வீராணம் ஏரிக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் - ‘பொன்னியின் செல்வன்’ தொடர்பா?
October 07, 2022, Updated on : Fri Oct 07 2022 13:01:31 GMT+0000

- +0
- +0
தமிழ் சினிமாவில் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலைப் படமாக்க பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல் இயக்குநர் இமயம் பாரதிராஜா வரை பலரும் முயன்ற கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை திரையில் காட்டிய பெருமை மணிரத்னத்திற்கு கிடைத்துள்ளது.
கடந்த 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘பொன்னியின் செல்வன் பாகம் - 1’ திரைப்படம் இதுவரை 300 கோடியைக் கடந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்ஷன்ஸ் இணைந்து தயாரித்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சோழ தேசம் நோக்கிப் பயணம்:
தமிழக மன்னர்களின் ஆட்சி காலத்திலேயே சோழர்களின் ஆட்சிக்காலம் பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள தஞ்சாவூர், திருச்சி, திருவரங்கம், திருக்காட்டுப்பள்ளி, ஒரத்தநாடு, கும்பகோணம், ஆலங்குடி, திருவாரூர், மன்னார்குடி, கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம், சீர்காழி, பட்டீஸ்வரம், திருக்கருக்காவூர், தேரழந்தூர், திருவிடைமருதூர் ஆகியவை சோழர்கள் ஆட்சி செய்த பகுதிகளாக கருதப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றிருந்த கடம்பூர், பழையாறை, பழுவூர் ஆகிய இடங்கள் பற்றி அறிந்து கொள்வதிலும், அதன் தற்போதைய நிலையை அறிந்து கொள்வதிலும் தமிழக மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தஞ்சையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாப் பயணிகளாக குவிந்து வரும் நிலையில், சென்னையின் மிக முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரியும் சத்தமே இல்லாமல் பிரபலமடைந்து வருகிறது.
வீராணம் ஏரி:
பொன்னியின் செல்வன் நாவலின் முதல் பாகத்தின் முதல் அத்தியாயம் தொடங்கும் இடமே வீராணம் ஏரி தான் என்பதால் தற்போது அங்கு மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகேயுள்ளது வீராணம் ஏரி. காஞ்சிபுரத்தில் இருந்து குதிரையில் கிளம்பிய வந்தியத்தேவன், தனது பயணக் களைப்பையும் கடந்து வீராணம் ஏரியின் அழகை மெய் மறந்து ரசித்ததாக பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி குறிப்பிட்டிருப்பார்.

கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி
தற்போது பொன்னியின் செல்வன் படம் வெளியானதை அடுத்து வீராணம் ஏரியை நேரில் காணவும், அதன் அழகில் மெய் மறக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
அதற்கு அடுத்த படியாக கடலூரில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான வீரநாராயண கோயிலை நோக்கியும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
ஏனெனில், பொன்னியின் செல்வன் நாவலின் முக்கியக் கதாபாத்திரமான ஆழ்வார்க்கடியான் நம்பி இந்த தலத்தில் இருந்து தான் அறிமுகமாவார். எனவே இக்கோயிலைக் காணவும், வீரநாராயண பெருமாளை தரிசிக்கவும் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

வீரநாராயண பெருமாள் கோயில்
இதற்கு அடுத்த படியாக கடலூர் மாவட்டம் மிராளூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான உடையார்குடி அனந்தீஸ்வரர் கோயிலைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இக்கோயிலில் உள்ள கல்வெட்டில் தான் ஆதித்த கரிகாலனை கொலை செய்தவர்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்தும் இடம் பெற்றுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கோயில் இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது சுற்றுலா பயணிகளின் வருகையால் மீண்டும் களை கட்டத்தொடங்கியுள்ளது.
கவனம் ஈர்க்கும் கடம்பூர் மாளிகை:
காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட வந்தியத்தேவன் வீராணம் ஏரி, வீரநாராயணர் கோயில் ஆகியவற்றைக் கடந்து முதன் முதலில் வந்து சேரும் இடம் கடம்பூர் மாளிகை. காட்டுமன்னார் கோயிலில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழகடவூர் என்கிற இடத்தில் தான் சம்புவராயர் மாளிகை இருந்ததாகக் கூறப்படுகிறது.

காட்டுமன்னார் கோயில் ஸ்ரீருத்ரபதி கோயில்
இந்த இடத்தில் தற்போது ஸ்ரீருத்ரபதி கோயில் மட்டுமே உள்ளது. அந்த கோயிலின் கருவறைக்கு அருகேயுள்ள சுரங்கப்பாதை, ஆதித்த கரிகாலன் கொலையுண்ட போது அதுபற்றி விசாரிக்க கடம்பூர் மாளிகைக்கு வந்த அருண்மொழி வர்மன் பயன்படுத்தியது எனக்கூறப்படுகிறது.
வந்தியத்தேவன் பயணித்த பாதையைப் பற்றி அறிந்து கொள்ளவும், சோழ தேசத்து வரலாற்றை நேரில் பார்க்கவும் ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள் தற்போது கடலூர் மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

- +0
- +0