சமூக ஊடகத்தை பயன்படுத்தி உங்கள் சிறு வணிகத்தை வளர்க்க 5 வழிகள்!
ஆன்லைனே முதன்மையாக கருதப்படும் உலகில், உங்கள் வர்த்தகமும் அதற்கேற்ப செயல்பட வேண்டும். உங்கள் வர்த்தக வளர்ச்சிக்கு சமூக ஊடகத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள 5 வழிகள்.
எங்கே சாப்பிடுவது, எங்கே ஆடைகள் வாங்குவது அல்லது என்ன படம் பார்ப்பது போன்ற விஷயங்கள் தொடர்பான பரிந்துரைகளை பெறுவதற்கான இடமாக சமூக ஊடகம் அமைகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில், நுகர்வோரை எதிர்கொள்ளும் வர்த்தகங்கள், தங்கள் சமூக ஊடக உத்தியை தெளிவாக வகுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான், போட்டியை சமாளித்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
ஃபேஸ்புக், ஸ்னேப்சாட், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என பலவிதமான சமூக ஊடகங்கள் இணையவாசிகள் கருத்து பரிமாற்றத்திற்கு உதவுவதோடு, வர்த்தகங்கள் வாடிக்கையாளர்களை சென்றடையவும் உதவுகின்றன.
எனவே தான் அனைத்து விதமான நிறுவனங்களும், தங்கள் மார்க்கெட்டிங் பட்ஜெட்டில் கணிசமான தொகையை சமூக ஊடக உத்திக்காக செலவு செய்கின்றன. மேலும் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் சமூக ஊடகங்கள் தான், வர்த்தகங்கள் நிலைமையை சமாளிக்க கைகொடுத்தன.
ஆனால், சிறு தொழில் நிறுவனங்களுக்கு இது கடினமாக இருக்கலாம். மேலும் பழைய தலைமுறை தொழில்முனைவோர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்பாக சிக்கலையும் எதிர்கொள்ளலாம்.
இந்த நிலையை எதிர்கொண்டு, சிறு தொழில் நிறுவனங்கள் சமூக ஊடகங்களை சிறப்பாக பயன்படுத்துவதற்கான 5 வழிகளை பட்டியலிட்டுள்ளோம்.
சரியான சேவை
பலவகையான சமூக வலைப்பின்னல்கள் இருக்கின்றன என்றாலும் அவற்றில் சரியான சேவையை தேர்வு செய்வது முக்கியம்.
ஒவ்வொரு சமூக வலைப்பின்னல் சேவையும் வெவ்வேறு வகையான பயனாளிகளை இலக்காகக் கொண்டுள்ளன. பழைய தலைமுறையினர் ஃபேஸ்புக்கில் இருக்கலாம் என்றால் இன்ஸ்டாகிராம் இளம் தலைமுறைக்கான இடமாக இருக்கிறது.
எனவே, உங்கள் வர்த்தகத்திற்கு பொருந்தாத சமூக ஊடகத்துக்கான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் பயனில்லை. சரியான சமூக ஊடகத்தைத் தேர்வு செய்வதன் மூலம் உங்கள் வர்த்தக வளர்ச்சிக்கு சோஷியல் மீடியாவை பயன்படுத்திக்கொள்ளலாம். வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேறு வேறு சமூக ஊடகங்களைத் தேர்வு செய்யலாம்.
சிறு தொழில் முனைவர் என்ற முறையில் உங்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைப்பின்னல் சேவையை அறிந்திருக்க வேண்டும்.
திட்டம் தேவை
இலக்கு இல்லாத திட்டத்தால் எந்த பலனும் இல்லை. எனவே சிறு தொழில் முனைவர் என்ற முறையில், இலக்கு வாடிக்கையாளர்களைச் சென்றடைந்து வர்த்தக வளர்ச்சி பெற தெளிவான திட்டம் தேவை.
உங்கள் இலக்கு, தொடர்பு கொள்ளக்கூடியதாக, குறிப்பிட்டதாக, அளவிடக்கூடியதாக மற்றும் அடையக்கூடியதாக இருக்க வேண்டும். அளவுக்கு மீறிய இலக்குகளைக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பின் தொடர்பாளர்கள் எண்ணிக்கையை விட வர்த்தக உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பல்வேறு சமூக ஊடகங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கான தனி அம்சங்களையும் கொண்டுள்ளன.
ஈர்க்கும் உள்ளடக்கம்
உள்ளடக்கம் தான் ராஜா என சரியாக சொல்லப்படுகிறது. எனவே உங்கள் உள்ளடக்கம் வலுவாக இருக்க வேண்டும். பலவிதமான முறைகளில் உங்கள் உள்ளடக்கத்தை பரிசோதித்து பாருங்கள். ஈர்க்கும் உள்ளடக்கத்தை மக்கள் பார்த்து ரசிப்பார்கள். இல்லை எனில், உங்கள் பிராண்ட் செய்தி கண்ணில் பட வாய்ப்பில்லாமல் போகலாம்.
டிவிட்டர் தெரிவிக்கும் தகவல்படி, வீடியோ அல்லது புகைப்படம் கொண்ட டிவீட்டை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
சீரான தன்மை
சமூக ஊடகத்தில் நிலையான தன்மை பெற சீரான முயற்சி தேவை. உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டால் மட்டுமே வர்த்தகத்தை வளர்க்க முடியும்.
மிகையாக வேண்டாம்
சமூக ஊடகங்கள் அளிக்கும் எண்ணற்ற மார்க்கெட்டிங் வழிகள் திக்குமுக்காட வைக்கலாம். எனினும் அவை அனைத்தையும் பயன்படுத்த வேண்டியதில்லை. கட்டணச்சேவை மற்றும் இலவச பயன்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும்.
சமூக ஊடக செல்வாக்காளர்களை அமர்த்திக்கொள்வதிலும் கவனமாக செயல்பட வேண்டும். கட்டணத்திற்காக தான் உங்கள் பிராண்டை விளம்பரம் செய்கிறார்கள் எனும் தோற்றத்தை ஏற்படுத்தக்கூடாது.
சமூக ஊடகங்களில் பிராண்டை விளம்பரம் செய்வது என்பது, நெட்வொர்கிங் மற்றும் உறவை உருவாக்குவது சார்ந்தது. எனவே, இலக்கு வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர்சிம்மன்