அன்று தாபா வேலை; இன்று மிஸ் ட்ரான்ஸ் குளோபல் போட்டியாளர் – ‘திருநங்கை நாஸ் ஜோஷி’ கடந்து வந்த பாதை!

38 வயதான நாஸ் ஜோஷி மிஸ் ட்ரான்ஸ் குளோபல் 2022 போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.
0 CLAPS
0

38 வயதான நாஸ் ஜோஷி 'மிஸ் ட்ரான்ஸ் குளோபல் 2022' போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். உலகம் முழுவதும் உள்ள திருநங்கைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள். இதில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் நாஸ் ஜோஷி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார்.

"வெளியுலகைக் காட்டிலும் அம்மாவின் கருவறையில் இருந்த ஒன்பதுமாத காலங்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் கழிந்தது," என்கிறார் நாஸ்.

குழந்தை பிறந்ததும் எந்த ஒரு தாயும் மகிழ்ச்சியில் துள்ளுவார். அதேபோல்தான் நாஸின் அம்மாவும் மகிழ்ச்சியில் திளைத்திருகிறார். ஆனால், அதே அம்மா இன்று அவர் மீது கோபத்தையும், வெறுப்பையும் காட்டுவதாக நாஸ் கவலை தெரிவிக்கிறார்.

நாஸ் ஜோஷி

குழந்தைப் பருவம்

நாஸ் பிறந்தபோது மருத்துவமனை நர்ஸ் அவரது அம்மாவிடம் மகன் பிறந்த செய்தியைக் கூறி வாழ்த்து தெரிவித்தார். அவ்வளவுதான். குடும்பத்தினர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். மருத்துவமனையில் கண்ணில் தென்படுவோர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி சந்தோஷத்தைக் கொண்டாடியுள்ளனர்.

பொம்மைகள், சாக்லேட் என குழந்தைக்கு பிடிக்கும் அத்தனை பொருட்களும் வீட்டை நிறைத்திருந்தன. ஆனால், இந்த மகிழ்ச்சியான நாட்கள் வெகுநாள் நீடிக்கவில்லை.

ஆணாகப் பிறந்த நாஸ் ஆறு, ஏழு வயதிலேயே தனக்குள் மாற்றத்தை உணரத் தொடங்கினார். ஏதோ ஒரு குழப்பம் மனதில் இருந்துகொண்டே இருந்தது. பள்ளிக்குச் சென்றால் சக மாணவர்கள் கேலி செய்தார்கள்.

சிறு வயது புகைப்படம்

நடத்தையில் தெரிந்த மாற்றத்தைக் கண்டு அன்பு காட்டி அரவணைத்தப் பெற்றோர் இருவருமே வெறுப்பைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

என்ன நடக்கிறது? எதற்காக கோபப்படுகிறார்கள்? எதற்காக வெறுக்கிறார்கள்? நான் ஆணா, பெண்ணா? இப்படி 10 வயதில் அவர் மனதில் தோன்றிய கேள்விகள் ஏராளம். எதற்கும் விடை கிடைக்கவில்லை.

மாமா வீடு - தாபா வேலை

நாஸ், பத்து வயது வரை பெற்றோருடன் டெல்லியில் வசித்து வந்தார். ஆனால் அவரிடம் தென்பட்ட மாற்றத்தைக் கண்டு அவரது பெற்றோர் அவரை வீட்டை விட்டு அனுப்பிவிட முடிவு செய்தார்கள்.

மும்பையில் இருந்த தாய்மாமா வீட்டிற்கு நாஸ் அனுப்பப்பட்டார். நாஸின் மாமாவிற்கு ஆறு குழந்தைகள். ஏழ்மை நிலையில் இருந்தார். அரசு மருத்துவமனையில் வார்ட் பாய் வேலை செய்து வந்தார். நாஸைப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கும் நிலையில் அவர் இல்லை.

“உனக்குத் தேவையான பணத்தை நீதான் சம்பாதிக்கணும்னு சொல்லி என் மாமா பக்கத்துல இருந்த தாபால வேலைக்கு சேர்த்துவிட்டாரு,” என்கிறார் நாஸ்.

வசதியான வீட்டில் அன்பு காட்டி வளர்க்கப்பட்டவர் திடீரென்று நிராகரிக்கப்பட்டு வீட்டை விட்டு விரட்டப்பட்டார்.

படிப்பு. அது முடிந்ததும் தாபா வேலை. பிறகு வீடு திரும்பி அத்தைக்கு சமையல் வேலைகளில் உதவி. அதன் பிறகு, ஹோம்வொர்க். இப்படியே சில நாட்கள் கடந்தன.

அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு தாபா வேலையையும் முடித்துவிட்டு மாமா வீட்டிற்கு வந்தார் நாஸ். அப்போது மாமா, அத்தை யாரும் வீட்டில் இல்லை. மாமாவின் மகனும் அவரது நண்பர்களும் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்கள். நாஸையும் குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கின்றனர்.

ஆனால், நாஸ் மறுத்துவிடவே குளிர்பானம் ஒன்றைக் கொடுத்து குடிக்கச் சொன்னார்கள். நாஸும் வேறு வழியின்றி குடித்தார். அத்துடன் மறுநாள் மதியம் கண்விழித்துப் பார்த்தபோது மருத்துவமனையில் இருந்தார். உடம்பில் ஆங்காங்கே காயங்கள். தையல் போட்டிருந்தார்கள். எதிரே இருந்த மாமா,

“எதைப்பத்தியும் யார்கிட்டயும் மூச்சு விடக்கூடாது. நானே ரெண்டு நாள் கழிச்சு வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.”

அதன்பிறகு, அவர் வரவே இல்லை. பிறகுதான் புரிந்தது மாமாவின் மகனும் அவரது நண்பர்களும் சேர்ந்து நாஸை பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர்.

பாரில் நடனம்

மருத்துவமனையில் ஆதரவற்று கிடந்த நாஸை திருநங்கை ஒருவர் அழைத்து சென்றுள்ளார்.

சில நாட்கள் சிக்னலில் பிச்சை எடுத்துள்ளார். படித்துக்கொண்டே இரவில் பார் ஒன்றில் நடனம் ஆடினார். சிலர் மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கின்றனர்.

இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும் நாஸ் 12-ம் வகுப்பை முடித்தார். நாஸ் என்பது அவர் பின்னர் வைத்துக்கொண்ட பெயர். அவரது உண்மையான பெயரையோ அல்லது சிறுவயது நிகழ்வுகளையோ நினைத்துப்பார்க்கக்கூட அவர் விரும்பவில்லை.

ஃபேஷன் டிசைனிங் மீது ஆர்வம்

பதினெட்டு வயது வரை பாரில் டான்ஸ் ஆடினார் நாஸ். அப்போது ஃபேஸ்புக் அறிமுகமான காலகட்டம். அதில் தற்செயலாக தன்னுடைய சிறுவயது போட்டோ ஒன்றைப் பார்த்துள்ளார். அவரது உறவினர் ஒருவருடன் இருந்த போட்டோ அது. அந்த உறவினர் அந்தப் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். மும்பையில் வசித்து வந்த அந்த உறவினர் ஒரு பிரபல நடிகை, மாடல். அவர் பெயர் விவேகா பாபாஜி.

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பிறகும்

நாஸ் தன்னுடைய ஆடைகளைத் தானே வடிவமைத்து டெய்லரிடம் கொடுத்து தைத்துப் போட்டுக்கொள்வார். ஃபேஷன் டிசைனிங் மீது நாஸிற்கு இருந்த ஈடுபாட்டை உணர்ந்த விவேகா, டெல்லி NIFT கல்லூரியில் மொத்த கட்டணத்தையும் செலுத்தி நாஸை சேர்த்துள்ளார்.

கல்லூரியில் கேலி, கிண்டல்கள் இல்லை. வெறுப்பு இல்லை. பாலியல் துன்புறுத்தல் இல்லை. நிம்மதியாக நாட்கள் நகரந்தன.

டெல்லியில் இருந்தபோதுதான் எல்ஜிபிடி சமூகத்தைச் சேர்ந்த பலரின் அறிமுகம் நாஸிற்குக் கிடைத்துள்ளது. பரந்து விரிந்த இந்த உலகில் தான் தனிமரம் அல்ல என்பது புரிந்தது. மற்ற அனைவரையும் போல் மகிழ்ச்சியுடனும் கனவுகளுடனும் சாதாரண வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்.

தனிப்பட்ட வீடு

NIFT தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தார். கேம்பஸில் தேர்வானார். முதல் வேலையே டிசைனர் ரித்து குமாரிடம் கிடைத்தது. 25,000 ரூபாய் சம்பளம். குருகிராமில் 7,000 ரூபாய்க்கு வீடு வாடகை எடுத்தார். நாஸ் முதல் முதலாக தனக்காக எடுத்துக்கொண்ட வீடு. டிவி, ஃப்ரிட்ஜ், சேர் என வீட்டுக்குத் தேவையானவற்றை ஒவ்வொன்றாக வாங்கி அழகுப்படுத்தினார்.

சம்பளம், வீடு என தனக்கான சின்ன, அழகான உலகத்தை அவர் உருவாக்கிக்கொண்டாலும், அந்த மகிழ்ச்சியும் நிலைக்கவில்லை. கல்லூரியில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் சமூகம் அவரைப் பார்த்த பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. ஆண்களின் மோசமான பார்வையில் இருந்து தப்புவது கடினமாக இருந்தது. கடந்த கால நினைவுகள் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை. மன அழுத்தத்திற்கு ஆளானார். மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதற்கிடையில் வேலை போனது.

மசாஜ் பார்லர் & போட்டோஷூட்

சில நாட்களுக்குப் பிறகு நாஸிற்கு லாஜ்பத் நகரில் இருந்த மசாஜ் பார்லர் ஒன்றில் மேலாளராக வேலை கிடைத்தது. ஆனால் அங்கு மசாஜ் என்கிற பெயரில் பாலியல் தொழில் நடந்து வந்தது. அங்கிருந்தபோதுதான் நாஸ் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளத் தீர்மானித்தார். அதற்கு 6-7 லட்ச ரூபாய் செலவாகும் எனத் தெரிந்தது. பணத்தேவைக்காக பாலியல் தொழிலாளியாக மாறினார்.

இந்த சமயத்தில் ரிஷி தனேஜா என்கிற பிரபல போட்டோகிராஃபரை நாஸ் சந்தித்தார். இவர் ஹோமோசெக்சுவல் செக்ஸ் வொர்க்கர் ஒருவரை போட்டோஷூட் எடுக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு போட்டோஷூட்டிற்கும் 1,500 ரூபாய் கொடுப்பதாக ரிஷி தனேஜா சொல்லவே நாஸ் ஒப்புக்கொண்டார்.

ஆனால், இது வெறும் போட்டோஷூட் அல்ல. மக்கள் வந்து இவரை ஆங்காங்கே தொட்டுப் பேசுவதையும் ரேட் கேட்பதையும் போட்டோகிராஃபர் மறைந்திருந்து போட்டோ எடுப்பார். இப்படி சில நாட்கள் கடந்தன.

2013-ம் ஆண்டு ராஜஸ்தான் ஃபேஷன் வீக்கிற்கு நாஸ் அனுப்பப்பட்டார். இதில் நாட்டின் முதல் ட்ரான்ஸ்ஜெண்டர் ஷோஸ்டாப்பர் ஆனார். மூன்று ஷோ நடத்தி 30,000 ரூபாய் சம்பாதித்தார். பிளைட் டிக்கெட், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் என ஏகப்பட்ட மரியாதையையும் பணத்தையும் சம்பாதித்தார். இப்படித்தான் ஃபேஷன் உலகின் நாஸ் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

மாடலிங், ரேம்ப் வாக் என பிரபலமடைந்துகொண்டே போனார். ஆப்பிரிக்கா, துபாய், மொரீஷியஸ் என பயணித்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மிஸ் வேர்ல்ட் டைவர்சிட்டி பட்டம் வென்றார். தெஹல்கா பத்திரிக்கையில் அட்டைப்படத்தில் நாஸ் புகைப்படம் வெளியிடப்பட்டது. சிஎன்என் நாஸ் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டது. அதைப் பார்த்த நாஸின் அப்பா அவரைத் தொடர்பு கொண்டார்.

34 வயதில் ஒரு வெற்றிகரமான மாடலாகவும் அழகு ராணியாகவும் ஜொலிக்கிறார் நாஸ்.

நாஸின் அப்பா அவரை நினைத்து பெருமைப்படுகிறார். ஆனால் அம்மாவின் கோபம் குறையவில்லை.

”இப்படி ஒரு குழந்தை என் கருப்பையில் வளர்வதற்கு நான் என்ன பாவம் செய்தேனோ,” என்று சொல்லும் அளவிற்கு கோபத்தில் இருக்கிறார் நாஸின் அம்மா.

இத்தனை கடினமான சூழல்களைக் கடந்து வந்த நாஸ் மிஸ் ட்ரான்ஸ் குளோபல் 2022 போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்கிறார். உலகம் முழுவதும் உள்ள திருநங்கைகள் இதில் போட்டியிடுகின்றனர். தன்னைக் காட்டிலும் வயது குறைந்த போட்டியாளர்களுடன் போட்டியிட்டு நிச்சயம் வெற்றியடைவேன் என நம்பிக்கை தெரிவிக்கிறார் நாஸ்.

ஆதாரம்: ஹிந்தி யுவர்ஸ்டோரி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world