Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

மழையிலும் மாணவர்கள் பள்ளிக்கு வர, 1200 குடைகளை இலவசமாக வழங்கிய வசந்தா டீச்சர்!

மழைக்காலத்தில் மாணவர்கள் தவறாமல் பள்ளிக்கு வர தனது சொந்த சேமிப்பான ரூ.1 லட்சத்தில் மாணவர்களுக்கு வண்ணக் குடைகளை பரிசளித்த ’அசத்தல் ஆசிரியை’

மழையிலும் மாணவர்கள் பள்ளிக்கு வர, 1200 குடைகளை இலவசமாக வழங்கிய வசந்தா டீச்சர்!

Tuesday September 24, 2019 , 3 min Read

மாணவர்களுக்கு பள்ளியை பிடித்த இடமாக மாற்றுவது ஆசிரியரின் கையில் இருக்கிறது. வளர் இளம் பருவத்தில் பள்ளி மீதும் வகுப்பறை மீதும் மாணவர்களுக்கு ஏற்படும் ஈடுபாடே மாணவர்கள் இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர உதவியாக இருக்கும். மாநகரங்கள், நகரங்களில் பள்ளி இடைநிற்றல் அதிக அளவில் இல்லாவிட்டாலும் கிராமப்புறங்களில் இந்த நிலை தொடரத்தான் செய்கிறது.


கல்வித்துறைக்கு சேவை செய்யும் மனப்பாங்குடன் இருக்கும் ஆசிரியர்கள் தங்களால் முடிந்த வகையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். கற்பித்தல் முறையில் மாற்றம், மாணவர்களுக்கு பிடித்தது போல வகுப்பறையில் செயல்வழிக் கற்பித்தல், மாணவர்களுக்கு போர் அடிக்காதபடி உற்சாகத்துடன் பாடம் எடுத்தல் என தங்களுக்கு தெரிந்தவற்றை செய்து மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைத் தூண்டி விடுகின்றனர்.


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆசிரியை வசந்தா சித்ரவேலுவும் அப்படித் தான். 28 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கும் இவர் அண்டர்காடு கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


50 வயதான வசந்தா தான் பணியாற்றும் சுந்தரேச விலாஸ் தொடக்கப்பள்ளியில் பருவமழைக்காலங்களில் மட்டும் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதை கவனித்து வந்துள்ளார். மழைக்காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு நனைந்து கொண்டே வரவேண்டி இருப்பதால் பல மாணவர்கள் பருவமழையின் போது பள்ளிக்கு வருவதில்லை.


இதற்கு என்ன தான் தீர்வு என்று யோசித்தவர்,

தனது சொந்த பணமான ரூ. 1 லட்சத்தில் மாணவர்களுக்கு குடையை வாங்கித் தர முடிவு செய்துள்ளார். வசந்தாவின் முடிவிற்கு அவரது கணவர் சித்ரவேலுவும் சம்மதம் தெரிவித்துள்ளார். சித்ரவேலுவும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மதுரையில் இருந்து குடைகளை வரவழைத்து கடந்த வாரத்தில் இந்த ஆசிரியர் தம்பதி வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன் புலம் நாடிமுத்து உதவி தொடக்கப்பள்ளியில் 1,000 மாணவர்களுக்கு குடைகளை வழங்கினர்.
vasantha teacher

பட உதவி: தி ஹிந்து மற்றும் விகடன்

மழைக்காலத்தில் குழந்தைகளை நாங்கள் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். எங்களிடம் குடைகள் இல்லை புதிதாக வாங்க வசதியும் இல்லை. எங்களது கஷ்டத்தை புரிந்து கொண்டு மாணவர்களுக்கு வசந்தா டீச்சர் குடையை வாங்கித் தந்து உதவியிருக்கிறார் என்று பெற்றோர் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

மாணவர்களுக்கு குடையை வழங்கியது குறித்து ஆசிரியர் வசந்தா கூறும்போது, “நாங்கள் ஒவ்வொரு ஆண்டுமே மாணவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருக்கிறோம். மாணவர்களுக்கு நோட்டு, பேனா, சீருடை மற்றும் எழுது பொருட்களை வாங்கித் தந்திருக்கிறோம். ஆண்டுதோறும் மாணவ மாணவிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அவர்களின் பிறந்த நாளிற்கு கொடுத்து மரக்கன்றுகளை கண்காணித்து வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகளையும் தந்து வருகிறோம்.

கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு மாணவர்களின் பள்ளி வருகை குறைந்து விட்டது. அதிலும் மழைக்காலங்களில் அதிக அளவில் மாணவர்களின் வருகை குறைகிறது இதற்கு என்ன காரணம் என்று யோசித்த போது கல்வி கற்க வருவதற்கு குடை இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கக் கூடாது என முடிவு செய்து மாணவர்களுக்கு எனது சொந்த பணத்தில் மதுரையில் இருக்கும் ஷோரூமில் இருந்து 1,200 வண்ண வண்ண குடைகளை வாங்கினேன் என்கிறார் வசந்தா.

முதற்கட்டமாக வசந்தா டீச்சர் தன்னுடைய பள்ளியை சேர்ந்த 200 மாணவர்களுக்கும் எஞ்சியவற்றை அண்டர்காடு, வேதாரண்யம் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 16 பள்ளி மாணவர்களுக்கும் வழங்கியுள்ளார். ஆசிரியர் அன்பாக பரிசளித்த குடையை பெற்றுக் கொண்ட மாணவர்கள் வசந்தா டீச்சரை ‘அசத்தல் ஆசிரியை’ என்ற அடைமொழியோடு அழைக்கத் தொடங்கியுள்ளனர்.


வசந்தா டீச்சர் தனது கணவர் சித்ரவேலு, இரண்டு மகள்களுடன் இணைந்து கஜா புயல் நிவாரணமாக ரூ. 50 லட்சம் நிதி திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆடைகள், அரிசி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கித் தந்ததோடு மாணவர்களின் பெற்றோருக்கு இரவு உணவும் சமைத்துக் கொடுத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெற்றோர் அனைவருமே கட்டுமானப் பணியாளர்கள்.

கல்விச்சேவையோடு பொதுச்சேவையும் செய்து வரும் வசந்தா டீச்சர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உள்பட சுமார் 30 விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.

“மாணவர்களின் முகத்தில் தெரியும் சிரிப்பே எனக்கு மிகப்பெரிய விருது. அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ந்து சேவையாற்றுவேன், அவர்களை நான் என்னுடைய குடும்பத்தினராகவும், என் குழந்தைகளாகவும் பார்க்கிறேன். அதனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது என்னுடைய கடமை,” என்கிறார் வசந்தா.

கட்டுரையாளர் : கஜலெட்சுமி