய் ஒரு நடிகர் என்ற முத்திரியைத் தாண்டி இவர் ஒரு டாக்டர் என பலருக்கு தெரியாது.

ஆம், பெங்களூரு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தவர் ரவீந்திர விஜய்.

“கலைத்துறையில் எனக்குப் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்தபோது பொழுதுபோக்கிற்காக நடித்தேன். ஆர்வம் அதிகரிக்கவே நடிப்புத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்,” என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் டாக்டர் ரவீந்திர விஜய்.

ரவீந்திர விஜய்; ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகள் அறிந்தவர். 2005-ம் ஆண்டு Rafiki என்கிற நாடகக் குழுவில் இணைந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அப்போதிருந்து பல்வேறு நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

இவர் சென்னைக்கு மாற்றலானபோது ‘ஓடு ராஜா ஓடு’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து ‘கடாரம் கொண்டான்’, ’தாராள பிரபு’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர், வெங்கடேஷ் மகா இயக்கத்தில் வெளியான ‘உமா மகேஷ்வர உக்ர ரூபஸ்ய’ என்கிற தெலுங்கு திரைப்படத்தில் ஜோக்நாத் என்கிற கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தவர்.

ரவீந்திர விஜயின் எதார்த்த நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

“மருத்துவத் துறையில் இருந்து விலகி திரைத்துறையில் சேர்ந்தது கடினமான முடிவாகவே இருந்தது. என் முடிவு குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது,” என்கிறார் ரவீந்திர விஜய்.

மருத்துவத் துறையில் இருப்பவர்கள் தங்களைத் தொடர்ந்து அப்டேட் செய்துகொள்ள வேண்டியது கட்டாயம் என்கிறார். துறை சார்ந்த மாற்றங்களையும் புதிய சிகிச்சைமுறைகளையும் தெரிந்துகொள்ளவேண்டியது இன்றியமையாதது என்று வலியுறுத்துகிறார் ரவீந்திர விஜய்.

இதுவரை சுமார் 10 திரைப்படங்களில் தோன்றியுள்ள ரவீந்திர விஜய், ஃபேமிலி மேன் வெப் சீரிசை தொடர்ந்து ’இது வேதாளம் சொல்லும் கதை’ எனும் தொடரில் நடித்துள்ளார். தற்போது ரவீந்திர விஜய்க்கு கிடைத்துள்ள பாராட்டுக்களும், நல்ல விமர்சனங்களும், அவருக்கு விரைவில் பெரிய திரையிலும் நல்ல ஒரு ப்ரேக் தரும் கேரக்டர் கிடைக்க வழி செய்யும் என எதிர்ப்பார்க்கலாம்.

Latest

Updates from around the world