லாக்டவுனில் வேலையிழந்தவர், இன்று 100 மில்லியன் மக்கள் பின்தொடரும் லட்சங்கள் ஈட்டும் டிக்டாக் ஸ்டார்!

லாக்டவுனில் வேலையை இழந்து, பிழைப்பிற்கே வழியற்று நின்ற நிலையில் ஒரே ஆண்டில் டிக் டாக்கில் 100 மில்லியன் ஃபாலோயர்ஸ் பெற்று கோடீஸ்வரராகியுள்ளார் கேபி லேம்.
109 CLAPS
0

நீங்கள் சோஷியல் மீடியா பயனராக இல்லாத பட்சத்தில் ஒருவேளை இவரை பற்றி தெரிந்து கொண்டால் ஆச்சரியத்தில் மூழ்கிப் போவீர்கள். அப்படி யார் அவர்? என்ன செய்து விட்டார்? என்ற கேள்விகள் எழுகிறதா...! சமூக வலைதளங்களில் ஒன்றான டிக் டாக் கடந்த வாரம் இவரை பற்றிய ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, டிக் டாக்கிலேயே இரண்டாவதாக அதிக ஃபாலோயர்ஸ் கொண்டவர் இவர்தான் என்று. வெறும் 17 மாதங்களிலே 100 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார் என்றும் கூறி பாராட்டி வாழ்த்தியது.

ஷார்ட் டைமில் இந்த ரீச்சை அடைந்த அவர் நடிகரோ, மியூசிஷியனோ, விளையாட்டு வீரரோ கிடையாது. 17 மாதங்களுக்கு முன்பு லாக்டவுனால் வேலையை இழந்து, பிழைப்புக்கே வழியற்று நின்றவர். இன்று டிக் டாக் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் வேர்ல்ட் ஃபேமஸ் ஸ்டார் ஆகியுள்ளார். அவர் பெயர் கேபி லேம்.

Khaby Lame

21 வயதான டிக்டாக் ஸ்டார் கேபி லேமின் உண்மையான பெயர் கபேன் லேம். செனகல் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு வயது இருக்கும்போதே இத்தாலிக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்குள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்த நிலையில், கடந்தாண்டு பலரது வாழ்வில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா லாக்டவுன், அவரது வேலையையும் பறித்தது.

வேலையிழந்து வீட்டிலே முடங்கியிருந்த நிலையில், பொழுதுபோகாமல் டிக் டாக்கில் வீடியோக்களை பதிவிடத் தொடங்கினார். அவருக்கு பொழுதுபோகாமல் எடுத்த பதிவிட்ட வீடியோக்கள், இன்று லட்சக்கணக்கானோர்களின் டைம்பாஸாக மாறியுள்ளது.

நகைச்சுவைகளில் ட்ரை ஹீயூமர் அல்லது டெட்பான் என்றொரு வகையறா உண்டு. கேபி வீடியோக்கள் அந்த வகையே. வீடியோக்களில் பேசவும் மாட்டார், பார்வையாளர்களுக்கு வயிறு குலுங்க சிரிப்பும் வராது. ஆனால், அவரது அசட்டையான முகபாவனையாலும், உடல் மொழியாலும் பார்வையாளர்களுக்கு மெல்லியச் சிரிப்பை ஏற்படுத்துவார்.

கேபி லேம் வீடியோக்களில் அப்படி என்ன செய்கிறார் என்பதற்கு அவரது ஃபேமஸான வாழைப்பழத் தோல் உரிக்கும் வீடியோ ஒரு சிறு உதாரணம். டிக்டாக்கில் பதிவிட்ட அவ்வீடியோ 250 மில்லியன் மக்களால் பார்வையிடப்பட்டுள்ளது.

வீடியோவில், ஒருவர் வாழைப்பழத்தின் தோலினை உரிப்பதற்காக கத்தியை பயன்படுத்தி காயை வெட்டுவது போல் தோலினை வெட்டுவார். 'என்னடா பண்றீங்க!' என்பது போல் முகப்பாவனை கொடுத்து வாழைப்பழத் தோலை கையால் உரித்துவிட்டு, கையை உயர்த்தி 'இம்புட்டு தான்' என்று உணர்த்தும் சைகையை செய்து, தலையை ஆட்டுவார்.
இது போன்ற சப்பை மேட்டருக்கு, தினுசு தினுசாய் யோசித்து 'ஹேக்ஸ்' எனும் பெயரில் பதிவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு நடைமுறை வழக்கத்தினை செய்துக்காட்டி அவரது ரியாக்‌ஷன்கள் மூலம், பகடி செய்து ஆல் ஓவர் உலக மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். அவரது தனித்துவ ரியாக்‌ஷனால் புது நகைச்சுவை டிரெண்டையே உருவாக்கியுள்ளார்.

டிக் டாக்கில் கேபி லேம் பதிவேற்றும் வீடியோக்களைக் காட்டிலும், ஒரு செயலை கேபி எப்படி சுலபமாக்கியிருப்பார் என்று சிந்தித்து அவரது ரியாக்‌ஷன்களை செய்து பதிவேற்றுபவர்களின் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன.

"இவையனைத்தும் லாக்டவுனில் தொடங்கியது. லாக்டவுனால் வேலையை இழந்த சமயத்தில், என் பெட்ரூமிலே வீடியோக்கள் எடுத்தேன். என் முகமும், முகப்பாவனைகளும் தான் மக்களை சிரிக்க வைக்கிறது. உலகளாவிய டிக்டாக் சமூகத்தால் சாத்தியமான இந்த மைல்கல்லை அடைந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்.

சிறுவயதிலிருந்தே மக்களை மகிழ்விப்பதும், சிரிக்க வைப்பதும் எனக்கு பிடித்தமான ஒன்று. உலகத்திற்கு முன் என் பேஷனை பகிர்ந்து கொள்ள உலகளாவிய மேடை வழங்கியதற்காக டிக்டாக்கிற்கு நான் நன்றி கூறுகிறேன். என்னை உற்சாகப்படுத்த அழகான டிக்டாக் குடும்பத்தினர் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து என் கனவுகளை நோக்கி பணியாற்றுவேன்," என்று டிக் டாக்கிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Pic courtesy : Afro tech

கேபி, அவரது வீடியோக்களை ஷூட் செய்வதற்கு, நல்ல லைட்டிங், சூப்பர் எடிட்டிங், என எதையும் செய்வதில்லை. கேமிரா முன் அமர்ந்து யதார்த்தமாய் எந்த ஃபீல்டரும், எடிட்டிங்கும் இன்றி பதிவிடுவதே அவரது வீடியோக்களின் நம்பகத் தன்மையை அதிகரித்து மக்களை ரசிக்க செய்தது. கடந்தாண்டு மார்ச் மாதம் டிக்டாக்கில் முதன் முதலில் வீடியோ பதிவேற்றினார். தொடக்கத்திலே அப்லோடிய வீடியோக்கள் அனைத்தும் வியூஸ்களை அள்ளியது. அதுவே, இன்று கோடிகளையும் கொட்டுகிறது.

இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் ஹப்பின் கூற்றுப்படி,

டிக் டாக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் வந்தவுடன், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியுப் போன்றே ஒவ்வொரு பதிவினையும் பணமாக்கலாம். தனிநபரின் செல்வாக்கின் அளவைப் பொறுத்து, அவர்களால் விளம்பரப்படுத்தப்படும் ஒவ்வொரு பிராண்டட் வீடியோவிற்கும் நிறுவனங்கள் ரூ.15,000 முதல் 15 லட்சம் வரை கொடுக்கின்றனர் என்று குறிப்பிடப்படுகிறது.

அத்தளத்தின் கணிப்பின்படி, கேபி ஒவ்வொரு விளம்பர பதிவிற்கும், ரூ.30 லட்சம் முதல் ரூ.60லட்சம் வரை வருமானம் ஈட்டுவார் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தகவல் உதவி : Insider & LADbible