இனி வாட்ஸ் அப் மூலமே உபெர் டாக்சி புக் செய்யலாம்: புதிய வசதி அறிமுகம்!
வாட்ஸ் அப் சேவை மூலம் உபெர் வாகனத்தை பதிவு செய்வதற்கான வசதியை உலக அளவில் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்வதாக உபெர் அறிவித்துள்ளது.
உபெர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் அரட்டை மென்பொருள் (பாட்) மூலம் உபெர் வாகனத்தை பதிவு செய்வதற்கான வசதி தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியாவில் உபெர் மற்றும் வாட்ஸ் அப் அறிவித்துள்ளன. இதன் மூலம் வாட்ஸ் அப் செய்தி வாயிலாகவே உபெர் சேவையை பதிவு செய்யலாம்.
வாட்ஸ் அப் வர்த்தக மேடை மீது இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இந்த வசதி முன்னோட்ட அடிப்படையில் லக்னோ நகரில் அறிமுகம் ஆகிறது.
"இந்தியர்கள் அனைவரும் உபெர் சேவையை பயன்படுத்துவதை எளிதாக்க விரும்புகிறோம். இதற்காக இந்தியர்கள் வசதியாக உணரும் மேடையில் நாங்கள் இருக்க வேண்டும். வாட்ஸ் அப்’ உடனான எங்கள் கூட்டு இதை சாத்தியமாக்குகிறது. இப்போது பயனாளிகள் தங்களுக்கு பரிட்சியமான சேவை மூலம் எளிதாக உபெர் சேவையை அணுகலாம்,” என்று இந்த வசதி குறித்து உபெர் வர்த்தக மேம்பாடு மூத்த இயக்குனர் நந்தினி மகேஸ்வரி கூறியுள்ளார்.
இந்த கூட்டை வரவேற்றுள்ள வாட்ஸ் அப் இந்தியா தலைவர் அபிஜித் போஸ், நுகர்வோருடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பும் நிறுவனங்களுக்கு வாட்ஸ் அப் வர்த்தக மேடை முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
“வாட்ஸ் அப் மேடையில் உபெர் அனுபவம் எளிதாக, பரிட்சியமானதாக இருக்கும். புதிய பயனாளிகள் மத்தியில் உபெர் விரிவாக்கத்திற்கு உதவும். இந்த கூட்டு செயல்பாட்டை ஆர்வத்தோடு எதிர்நோக்கியுள்ளோ. இதே போல மேலும் பல சேவைகளை இந்திய அளவில் அறிமுகம் செய்ய உள்ளோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சேவை அறிமுகத்தை அடுத்து பயனாளிகள் உபெர் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பயனர் பதிவு, ரைடு பதிவு, ரசீது போன்றவற்றை வாட்ஸ் அப் மூலமே பெறலாம் என உபெர் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்-அப்’ல் உபெர் எப்படி பயன்படுத்துவது?
- உபெர் வர்த்தக வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்புலாம்.
- வாட்ஸ் அப் சேட் லின்க் மூலம் இணைப்பை நேரடியாக அணுகுலாம்.
- கியூஆர் கோடை ஸ்கேன் செய்யலாம்
மேலே உள்ள எதாவது ஒரு முறை மூலம் பயனாளிகள் உபெர் வாகனத்தை எளிதாக புக் செய்யலாம்.
உபெர் செயலி மூலம் கிடைகும் பாதுகாப்பு அம்சங்கள் இந்த முறையிலும் கிடைக்கும் என உபெர் தெரிவித்துள்ளது. வாகன டிரைவர் பெயர் போன்ற விவரங்கள் பயனாளிக்கு தெரிவிக்கப்படும் என உபெர் குறிப்பிட்டுள்ளது.
உபெர் டிரைவர்களை பொருத்தவரை அவர்கள் தரப்பில் எந்த மாற்றமும் இருக்காது. துவக்கத்தில் ஆங்கிலத்தில் இந்த சேவை அறிமுகம் ஆகிறது. புதிய மற்றும் பழைய உபெர் பயனாளிகள் இந்த சேவையை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில்: சைபர் சிம்மன்