பதிப்புகளில்
வென்றவர்கள்

தொழில்முனைவோர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் 'Affordable luxury'

இந்தியாவில் தாஜ் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் அறைகளைக் கொண்ட 'லெமன் ட்ரீ’ ஓட்டல்களை கட்டமைத்து வெற்றிக்கதை மற்றும் அதன் நிறுவனர் பட்டு கேஷ்வானி பின்பற்றிய தொழில் யுக்திகள்!

vasu karthikeyan
11th Jan 2019
66+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

'Affordable luxury’ தொழிலதிபர்கள் அதிக கவனம் செலுத்தும் வார்த்தை இது. இந்த வார்த்தை புரிகிற மாதிரியும் இருக்கும், புரியாத மாதிரியும் இருக்கும். விஷயம் இதுதான். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் நடுத்தர மக்களின் வருமானம் உயர்ந்து வருகிறது. அவர்களால் சொகுசான பொருட்களை, சேவைகளை பெற முடியாது. ஆனால் அதற்கான மிகவும் குறைவான விலை உள்ள பொருள் மற்றும் சேவையையும் விரும்புவதில்லை.

உதாரணத்துக்கு சென்னை போன்ற நகரங்களில் 8,000 ரூபாய்க்கும் வீடு வாடகைக்கு கிடைக்கும் 50,000 ரூபாய்க்கும் கிடைக்கும். ஆனால் ரூ.12,000 முதல் ரூ.20,000 வரையிலான வாடகைக்குக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மாதம் ரூ.50,000க்கு மேலே சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் இது நடக்கிறது.

முன்பெல்லாம் விமானத்தில் பிஸினஸ் மற்றும் எகனாமி இரண்டு வகுப்புகள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது பிரீமியம் எகானமி என்னும் புதிய வகுப்பினை விஸ்தாரா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இது போல Affordable luxury பிரிவு உருவாகும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே யோசித்திருக்கிறார் பட்டு கேஷ்வானி. லெமன் ட்ரீ நிறுவனத்தின் உருவாக்கியவர்.

பட உதவி: Moneycontrol.com

தொழில்முனைவோர்களுக்கு பல தடைகளை உடைத்ததில் முன்மாதிரியாக இருப்பவர் இவர். இந்தியாவில் தாஜ் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் அறைகளைக் கொண்ட நிறுவனம் லெமன் ட்ரீதான்.

52 ஓட்டல்கள் உள்ளன. இதில் மொத்தம் 5,300 அறைகள் உள்ளன. ஆனால் தன்னுடைய முதல் ஓட்டலை 2004-ம் ஆண்டு மே மாதம்தான் தொடங்கினார் இவர். 15 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய வளர்ச்சி சாத்தியம் ஆகி இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இவரது நிறுவனத்தை பங்குச்சந்தையிலும் பட்டியலிட்டிருக்கிறார் என்பதும் நினைவு கூறத்தக்கது.

முதல்தலைமுறை தொழில்முனைவோர்

இந்திய கார்ப்பரேட் உலகில் உள்ள பெரும்பாலானவர்களைப் போல இவரும் ஐஐடி மற்றும் ஐஐஎம்-ல் படித்தவர்தான். டெல்லி ஐஐடியில் படித்தார். இவருடைய வகுப்பில் உள்ள அனைவரும் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டனர். ஆனால் இறுதி ஆண்டில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக இந்தியாவிலே இருந்தார் பட்டு. வேலையில் சேரலாமா அல்லது ஐஐஎம்-ல்படிக்கலாமா என்னும் திட்டம் மட்டுமே இவரிடம் இருந்தது. ஐஐஎம் கொல்கத்தாவில் இணைந்தார். Tata administrative services-ல் இணைந்தார். டாடா குழுமத்தில் பல நிறுவனங்களில் பணிபுரிந்தார். டாடா ஸ்டீல் நிறுவனத்தை தொடர்ந்து டாடா குழுமத்தின் தாஜ் ஓட்டலில் பணியமர்த்தப்பட்டார். 1983-ம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்தார். 1999-ம் ஆண்டு வரை தாஜ் குழுமத்தில் பணிபுரிந்தார்.

நண்பர்களுடன் இணைந்து பேசிக்கொண்டிருக்கும் போது பணம் குறித்து பேச்சு வந்தது. 40 வயதில் ரூ.5 கோடி என்னும் இலக்கை அடைந்திருக்க வேண்டும் என நண்பர்கள் திட்டமிட்டனர். இவருக்கு வயது 38, ஆனால் நண்பர்களுக்கு 36 மட்டுமே. அதாவது 2 ஆண்டுகளில் சுமார் 5 கோடியை சம்பாதிக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்காக கடன் வாங்கி பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதில் நஷ்டம் வரவே அதில் இருந்து விலகினார்.

அதனைத் தொடர்து ஏடி கெர்னே (At Kearney) நிறுவனத்தில் இணைந்தார். 3 ஆண்டுகளில் ஐந்து கோடி சம்பாதிக்க முடியுமா என்பதை தெரிந்து கொண்டே இணைந்தார். முதல் ஆண்டில் ஒரு கோடி சம்பளம். சில ஆண்டுகள் இருந்தாலும் அந்த வேலையில் திருப்தி இல்லை.

ஏடி கேர்னே என்பது ஆலோசனை நிறுவனம். அதனால் பலதுறைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டி இருக்கும். அதற்காக நிறைய படிக்க வேண்டி இருக்கும். அப்போது கிடைத்த தகவல்தான் நடுத்தர மக்களுக்கான ஓட்டல் இல்லை என்பது. அதனால் கையில் இருக்கும் தொகையை வைத்து ஓட்டல் கட்ட திட்டமிட்டார் பட்டு கேஷ்வானி.

தனியாக தொழில் தொடங்க திட்டமிடுபவர்கள், புதிதாக எதாவது செய்ய வேண்டும் என நினைப்பார்களே தவிர ஏற்கெனவே பணிபுரிந்த தொழிலை செய்யமாட்டார்கள். காரணம் நாம் பணிபுரிந்த நிறுவனத்துக்கே போட்டியாவதை யாரும் விரும்ப மாட்டார்கள். அதேபோல புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் சேவைத் துறையில் கவனம் செலுத்துவார்கள். உற்பத்தித் துறையில் இறங்குவது என்பது ரிஸ்க் என்பதால் அதில் கவனம் செலுத்தமாட்டார்கள்.

ஆனால் இந்த இரண்டு ரிஸ்கினையும் கேஷ்வானி எடுத்தார். தாஜ் நிறுவனத்தில் வேலை செய்து தாஜ்க்கு எதிராகவே மிகப்பெரிய பிராண்டினை உருவாக்கி இருக்கிறார். சொகுசு அறை கட்டணத்தில் 50 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும், அதே சமயத்தில் சேவைகளில் எந்த குறையும் இருக்கக் கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு இந்த பிராண்டினை தொடங்கினார்.

2002-ம் ஆண்டு இந்தியாவில் பிராண்ட் ஓட்டல்களில் உள்ள அறைகளின் எண்ணிக்கை 25,000 மட்டுமே. இதில் 80 சதவீதம் வரை சொகுசு அறைகள். பணக்காரர்கள் தங்களை போன்றவர்களுக்கே தொடங்கினார்கள். நடுத்தர மக்களுக்கு ஓட்டல்கள் இல்லை என்பதை உணர்ந்தார்.

தற்போது இவரது குழுமத்தில் 1.25 லட்சம் பிராண்டட் அறைகள் உள்ளன. இதில் நடுத்தர மக்களுக்கான அறைகள் மட்டுமே 55,000 ஆக உள்ளன. 16 ஆண்டுகளில் இந்த பிரிவு 10 மடங்குக்கு வளர்ந்திருக்கிறது.

பட உதவி: Makemytrip

சவால்கள் என்ன?

சேவைத் தொழிலில் உடனடியாக ஒரு வருமானம் கிடைக்கும். ஆனால் ஓட்டலில் அப்படி கிடைக்காது. குர்கானில் 50 அறைகளில் ஒரு ஓட்டல் கட்டத்திட்டமிட்டார். ஆனால் திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிமாகியது. முதல் ஓட்டல் கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆகியது. இதில் முறையான அனுமதி வாங்குவதற்கு மட்டும் 1.5 ஆண்டுகள் ஆனது. அதனைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டு மே மாதத்தில் முதல் ஓட்டல் திறக்கப்பட்டது. அந்த ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்துக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரி லஞ்சம் கேட்டிருக்கிறார். அடுத்த வாரம் வழங்க இருப்பதாகக் கூறிய கேஷ்வானி, அடுத்த வாரத்தில் 10 லட்சம் மதிப்புள்ள நீச்சல் குளத்தை மூடினார். அதேபோல மும்பையில் ஓட்டல் கட்டுவதற்கான அனுமதி 9 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்திருக்கிறது. 2005-ம் ஆண்டில் நிலத்தை வாங்கினார். ஆனால் 2015-ம் ஆண்டுதான் அனுமதி கிடைத்தது. இதனால் இவர் இழந்த வாய்ப்புகள் அதிகம்.

பணியாளர்கள் முக்கியம்...

பணியாளர்களை நான் பார்த்துக்கொள்வேன். பணியாளர்கள் எங்களது வாடிக்கையாளர்களை பார்த்துக்கொள்வார்கள், எங்களது வாடிக்கையாளர்கள் எங்களது லாபத்தை பார்த்துக்கொள்வார்கள் என்பதுதான் இவரது மந்திரம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மந்த நிலையில் ஓட்டல் முன்பதிவுகள் பெரிய அளவில் இருக்கவில்லை. அப்போது இவரிடம் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தது.

முதல் வாய்ப்பு 50 பணியாளர்களை நீக்குவது அல்லது சம்பளக் குறைப்பு. இறுதியாக சம்பள குறைப்புக்கு முடிவெடுக்கப்பட்டது. தலைவராக 50 சதவீதம் சம்பளத்தை குறைத்துக்கொண்டார். முக்கிய உயரதிகாரிகளின் சம்பளம் 25 சதவீதம் குறைக்கப்பட்டது. அனைத்து பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை சம்பளக் குறைப்பு செய்யப்ப்ட்டது.

15 மாதங்களுக்கு பிறகு 12 சதவீத வட்டியுடன் குறைக்கப்பட்ட சம்பளம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த செலவு மட்டுமே 10 கோடி என கேஷ்வானி குறிப்பிட்டிருக்கிறார்.

ஓட்டல் துறையின் அடுத்த கட்டம்?

அமெரிக்காவில் 1,000 நபர்களுக்கு 16 அறைகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் 1,000 நபர்களுக்கு 0.2 அறைகள் மட்டுமே உள்ளன. அதாவது இந்தியா முழுவதும் சுமார் 2 லட்சம் அறைகள் (1.25 பிராண்ட்கள் மற்றும் 0.75 இதர) உள்ளன. அனைத்து விஷயங்களிம் சீனாவை போலவே நம்முடைய வளர்ச்சி இருக்கிறது. 1995-ம் ஆண்டு வாக்கில் சீனாவில் அதிக எண்ணிக்கைகள் அறைகள் இல்லை. ஆனால் தற்போது 38 லட்சம் அறைகள் உள்ளன. இதே வேகத்தில் இந்தியாவின் வளர்ச்சியும் இருக்கும் எனக் கருத்தப்படுகிறது. குறிப்பாக 2 ஸ்டார் முதல் 4 ஸ்டார் வரையிலான பிரிவில் இந்த வளர்ச்சி இருக்கும். அடுத்த சில ஆண்டுகளுக்கு 12% முதல் 14 சதவீதம் வரை இருக்கும் என கேஷ்வானி குறிப்பிட்டிருக்கிறார்.

தொழிலபதிர்கள் மட்டுமல்ல தொழில்முனைவோர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ’Affordable luxury’.


66+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags