தள தள தக்காளி… கிறு கிறுக்க வைக்கும் விலை: டாக் ஆஃப் தி டவுன் ஆன ‘தக்காளி’

தாறுமாறாக ஏற்றம் காணும் தக்காளியின் விலை ஷாக்காக இருந்தாலும், பலருக்கும் கன்டென்ட்டாக மாறி இருக்கிறது.
38 CLAPS
0

ஷாக்கைக் குறை...! ஷாக்கைக் குறை...! என்று தினசரி விலையை கேட்டவுடனே ஷாக் கொடுக்கும் பொருட்களான பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றோடு சேர்ந்திருக்கும் லேட்டஸ்ட் பொருள் தக்காளி.

பெண்களின் சமையலோ, பேச்சுலர்ஸ் சமையலோ, ஹோட்டல் சமையலோ எதுவாக இருந்தாலும் தக்காளியின் பங்கு அதிகமாக இருக்கும். அட ஒரு தக்காளி இருந்தா போதுங்க ரசத்தை வெச்சிட்டு நிம்மதியா சாப்பிடலாம் என்று எண்ணும் பலரின் நினைப்பில் நெடியை தூக்கி விட்டிருக்கிறது தக்காளி விலையேற்றம்.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெய்த கனமழையின் எதிரொலியாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. தமிழகத்திற்கு வரும் பெரும்பாலான காய்கறிகள் ஆந்திராவில் இருந்தே கோயம்பேடு சந்தைக்குக் கொண்டு வரப்படுகிறது. கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழகத்திற்கு காய்கறிகளின் வரத்து தடைபட்டுள்ளது.

மற்றொரு புறம் தொடர் மழை எதிரொலியாக செடிகள் அழுகி விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால்,

“ரூ.60ல் தொடங்கிய ஒரு கிலோ தக்காளியின் விலையேற்றமானது தற்போது படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.150 வரை விற்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.125க்கு விற்பனை செய்யப்பட்டாலும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் தேவையை பொருத்து சென்னையின் புறநகர் பகுதிகளில் ரூ.150 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.”

கூகுளாண்டவர்

ஒருபுறம் தக்காளி விலையானது கிறுகிறுக்க வைத்தாலும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் புதுசு புதுசாக யோசிக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல கன்டென்ட்டாக சிக்கி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் கூகுள் ஆண்டவரை தட்டி யோசனை கேட்பவர்கள் இப்போது மட்டும் சும்மா இருந்து விடுவார்களா என்ன?

‘தக்காளி...’ என்று டைப் செய்தால் போதும் கூகுளாண்டவர் ’தக்காளி இல்லாத சட்னி’, ’தக்காளி இல்லாத ரசம்’, ’தக்காளி இல்லாத குழம்பு’ என்று ஒரு பட்டியலை இறக்கிவிடுகிறார்.

தக்காளிக்கு லோனா?

தக்காளியை லோன் போட்டு தான் வாங்கனும் போல என்று நக்கலாக சொல்லி வந்தவர்களுக்கு அதையே சுவாரஸ்யமான கார்ட்டுனாக மாற்றி விட்டது இந்தியா டுடே. நீங்களும் இந்த வீடியோவ பார்த்து உங்க மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.

தக்காளி சட்னிக்கு bye bye

என்னது நோ தக்காளி சட்னியா? ஆமாங்க ஒரே நைட்டில் ஓட்டல்கள் அனைத்தும் தக்காளி சட்னிக்கு byebye சொல்லிவிட்டனர். விலை கட்டுபடியாகததால் பல ஓட்டல்கள் தக்காளி சட்னிக்குப் பதிலாக தேங்காய் சட்னி, வெங்காய சம்னி, புதினா சட்னிக்கு தாவிவிட்டது.

ஊறுகாய் பாக்கெட்டில் தக்காளி

பெட்டிக்கடைகள் முதல் பலசரக்கு கடைகள் வரை ஏழைகள் குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்துவதற்காக ஊறுகாய், கடுகு உள்ளிட்டவை விற்பனைக்கு தொங்க விடப்பட்டிருக்கும்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் படிக்கல் என்ற ஊரில் இரண்டு தக்காளிகளின் விலை ரூ.18 என்று ஊறுகாய் பாக்கெட்டுகளைப் போல விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஒரே ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் செம வைரலாகி வருகிறது.

பாதி அழுகிய தக்காளி என்றால் தூக்கி வீசிவிட்டு சமைத்தவர்களைக் கூட கெட்டுப்போன பகுதியை மட்டும் வெட்டி விட்டு பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளி இருக்கிறது விலையேற்றம்.

தக்காளிக்கு பிரியாணி இலவசம்

வந்தவாசி சாலை சோத்துப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆம்பூர் பிரியாணி கடையானது இன்று ஒரு நாளைக்கு மட்டும் அறிவித்துள்ள வித்தியாசமான தக்காளி ஆஃபர் பலரின் செல்போன்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

பிரியாணியில் இருந்து தூக்கி போடப்படும் தக்காளிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள். ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணியை இலவசமாக வாங்கிச் செல்லலாம். அட இது வியாபாரத்துல புதுசு இல்லைங்க நம்ம காலம் காலமாக பின்பற்றும் பண்டமாற்று முறைதானாம். விலையேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இதுவே சரியான வழி என்கிற அவர்களின் கேப்ஷன் ஐடியா செம!

தக்காளி மட்டுமல்ல மற்ற காய்கறிகளின் விலைகளும் கூட அதிகரித்தே இருக்கிறது. பருவமழை முடியும் வரை இந்த விலையேற்றமானது நீடிக்கும் செடிகளில் புதிய காய்ப்பு வந்து வரத்து அதிகரிக்கும் வரை விலையேற்றத்தை தடுக்க முடியாது என்கின்றனர் வியாபாரிகள்.

கொரோனா பாதிப்பு, பருவமழை பாதிப்பு என பல நெருக்கடிகளை சந்தித்து வரும் மக்களுக்கு தக்காளி விலையேற்றமும் மாதாந்திர செலவு பட்ஜெட்டில் சிக்கலை ஏற்படுத்துவதால் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Latest

Updates from around the world