டிரம்ப் பயணத்தில் பாதுகாப்புப் பணியில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளார்கள் தெரியுமா?
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் பாதுகாப்புப் ஏற்பாடு பணிகள், அவர் பயணிக்கும் கார் மற்றும் விமானம் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகைத் தந்துள்ள, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கான பாதுகாப்பு ஏற்பாடுப் பணிகளில் 108 மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் 12,000 க்கும் மேற்பட்ட காவலகள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவியுடன் இந்தியா வருகை தந்துள்ளார். அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வந்தடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் அவர்களை நேரில் வரவேற்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"33 துணை கமிஷனர்கள், 75 உதவி கமிஷனர்கள், 300 இன்ஸ்பெக்டர்கள், 1,000 சப் இன்ஸ்பெக்டர்கள், 12,000 காவலர்கள், 2,000 பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,” என அகமதாபாத் காவல்துறை கமிஷனர் அசிஷ் பாட்டியா தெரிவித்தார்.
"அதிரடி படையைச் சேர்ந்த 3 பிரிவுகள் மற்றும் விரைவு படையைச்சேர்ந்த 7 பிரிவுகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிபர் வாகன அணிவகுப்பு இடங்களில் குறிப்பிட்ட பிரிவுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மோப்ப நாய் கொண்ட, 15 வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறப்புப் பாதுகாப்பு பிரிவு, விமானப்படை மற்றும் அமெரிக்க புலனாய்வு பிரிவு ஆகியவையும் கூடுதல் பாதுகாப்பு வழங்குகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபருக்கான பிரத்யேக அறை அமைந்துள்ள, ஐடிசி மெளரியா ஓட்டலில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிபர் அறை பகுதி அருகே ஓட்டல் ஊழியர்கள் செல்லக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓட்டலின் சாண்க்யா அறையில் அதிபர் டிரம்ப் தங்குகிறார். இந்த அறையில் இதற்கு முன்னர், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், பாரக் ஒபாமா ஆகியோர் தங்கியுள்ளனர்.
ட்ரம்ப் பயன்படுத்தும் விமானம்
அமெரிக்க அதிபரின் விமானமான ‘ஏர் போர்ஸ் ஒன்’, போர் விமானத்தின் பிரத்யேக தன்மை கொண்டது. இதனுள் அதிபர், அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கான 370 சதுர மீட்ட பரப்பு உள்ளது.
இதில் அதிபருக்கு என்று சொகுசு வசதிகள் கொண்ட அறை உள்ளது. விமானத்தில் இரண்டு சமயலறைகளும் உள்ளன. விமானத்தின் உள்பகுதி சொகுசு ஓட்டல் போல அமைந்துள்ளது.
ட்ரம்ப் பயன்படுத்தும் கார்கள்
பெரும்பாலான அமெரிக்க அதிபர்கள் போல அதிபர் டிரம்பும் தனக்கான பிரத்யேக கார்களை உடன் கொண்டு வருகிறார். ‘பீஸ்ட்’ (Beast) என அழைக்கப்படும் இந்த கார்கள் பிரத்யேகமானவை. ஸ்டீல், அலுமினியம், செராமிக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கார்கள், ஸ்மோக் ஸ்கிரீன் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்டவை.
எந்த வகையான தாக்குதலையும் முறியடிக்கக் கூடிய வகையில் இந்த கார்களின் பாதுகாப்பு வசதிகள் அமைந்துள்ளன. இதனையே ட்ரம்ப் தனது இந்திய பயணத்தில் பயன்படுத்துகிறார்.
தொகுப்பு: சைபர்சிம்மன்