'சுற்றுலாவில் மலர்ந்த காதல்' - இந்திய நபரை மணந்த பாரிஸ் பெண்!

இந்திய முறைப்படி நடந்த திருமணம்!
1 CLAP
0

‘காதலுக்கு ஜாதியோ மதமோ இல்லை’ என்று கூறப்படுவதுண்டு. இதற்கு உதாரணமாய் அமைந்திருக்கும் திருமணம் பற்றி இதோ. பாரிஸில் வசிக்கும் மேரி லோரி ஹெர்ல். தொழிலதிபரான இவர், ஆறு ஆண்டுகள் முன்பு சுற்றுலாவுக்காக இந்தியா வந்திருந்தார். அப்போது அவருக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர் பீகாரைச் சேர்ந்த ராகேஷ் குமார். தலைநகர் டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தபோது தான் இருவரும் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு அவர்களை நெருக்கமாக்கியது. மேரி பாரிஸ் சென்ற பிறகும் ராகேஷ் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். இந்த சமயத்தில் இருவருமே தங்கள் மனதுக்குள் இருந்த காதல் உணர்வை தொலைபேசியில் வெளிப்படுத்தினர்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மேரி ராகேஷை பாரிஸுக்கு அழைத்துக் கொண்டு தன்னுடன் ஜவுளித் தொழிலைத் தொடங்க வைத்திருக்கிறார். ஒன்றாக வேலை செய்யத் தொடங்கிய பிறகு, அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, சில தினங்கள் முன் இந்தியா வந்து இந்திய முறைப்படி மேரி - ராகேஷ் தம்பதி திருமணம் செய்துகொண்டனர்.

ராகேஷின் தந்தை ராம்சந்திரா ஷா கூறுகையில்,

“மேரி இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்து திருமணம் செய்துள்ளார். தங்கள் மகளின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, மேரியின் பெற்றோரும் அவளுடன் சேர்ந்து இந்தியாவிற்கு வந்தனர். இரு வீட்டாரின் சம்மதத்திற்குப் பிறகு, மேரி மற்றும் ராகேஷ் இந்து முறைப்படி திருமணம் நடந்தது," என்றுள்ளார்.

ஹல்தி முதல் மெஹந்தி வரை அனைத்து இந்திய திருமண சடங்குகளும் இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ளன. மேலும், திருமண விழாவிற்குப் பிறகு இந்தி மற்றும் போஜ்புரி பாடல்கள் ஒலிபரப்பட்டு மணமக்கள் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

முன்னதாக, ராகேஷ் பாரிஸ் பெண்ணை திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் பரவவும், திருமணத்தை காண அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்துள்ளனர். திருமணம் முடிந்த மறுநாளும், வெளிநாட்டு மணமகளை பார்க்க உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் குவிந்து வருகின்றனர்.

தகவல் உதவி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் | தமிழில்: மலையரசு

Latest

Updates from around the world