‘அன்னையர் தினம்’ - ஊரடங்கில் அம்மாவிடம் அன்பை வெளிப்படுத்த சில குறிப்புகள்!

9th May 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

புதிதாக இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மாவின் ஸ்பரிசமும் அரவணைப்பும் மட்டுமே பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும். அத்தகைய மந்திரச் சொல் ‘அம்மா’.


தாய்பாசத்திற்கு ஈடு இணையே இல்லை. எல்லாக் குழந்தைக்கும் தன்னுடைய அம்மாதான் சூப்பர்ஹீரோ. அதேபோல் தாய்மை உணர்வுதான் தனக்குள் இருக்கும் வலிமையை உணரச் செய்கிறது என்று ஒவ்வொரு அம்மாவும் திடமாக நம்புகிறார்.


துரதிர்ஷ்ட்டவசமாக நாம் நம்முடைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நம் அம்மாவின் அன்பையும் அக்கறையையும் அங்கீகரித்துப் போற்றத் தவறிவிடுகிறோம். மனதில் நிறைந்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதுதானே சிறந்தது? அதற்கான ஆரம்பப்புள்ளியாக அன்னையர் தினம் அமையட்டும்.

1

ஊரடங்கு காரணமாக இன்று யாரும் வெளியில் செல்லமுடிவதில்லை. சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் என்ன?


வீட்டில் இருந்தவாறே அம்மாவின் மீது நமக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தலாமே! இதோ அதற்கான சில எளிய குறிப்புகள்:

காலை/மாலை உணவை தயாரித்து அசத்துங்கள்...

வீட்டில் எப்போதாவது அம்மா ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பணியில் மட்டும் ஈடுபடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? பல்வேறு பணிகளில் ஒரே சமயத்தில் சிதறாத கவனம் செலுத்தக்கூடிய ஒரே நபர் அம்மாதான். சமையல் செய்வது, லஞ்ச் பேக் செய்வது என தினமும் பரபரப்பாக, வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் தேவைகளையும் முகம் சுளிக்காமல் பூர்த்திசெய்வார்.


ஒரு மாறுதலுக்காக அன்னையர் தினத்தன்று காலை அவர் படுக்கையில் இருந்து எழுவதற்கு முன்பே காலை உணவைத் தயாரித்து கையில் கொடுத்து அசத்துங்கள். இல்லையா மாலை ஒரு சூப்பர் ஸ்னாக்ஸ் செய்து அசத்துங்கள்.

வீட்டு வேலைகளில் இருந்து ஓய்வு கொடுங்கள்

இல்லத்தரசியாக இருந்தாலும் வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் வீட்டில் அம்மாவிற்கு வேலைப் பளு அதிகம்தான். இருப்பினும் அத்தகைய வேலைகளுக்கான அங்கீகாரம் என்பது எப்போதும் கிடைப்பதில்லை. அம்மாவின் உழைப்பைப் பாராட்டவேண்டும் என்பதை ஒரு பொருட்டாகவே பலர் கருதுவதில்லை.


அவரது பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் அன்றாடப் பணிகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இதுவே சிறந்த துவக்கம்தான். நம் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவர்களது வழக்கமான பணிகளில் இருந்து சற்று ஓய்வு கொடுக்கலாம்.

கேக் தயாரித்து ஆச்சரியப்படுத்துங்கள்

வெளியில் இருந்து கேக் ஆர்டர் செய்வது பாதுகாப்பாக இல்லாத சூழலில் நிச்சயம் யூட்யூப் கைகொடுக்கும். இன்று அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருப்பதால் பலர் இதுவரை முயற்சி செய்யாத புதுமையான உணவு வகைகளைத் தேடிப் பிடித்து சமைத்து வருகின்றனர். எளிமையான தயாரிப்பு முறையைத் தேர்வு செய்து நீங்கள் உங்கள் அம்மாவிற்காக கேக் செய்யலாம்.

ஆன்லைன் பாடத்திற்கு பதிவு செய்யலாம்

பெரும்பாலான பெண்களுக்கு திருமணம், குழந்தை பிறப்பு போன்றவை அவர்களது பயணத்தில் சிறு இடைவெளியை ஏற்படுத்திவிடும். இலக்கு நோக்கிய தங்களது பயணத்தை இவர்கள் தொடர விரும்பினாலும் குடும்பப் பொறுப்புகள் அதற்குத் தடையாக இருந்துவிடுவதுண்டு. மேற்படிப்பு படிப்பதையோ விருப்பமான பொழுதுபோக்கையோகூட கைவிடவேண்டிய நிலை ஏற்படுகிறது.


உங்கள் அம்மாவின் தனித்திறனையும் ஆர்வத்தையும் கண்டறியுங்கள். அது தொடர்புடைய ஆன்லைன் வகுப்பிற்கு ஏற்பாடு செய்து அதையே பரிசாகக் கொடுங்கள். பல்வேறு துறைகளின்கீழ் ஏராளமான பாடங்கள் ஆன்லைனில் தொகுத்து வழங்கப்படுகிறது.

கடிதம் எழுதி வீடியோவாக பதிவு செய்யுங்கள்

கடிதம் எழுதுவது பழமையான முறையாக இருப்பினும் அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது சிறந்ததாக இருக்கும். இதை மேலும் சிறப்பாக்கும் வகையில் பழைய புகைப்படங்கள் சிலவற்றை சேகரித்து வீடியோவாக தொகுத்து அவற்றையும் இணைத்துக் கொள்ளலாம்.


இதுபோன்ற பழைய நினைவலைகள் எப்போதும் மனதிற்கு நெருக்கமான உணர்வை ஏற்படுத்தும். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வீடியோவை பார்க்கலாம். உங்கள் அம்மாவும் குடும்பத்தினரும் தொலைவில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்புவதை இமெயில் மூலம் அனுப்பலாம்.


தமிழில்: ஸ்ரீவித்யா

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close