தேர்தல் அறிவிப்பு வந்து விட்டாலே கட்சி பாகுபாடின்றி எல்லாரும் முதலில் தேடுவது வீராசாமியை தான்...

பக்கவான வருமானத்துடன் பதவியும் பெற்றுத்தந்த பந்தல் தொழில் செய்யும் இவரிடம் இல்லாத கட்சி கொடிகளே இல்லை...!

21st Mar 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆளுமைகள் இல்லாத நிலையில், தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இரு கட்சிகளும் பரபரவென செயல்பட்டு கூட்டணிகளை இறுதி செய்திருக்கும் நிலையில், ஆல் கட்சியினர்களின் விருப்பத்தேர்வில் எப்போதும் இருக்கிறார் வேலூர் வீராசாமி. மாநாடு, பொதுக்கூட்டம், பிரச்சாரம் என்று எந்த கட்சியின் எவ்வித நிகழ்வாகினும் அவர்கள் முதலில் அழைப்பது இந்த வீராசாமியை தான்.

புகைப்பட உதவி : தினமலர்

ஆம், வேலூரை சேர்ந்த அவர் தான், கட்சி பொதுக்கூட்டம், மாநாடு, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் தலைவர்களின் வருகை நிகழ்வுகளின் பொது பந்தல் அமைப்பது, கொடி ஏற்றுவது, துணி அலங்காரம், மேடை அமைப்பது என சகலத்தினையும் பக்கவாய் அமைத்து கொடுக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாய் இத்தொழில் ஈடுபடும் அவர், இதுவரை அமைத்து கொடுத்த மேடைகளின் எண்ணிக்கை கணக்கற்றது.

“பூர்விகம் எல்லாம் விழுப்புரம் மாவட்டம். பொழப்புத் தேடி வந்த ஊருல என்ன வாழ வச்சதும் இல்லாம இந்த மக்கள் என்ன கவுன்சிலராக்கியும் ஆதரவு தெரிவித்தனர், என்றார் வீராசாமி.

வேலூர் மாவட்டம் முள்ளிப்பாளையத்தில் தி.மு.க கவுன்சிலராகவும் பதவி வகித்தவர்.

தொடக்கக் காலத்தில் பந்தல் அமைப்பதற்காக கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தவர், தொழிலின் நுணுக்கங்களை கற்று தேர்ந்து, பின்னாளில் சொந்தமாய் தொழில் தொடங்கியுள்ளார்.

“அப்பா கூலி வேலைக்கு போவாரு. நானும் 9வது படிச்சு முடித்ததிலிருந்து பந்தல் போட ஆரம்பிச்சுட்டேன். அப்புறம், ஒரு கட்டத்தில் நானே தொழிலை எடுத்து பண்ண ஆரம்பிச்சுட்டேன். முதலில் கல்யாணம், காதுக்குத்து, கோயில் திருவிழாக்கள் என தொடங்கி அப்படியே கட்சி விழாக்களில் மேடை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது,” என்கிறார்.

கட்சி நிகழ்வுகளுக்கு எப்போது மேடை அமைத்து கொடுக்கத் தொடங்கினார் என்பதெல்லாம் அவருக்கு நினைவில்லை, ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவின் போதும் சிறப்பாய் பணியாற்றியதற்காக கட்சி தலைவர்கள் அழைத்து பாராட்டு தெரிவிப்பதுடன் சால்வை போர்த்தி மகிழ்வித்துள்ளார்கள் என்று மனமகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

“கட்சி விழாக்கள், கல்யாணம், காதுக்குத்து விசேஷங்கள் என சகல நிகழ்வுகளுக்கும் மேடை அமைத்து கொடுப்போம். அனைத்து கட்சியின் கொடிகளும் கிடங்கில் எப்போதும் இருக்கும். யாராவது ஒரு கட்சியினரிடம் இருந்து அழைப்பு வந்ததுடன், வண்டியில் ஏற்றி ஸ்பாட்டுக்கு போயிருவோம். குறித்த நேரத்தில் முடிக்கவேண்டும் என விடிய விடிய முழிச்சு வேலை பார்த்து பலநாள் தூங்காத கதையெல்லாம் இருக்கிறது.

திருச்சியில் ஒரு முறை நடந்த திமுக கட்சி விழாவுக்காக 3 லட்சம் கொடிகள் நட்டோம். வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் எல்லாம் திமுக, அதிமுக, அமமுக, என எல்லாக் கட்சியிலிருந்தும் புக்கிங் செஞ்சுருவாங்க. பசங்கள வச்சு எப்படியாச்சும் குறித்த நேரத்தில் முடிச்சு கொடுத்துருவேன். அதுக்காகவே கலைஞர் ஐயா, அம்மா, ஸ்டாலின், என எல்லோருமே பாராட்டி சால்வை போர்த்தியுள்ளனர்.

ஒரு முறை நித்தியானந்தாவின் நிகழ்ச்சிக்கும், கர்நாடக முதலமைச்சர் சித்தரமையாவின் கட்சி நிகழ்ச்சிக்கும் மேடை அமைத்து கொடுத்துள்ளேன்.

“என்ன நம்ம பிரதமர் மோடிக்கு தான் கொடியேற்ற முடியாம போயிருச்சு. மோடி கோயம்புத்தூர் வந்த போது, பந்தல் அமைக்க என்னை அழைத்தனர். ஆனால், அதே சமயம் கலைஞர் ஐயா பிறந்தாள் விழாவுக்காக பந்தல் அமைக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டுமே ஒரே நாள் என்பதால், கோயம்புத்தூருக்கு செல்ல முடியவில்லை,” என்றார்.

“தொடக்கத்தில் மேடை அமைத்து பந்தல் போட 2,500ரூபாய் தான் வாங்கிட்டு இருந்தோம். இப்போது, 25,000ரூபாய் வாங்கினாலும் செலவு போக மிச்சம் கைக்கு நிக்குறது என்னவோ ரொம்ப கம்மி. வேலையாட்களுக்கு சாப்பாட்டு செலவு 150ரூபாய், ஒரு நாள் கூலி 700ரூபாய் என ஒரு ஆளுக்கு 850ரூபாய் ஆகிவிடும். இதில் சில சமயம், மேடை அமைத்ததற்கான காசு கைக்கு வராது, ஏமாற்றிவிடுவார்கள். ஆனாலும், வேலையாட்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிடுவேன்,” என்றார்.

#தேர்தல்2019 #தேர்தல்விழிப்புணர்வு #மக்களவைதேர்தல்

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

Our Partner Events

Hustle across India