பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

இணையத்தை கலக்கும் புதிய சவால் #trashtag

cyber simman
16th Mar 2019
137+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

இணைய உலகில் புதிதாக ஒரு சவால் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இதற்கு முந்தைய சவால்கள் போல் இது எவ்விதமான வில்லங்கமும் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு நட்பான வகையில் அமைந்துள்ளது. ஆம், டிராஷ்சாலஞ்ச் எனப்படும் இந்த வைரல் நிகழ்வு, சுற்றுப்புறத்தை சுத்தமாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் ’10 இயர் சாலஞ்ச்’ எனும் நிகழ்வு ஃபேஸ்புக்கு உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் வைரலானது. பத்தாண்டுக்கு முந்தைய தோற்றத்தையும், தற்போதைய தோற்றத்தையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ள இந்த நிகழ்வு ஊக்குவித்தது. இந்த சவால் வைரலாக பரவினாலும், இது ஒரு வீண் முயற்சி எனும் விமர்சனமும் எழுந்தது. முகமறிதல் தொழில்நுட்பத்திற்கான தகவல் திரட்டும் முயற்சி என்ற சர்ச்சையும் உண்டானது.

இந்நிலையில், இப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதிதாக ’டிராஷ் சால்ஞ்ச்’ எனும் சவால் பிரபலமாகி இருக்கிறது. அசுத்தமான பகுதிகளில் குப்பைகளை சுத்தம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த சவால் அமைந்துள்ளது.

இந்த சவாலில் பங்கேற்பவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றிவிட்டு, குப்பையை அகற்றுவதற்கு முந்தைய படத்தையும் தற்போதைய தூய்மையான காட்சியையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த படங்களை #டிராஷ்டேக் (#TrashTag) எனும் ஹாஷ்டேகுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கானோர் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த வகைப் படங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடகத்தில் என்ன செய்வது எனத்தெரியாமல் அலுத்து போயிருப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய புதிய சவாலாக இது அமைந்துள்ள அதே நேரத்தில், சுற்றுப்புறத்தை தூய்மையாக்கவும் இது வழி செய்கிறது. பலரும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் நிறுவனம் ஒன்று ’டிராஷ்டேக்’ திட்டத்தை முதல் முறையாக முன்வைத்தது. எனினும் அண்மையில் ரெட்டிட் தளத்தில் இது தொடர்பான பகிர்வு வெளியானதை அடுத்து இந்த சவால் பிரபலமாகி இருக்கிறது. தொடர்ந்து பலரும் தங்கள் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி அந்த படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து இந்தியா வரை பல்வேறு நாடுகளில் இந்த புதிய சவாலில் பலரும் பங்கேற்று தூய்மை படங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்தியாவில் ஜுனாத்கத் பகுதியில், உள்ள குப்பைகளை அகற்றிவிட்டு, இந்த பணியில் ஈடுபட்ட குழுவினர் தாங்கள் சேகரித்த குப்பை மூட்டைகளோடு போஸ் கொடுக்கும் படத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதே போல, இன்ஸ்டாகிராம் பயனாளி ஒருவர் குப்பைக் கூளமாக காட்சி அளிக்கும் கடற்கரையை சுத்தம் செய்து விட்டு அந்த படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மற்றொரு படத்தில் குப்பைகளோடு காட்சி அளிக்கும் நடைபாதையும் படமும், அருகே அது தூய்மையாகக் காட்சி அளிக்கும் படமும் பகிரப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வகை படங்களை பார்க்கும் போது, தங்கள் பகுதியிலும் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற தாக்கத்தை எற்படுத்துகிறது. இந்த தூண்டுதலே டிராஷ் சாலஞ்சை வைரலாக்கி இருக்கிறது. நீங்களும் விரும்பினால் இந்த சவாலில் பங்கேற்கலாம்.137+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags