ரயில் பெட்டிகளை இனி குத்தகைக்கு எடுக்கலாம்: சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டம்!

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?!
100 CLAPS
0

இந்தியாவில் ரயில் பயணம் என்பது ஒரு அலாதியான ரசனை கொண்டது. ரயில் பயணத்தை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். சமீபகாலமாக இந்திய ரயில்களை தனியார் மயமாக்க முயன்றுவரும் மத்திய அரசு, இப்போது புதியத் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது. அது தான்,

ரயில் பெட்டிகளை குத்தகைக்கு எடுப்பது மற்றும் விற்கும் திட்டம். இந்திய சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

அதன்படி, சுற்றுலா தொழில் உள்ளவர்கள் விரும்பினால் ரயில் பெட்டிகளை குத்தகைக்கு அல்லது விலைக்கு எடுத்துக்கொள்ள முடியும். இந்த திட்டத்தின் மூலம், கலாச்சாரம், மதம் மற்றும் இதர சுற்றுலாத் துறையின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள, இந்திய ரயில்வே விரும்புகிறது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

* ரயில் பெட்டிகளை குத்தகைக்கு எடுப்பவர்கள் அதில் மாற்றங்கள் செய்துகொள்ளலாம். என்றாலும் அந்த மாற்றம் சிறிய அளவிலேயே இருக்க வேண்டும்.

* ரயிலுக்குள் விளம்பரம் செய்து கொள்ளலாம். ரயில் பெட்டிகளுக்கு பிராண்ட் பெயர் வைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என ரயில்வே அறிவித்துள்ளது.

* குறைந்தது 5 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்கு எடுக்க முடியும் என்றாலும் ரயில் பெட்டிகளின் ஆயுள் வரை குத்தகையை நீட்டிக்க இயலும்.

* குத்தகை எடுக்க விரும்புவர்களுக்கு ஏற்ப எளிமையான பதிவு முறை வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* தகுதி அடிப்படையில் குத்தகை விடப்படும். அதற்கான கட்டணம் உட்பட இதர நியாயமான கட்டணங்களை ரயில்வே விதிக்கும். இதற்கான ஒப்புதல் சரியான நேரத்தில் கிடைக்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த ரயில் சுற்றுலாத் திட்டங்களுக்கான கொள்கைகள், விதிமுறைகள், நிபந்தனைகளை உருவாக்க, நிர்வாக இயக்குனர் அளவிலான குழுவை ரயில்வே அமைச்சகம் உருவாக்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தகவல் : பிஐபி