Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

2010-2019 தசாப்தத்தில் இந்தியாவை உலுக்கிய தலைப்புச் செய்திகள்!

கடந்த 10 ஆண்டில் இந்தியாவையே உலுக்கிப் போடும் பல சம்பவங்கள் நடந்தன. ஆட்சி மாற்றம், பணமதிப்பிழப்பு, நிர்பயா கூட்டுப் பலாத்காரம், விண்வெளி சாதனைகள், தலைமை இழந்த தமிழகம், என பத்தாண்டின் தலைப்புச் செய்திகள் ஒரு ரவுண்ட் வருவோம்...

2010-2019 தசாப்தத்தில் இந்தியாவை உலுக்கிய தலைப்புச் செய்திகள்!

Thursday January 02, 2020 , 10 min Read

காலங்கள் வெகு வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள், மாற்றங்கள், மகிழ்ச்சி, துக்கம் என மனிதர்கள் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.


திரும்பிப் பார்ப்பதற்குள் 10 ஆண்டுகள் முடிந்து விட்டதா? முகநூல் பக்கங்களில் ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’னு 2010 – 2019 புகைப்படங்களைப் பகிர்ந்து சிலாகித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் என ஆண்டின் முடிவு பலவிதமான நினைவுகளை ஏற்படுத்துகின்றன.

decade

கடந்த தசாப்தத்தில் இந்தியாவையே உலுக்கியெடுத்த பல சம்பவங்கள் நடந்து முடிந்தது. 10 ஆண்டில் நாட்டைப் புரட்டிப் போட்ட 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.


1. ‘மோடி அலை’


குஜராத் மாநிலத்தின் 3 முறை முதலமைச்சர், அந்த மாநிலத்தின் வளர்ச்சியில் பெரும் பங்குவகித்தவர் பாஜக பக்தியாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர் நரேந்திர மோடி. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்க்க 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை களமிறக்கியது பாஜக.


காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடு புகார்களை கையில் எடுத்து பிரச்சாரத்தை மேற்கொண்டது பாஜக. ‘இந்த முறை மோடி சர்க்கார்’ என்ற வாசகத்தோடு நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தை எப்படி வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார் என்பதை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தனர் பாஜகவினர்.


‘இனி நல்ல காலமே’, அனைவருக்கும் வளர்ச்சி என்ற மந்திரங்கள் வெற்றி கண்டன. நாடு முழுவதும் ‘மோடி அலை’ எழும்ப பாஜக வரலாற்றிலேயே இல்லாத வெற்றியாக 272க்கும் மேற்பட்ட லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது தாமரைக் கட்சி.

மோடி

1984க்குப் பிறகு ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றது 2014ம் ஆண்டில் தான். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 543 பாராளுமன்ற இடங்களில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியோடு 2014ம் ஆண்டு நாட்டின் 14வது பிரதமராக அரியணை ஏறினார் நரேந்திர மோடி.


5 ஆண்டு ஆட்சியில் நாட்டின் மற்ற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் பாஜக தொடர் வெற்றிகளைக் குவித்தது. பாஜகவிற்கு ஏறுமுகமாகவும், காங்கிரஸ் கட்சிக்கு இறங்குமுகமாகவுமே இந்த 10 ஆண்டுகள் கடந்தன.


மக்களிடம் அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றியும், சர்ச்சைகள் பலவற்றிலும் சிக்கி 5 ஆண்டுகள் முடிந்த நிலையில், 2019ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மோடி அரசை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


2014ல் மோடி அலை என்றால் 2019 தேர்தலில் சுனாமியே (TsuNamo) வந்தது. பாஜக மட்டுமே 300க்கும் மேற்பட்ட இடங்களிலும் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து 350 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. 2வது முறையாக நரேந்திர மோடி அரசு ஆட்சியமைத்து 6 மாதங்கள் உருண்டோடி விட்டது.


2. விண்வெளிச் சாதனைகள்


2013ம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க்கு ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது. இந்திய விஞ்ஞானிகளின் இந்த சாதனை சர்வதேச விண்வெளி நிறுவனங்களால் உற்று நோக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் குறைந்த செலவில் இந்த திட்டம் வெற்றிபெற்றதே.


அமெரிக்காவின் நாசா செவ்வாய்க்கு அனுப்பிய மேவன் விண்கலனை விட 10 மடங்கு செலவு குறைவு இஸ்ரோ அனுப்பிய மங்கல்யான். இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.


மங்கல்யானைத் தொடர்ந்து 2017 பிப்ரவரியில் 104 செயற்கைகோள்களைச் சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி- சி37 ராக்கெட் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. 18 நிமிடங்களில் 104 செயற்கைகோள்களும் தனித்தனியே பிரிந்து சென்று இலக்கை அடைந்து அதன் பணிகளைச் செய்தன. இந்த ராக்கெட் ஏவுதல் சர்வதேச விண்வெளி அரங்கில் இஸ்ரோவின் தலையை நிமிரச் செய்தது.

இஸ்ரோ

இஸ்ரோ 10 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் வளர்ந்து வருவதை மற்ற நாடுகள் கவனித்து வந்த நிலையில் சவாலான திட்டமான நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு செய்யும் பணியில் இறங்கினர் விஞ்ஞானிகள். சந்திராயன்-1 வெற்றி பெற்ற நிலையில் சந்திராயன் -2 விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பொருத்தி நிலவின் தென்துருவப் பகுதியில் அதனை தரையிறக்கி ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.


சந்திராயன்–2 திட்டமிட்டபடி செயல்பட்ட நிலையி கடைசி 2 நிமிடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் ஏற்பட்ட கோளாறால் 95%த வெற்றியை மட்டுமே இஸ்ரோ பெற்றது. எனினும் இதில் என்ன தவறு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து எதிர்காலத்தில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.


மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டதிற்கு 2022ஐ இலக்காக வைத்துள்ளது இஸ்ரோ. செவ்வாய்க்கு 2வது விண்கலன், வெள்ளிக் கோளில் ஆய்வு, சூரியனை மிக அருகில் சென்று ஆய்வு செய்தல் என்று பல்வேறு எதிர்காலத் திட்டங்களை இலக்காக வைத்துள்ளது இஸ்ரோ.


3.பணமதிப்பிழப்பு


2016, நவம்பர் 8 இரவு 8 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது வெளியிட்ட அறிவிப்பு ஆன்றோர், சான்றோர் முதல் அடித்தட்டு மக்கள் வரை கதிகலங்க வைத்தது. உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பதாகவும், பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யும்படியும் அறிவித்தார் பிரதமர்.


கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரவும், தீவிரவாதிகளிடம் இருக்கும் பண நடமாட்டத்தை நிறுத்தவும் இந்த அறிவிப்பு எனவும் நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் இந்த சிரமத்தை பொருத்துக் கொள்ள வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் முதல் சுமார் 1 மாதத்திற்கு ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் எப்போது பார்த்தாலும் மனிதத் தலைகளாகவே இருந்தன.

ruppee notes

பணப்புழக்கம் குறைந்ததால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் வேகமெடுத்தன. ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் வங்கி மற்றும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க நிபந்தனைகள் போடப்பட்டன, எங்கள் பணத்தை எடுப்பதற்கு எங்களுக்கே கட்டுப்பாடா என சிலர் கொதித்தனர்.


பிரதமர் மோடியும், பாஜகவினரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி என்று கூறிக்கொண்டாலும், எவ்வளவு கறுப்புப்பணம் வெளிவந்துள்ளது, மதிப்பிழக்கப்பட்ட நோட்டுகள் எவ்வளவு ரிசர்வ் வங்கியிடம் இருக்கிறது என்பது பற்றி தெளிவான தகவல்களை மோடி அரசால் வெளியிடமுடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் பாஜகவை குற்றம்சாட்டுகின்றன.


பணமதிப்பிழப்பு நடவடிக்கை பாஜகவிற்கு பின்னடைவாக இருக்கும் கருதிய நிலையில் அவர்களின் நினைப்பை தவிடுபொடியாக்கி 2017 உத்திரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. மக்கள் பாஜகவை வெறுக்கவில்லை என்பதன் அடையாளமாக அந்தக் கட்சியின் இந்த வெற்றியைக் கொண்டாடினர்.


4. நிர்பயா கூட்டுப் பலாத்காரம், வெகுண்டெழுந்த இந்தியா


டிசம்பர் 16, 2012 தெற்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி 6 பேர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். 6 மிருகங்கள் சேர்ந்து அந்தப் பெண்ணை ஒரு உயிர் என்று கூட கருதாமல் தங்களது காமக்கொடூரத்தை அரங்கேற்றின. பெண் உறுப்பில் இரும்புத் துண்டை துளைத்து தங்களது பாலியல் வெறியாட்டத்தை ஆடிய காமுகர்களால் கசக்கி வீசப்பட்ட அவள், 13 நாட்கள் மனஉறுதியோடு மருத்துவமனை சிகிச்சையில் இருந்த போதும் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.


இளம்பெண்ணிற்கு நீதி கேட்டு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் போராட்டம் வெடித்தது, ‘நிர்பயா என்று பெயரிடப்பட்ட இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அக்ஷய் தாகூர், வினய் ஷர்மா, பவன் குப்தா மற்றும் முகேஷிற்கு 2013ம் ஆண்டில் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பேருந்து ஓட்டுநர் ராம்சிங் திஹார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இந்தக் குற்றத்தில் தொடர்புடைய 18 வயதிற்குக் குறைவான 6வது குற்றவாளி 3 வருட சிறைத்தண்டனைக்குப் பிறகு விடுதலையானார். சிறார் குற்றத் தண்டனைச் சட்டங்களில் திருத்தம் தேவை என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் 4 முக்கிய குற்றவாளிகளுக்குத் தூக்குதண்டனை விதித்த போதும் அவர்கள் இதுவரை தூக்கிலிடப் படவில்லை. 10 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் அவர்களின் தண்டனை நிறைவேற்றத்திற்காக நிர்பயாவின் பெற்றோர் காத்திருக்கின்றனர்.


5. உலகக் கோப்பை வென்ற இந்தியா


1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான அணி உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற பிறகு 2011ம் ஆண்டு தான் இந்தியாவிற்கு அந்த வெற்றியானது கிட்டியது. இலங்கை, வங்கதேசம், இந்தியா இணைந்து நடத்திய 10வது உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிக் கோப்பையை தாயகம் எடுத்து வந்தது இந்திய கிரிக்கெட் அணி.


சச்சின் டெண்டுல்கர் விளையாடிய கடைசி கிரிக்கெட் போட்டி என்பதால் ஒரு உணர்ச்சிப்பூர்வமான தொடராக இது அமைந்தது. டாஸை வென்ற இலங்கை அணி 50 ஓவர்களில் 274 ரன்களை குவித்தது. 103 ரன்கள் குவித்து ஜெயவர்த்தனே ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். துரதிஷ்டவசமாக நட்சத்திர வீரர்களான சச்சின் மற்றும் சேவாக் 31/2 ஆட்டமிழக்க சிக்கலில் மாட்டிய இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர் எம்எஸ் தோனியும் (91 ரன்கள், நாட் அவுட்), கவுதம் கம்பீரும் (97 ரன்கள்).

world cup 2019

Photo Courtesy : News 18

கைக்கு எட்டும் தூரத்தில் வெற்றி இருக்க, ஒரு முனையில் தோனி, மற்றொரு முனையில் யுவராஜ் சிங். 11 பந்துகள் மட்டுமே எஞ்சிய இருந்த நிலையில் தோனி அடித்த சிக்ஸர் மும்பை வானத்தை மட்டுமல்ல வான்கடே மைதானத்தையும் அமைதியில் ஆழ்த்தியது. பந்து பறந்து சென்ற வேகத்தில் மைதானத்தின் நிசப்தங்கள் அனைத்தும் ஆரவாரங்களாக எழுந்தன. உலகக்கோப்பை வெற்றியை நாடே இரவு முழுவதும் கொண்டாடியது.


6. சர்ஜிகல் ஸ்டிரைக்


இந்தியாவின் தேசப் பாதுகாப்பு மற்றும் உள்துறைக் கொள்கையில் அண்டை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு தக்க பதிலடி இந்த 10 ஆண்டுகளில் கொடுக்கப்பட்டது. தீவிரவாதத்தைக் கொண்டு இந்தியாவை மிரட்டிப் பார்க்க நினைப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று சூலுரைத்தது இந்தியா.


எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூடுகள் : செப்டம்பர் 2016ல் இந்தியா, ஜம்மு காஷ்மிரின் எல்லைக்கோட்டில் தீவிரவாத முகாம்களை குறி வைத்து சர்ஜிகல் தாக்குதல்களை நடத்தியது. தீவிரவாத அமைப்புகள் மற்றும் முகாம்கள் பற்றி கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் தாக்குதலானது நடத்தப்பட்டது. உரி ராணுவ மையத்தை குறி வைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாகவும் இந்த சர்ஜிக்கல் தாக்குதலானது நடந்தது. இதில் டஜன் கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மிரின் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.


பாலகோட் விமானதாக்குதல் : பிப்ரவரி 26,2019ல் இந்திய விமானப்படை பாலகோட் விமான தாக்குதலை அரங்கேற்றியது. பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்–ஈ- முகமது அமைப்பின் முகாமை குறிவைத்து இந்த விமானப்படை தாக்குதலானது நடந்தது. இந்த தாக்குதல் நடந்த 2 வாரங்களுக்கு முன் அந்த அமைப்பு ஜம்மு காஷ்மிரின் புல்வாமா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்களின் வாகனத்தை நோக்கி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.


டோக்லாம் எல்லைப்பிரச்னை : 2017 ஜூன்–ஆகஸ்ட் இடைப்பட்ட காலத்தில் இந்தியா சீனா இடையே 73 நாட்கள் சிக்கிம் எல்லையான டோக்லாமில் எல்லைப் பிரச்னை எழுந்தது. பூடான், சிக்கிம், சீனா இடையே சட்ட விரோதமாக சீன அரசு சாலையை அமைக்க ஆட்களை களமிறக்கியது. இதனால் டோக்லாமில் போர் பதற்றச் சூழல் ஏற்பட்டது, இந்திய ராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டது.


சீனா தனது எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே சாலையை அமைப்பதாகவும் ராணுவத்தைத் திரும்பப்பெறவும் கேட்டுக் கொண்டது. டோக்லாம் தங்களுக்கு சொந்தமான பகுதி என பூடான் கூறியது, ஆனால் சீனா அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக நுழைய முயன்றது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா, சீனா இரண்டும் டோக்லாமில் இருந்து படைகளை திரும்பப் பெற ஒப்புக் கொண்டன.


7. சபரிமலையில் பெண்கள்


10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கியது. 2018ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று உத்தரவிட்டது. மத வழிபாடு நடத்தும் இடத்தில் கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது, சடங்குகள் என்ற பெயரில் தீண்டாமையை ஊக்குவிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வில் இருந்த 4 நீதிபதிகள் தெரிவித்தனர். அதே அமர்வில் இடம்பெற்றிருந்த பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா, மதங்கள் சார்ந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று தீர்ப்பளித்திருந்தார்.

Sabarimala

ஐயப்பன் கோவிலில் பல ஆண்டுகளாக மாதவிடாய் வயதில் இருக்கும் பெண்களை அனுமதிப்பதில்லை. கன்னிச்சாமியாக ஐயப்பன் கருதப்படுவதால் இந்த சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது. மலை உச்சியில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஆண்டில் 127 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் ஐயப்பன் கோவில் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து 2019ம் ஆண்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் 7 நீதிபதிகள் அமர்வு இதனை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று முஸ்லிம் பெண்கள் தர்காவிற்குள் செல்வதற்கும் பார்சி இனப் பெண்கள் அந்த மதம் சாராத ஆண்களைத் திருமணம் செய்வதற்கும் இருக்கும் பாகுபாடுகளை களையும் விதமான சட்டத்திட்டங்களை நீதிபதிகள் அமர்வு வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


8. முற்றுப்புள்ளி கண்ட அயோத்தி விவகாரம்


எத்தனை ஆண்டுகள் முடிந்தாலும், புதிய ஆண்டுகள் பிறந்தாலும் தலைப்புச் செய்தியில் இருந்து மாறாமல் இருந்தது அயோத்தி நில விவகாரம். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பல ஆண்டுகளாக இருந்த பதற்றமான பிரச்னைக்கு 2019ம் ஆண்டில் முடிவு தந்தது சுப்ரீம் கோர்ட். 16ம் நூற்றாண்டில் அயோத்தியில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துக்களுக்கு சொந்தமானது. அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.

ayodhya

படஉதவி : இந்தியா டுடே

இதனால் 1992ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் இந்து-முஸ்லிம் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 2,000 பேர் உயிரிழந்தனர். அப்போது முதல் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் 5 நீதிபதிகள் அமர்வு நடத்திய விசாரணையின் முடிவில் தொல்லியல் துறை தகவல்களின் படி மசூதி அமைந்திருந்த இடத்தில் வேறு கட்டுமானம் நடந்திருப்பது உறுதியாகிறது. ஆனால் அது கோவிலா என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை, எனவே நம்பிக்கை அடிப்படையில் அந்த இடம் ராம் லல்லா அமைப்பிற்கு சொந்தமானது என்றும் முஸ்லிம்களுக்கு உத்திர பிரதேச மாநிலத்தில் வேறொரு பகுதியில் நிலம் வழங்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


9. ஜம்மு காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து ரத்து


இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்தாலும் ஜம்மு காஷ்மிருக்கு தனிச் சட்டம், சிறப்பு அந்தஸ்து என்று இயங்கி வந்தது. காஷ்மிரிகளுக்கு தனிக் குடியுரிமை, அரசுச் சலுகைகளில் சிறப்புச் சலுகை, பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது, வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க முடியாது என்பன உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்துகளைத் தரும் சட்டம் 370 பிரிவு 370 மற்றும் 35ஏவை 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாஜக அரசு ரத்து செய்தது.


இந்தியச் சட்டம் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் என்றும் ஐம்மு காஷ்மிர் மற்றம் லடாக் இரண்டும் யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.


10. தலைமை இழந்த தமிழகம்


‘தாயை இழந்த தமிழகம்’ என்று அதிமுகவினரை புலம்ப வைத்துவிட்டது இந்த தசாப்தம். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இயற்கை எய்தினார்.


ஜெயலலிதா வாழும் காலத்தில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல மர்மங்கள் இருந்தது போலவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடைசி 75 நாட்களில் நடந்தவையும் பல சந்தேகங்களுக்கு இடமானவையாகவே இருந்துவிட்டது. ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பி விடுவார் என்று சொன்ன அப்பல்லோ நிர்வாகத்தின் முதல் அறிக்கையே மக்கள் பயந்து விடக்கூடாது என்பதற்காக வெளியிடப்பட்டது என்று ஜெ. இறப்பிற்குப் பின்னர் அவர்களே ஒப்புகொண்டனர்.

jayalalitha

ஜெயலலிதாவின் இறப்பிற்குப் பிறகு அதிமுக 3ஆகப் பிரிந்து பல பல்டிகள், கட்சித் தாவல்கள், கைகுலுக்கல்கள் நடந்து தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியும் ஆட்சியும் நடந்து வருகிறது.


2017ம் ஆண்டு முதலே தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் உடல்நலன் பாதிக்கப்பட்டது. ட்ரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்ட நிலையில் ஜூலை 26ம் தேதி உடல்நலக்குறைவால் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடார்.


எனினும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக காய்ச்சல், சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. மருத்துவர்களின் போராட்டம் கைகொடுக்காமல் இறுதியில் ஆகஸ்ட் 7ம் தேதி மாலையில் கருணாநிதி உயிர் பிரிந்தது.


81 ஆண்டுகால தமிழக அரசியலின் கதாநாயகன், 5 முதல்வர், அண்ணாவின் இளவலின் உயிர் பிரிந்தது தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியது. திராவிடக் கட்சிகளின் மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத அரசியல் களத்தை இந்த தசாப்தத்தில் தமிழக மக்கள் கண்டுள்ளனர்.

11. சென்னை பெருவெள்ளம்


100 ஆண்டுகளில் இல்லாத அளவு பேரழிவை 2015ம் ஆண்டின் சென்னைப் பெருவெள்ளம் தந்துவிட்டுச் சென்றது. 3 மாதத்தில் பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Chennai floods

சென்னை வெள்ளத்தால் சுமார் 18 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 6,605 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர், 1715 பேர் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள் களத்தில் இறங்கின. சென்னை நகரமே வெள்ளக்காடாக இருந்தது. 5 நாட்கள் வரை மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். மின்சாரம், செல்போன் வசதிகளும் முடங்கின. சாதாரண மழை என்றாலே சென்னைவாசிகள் அரண்டுபோகும் அளவிற்கு மிரட்சியைத் தந்துவிட்டு சென்றது சென்னை பெருவெள்ளம்.


12. அத்திவரதர் தரிசனம்


40 ஆண்டுகளுக்குப் பிறகு 2019ம் ஆண்டில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. 108 திருப்பதிகளில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி மரத்தினாலான பெருமாள் சிலை தீர்த்தக்குளத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டுள்ளது.


40 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த அத்திவரதர் சிலையானது வெளியே எடுக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்படும். ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்ற அத்திவரதர் தரிசனத்தில் ஜனாதிபதி, பிரதமர் என நாட்டின் முக்கியத் தலைவர்கள் தொடங்கி சராசரி மனிதர்கள் வரை தரிசித்து விட்டு சென்றனர். 48 நாட்கள் வைபவத்தில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தரிசித்து விட்டு சென்றனர்.