Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

வேலைவாய்ப்பை பெருக்க 8 லட்சம் பெண்களுக்கு திறன் பயிற்சி அளித்துள்ளது ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம்!

2019-ம் ஆண்டு இறுதிக்குள் திஷா திட்டத்தை ஒரு மில்லியன் பெண்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஹெர்ஸ்டோரியுடன் பகிர்ந்துகொண்டார் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் திறன் மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் க்ளெமெண்ட் சாவெட்.

வேலைவாய்ப்பை பெருக்க 8 லட்சம் பெண்களுக்கு திறன் பயிற்சி அளித்துள்ளது ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம்!

Friday March 08, 2019 , 5 min Read

சோனிக்கு 17 வயதிருக்கையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதன் பிறகு படிக்கவோ பணிபுரியவோ அவர் அனுமதிக்கப்படவில்லை. பணிபுரிவதற்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவரது பள்ளிச் சான்றிதழ் தேவைப்பட்டது. அவரது பெற்றோரிடமிருந்து அதைப் பெற ஏழாண்டுகள் போராடினார்.

இவர் தற்போது டெல்லியின் கிடோர்னியில் காஸ்மடாலஜி பிரிவில் பயிற்சி பெற்று வருகிறார். அத்துடன் தனது குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை குறித்த கனவையும் கொண்டுள்ளார். குடும்ப நிர்வாகத்தில் பங்களிப்பது குறித்தும் மகிழ்ச்சியாக உள்ளார்.

”சிறு உதவி கிடைக்கப்பட்டதும் வேலையில் இணைந்துள்ள இத்தகைய பல பெண்களின் கதை எங்களிடம் உள்ளது,” என்கிறார் இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) திறன் மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் க்ளெமெண்ட் சாவெட்.

ஹெர்ஸ்டோரி உடனான உரையாடலில் திறன் மேம்பாடு, இந்தியா முழுவதும் உள்ள பெண்களின் வாழ்க்கையில் அது ஏற்படுத்திய தாக்கம், ஒரு மில்லியன் பெண்களைச் சென்றடைவதை இலக்காக் கொண்டுள்ள UNDP-யின் திஷா திட்டம் ஆகியவை குறித்து பகிர்ந்துகொண்டார்.

பெண்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுவதற்கான காரணம்?

பணியாளர்களாக பெண்களின் பங்களிப்பு இந்தியாவில் குறைவாகவே உள்ளது என்றும் ஆண்களும் பெண்களும் சமமாக பங்களிக்கும் பட்சத்தில் ஜிடிபி 27 சதவீதம் அதிகரிக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பதாக க்ளெமெண்ட் குறிப்பிட்டார்.

அதிக பெண்கள் இடைநிலைக் கல்வி மற்றும் உயர் கல்வி படிப்பதைப் பார்க்க முடிந்தாலும் அவர்கள் பணியில் இணைய அது உதவுவதில்லை.

இவர்கள் பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் இந்த உழைப்பானது குழந்தைகளைப் பராமரிப்பது, சமையல், சுத்தம் செய்வது போன்ற பகுதிக்குள் முடங்கிவிடுகிறது,” என்றார் க்ளெமெண்ட். இந்த நிலை மாறவேண்டியது அவசியம் என்கிறார் அவர்.

“சமூக அளவில், ஒரு பெண் வருவாய் ஈட்டத் துவங்கும்போது அவர் வீட்டின் செலவுகளில் பங்களிப்பதால் முடிவெடுக்கும் செயல்முறையிலும் பங்களிக்கிறார் என நம்புகிறோம். பெண்கள் சிறப்பாக முடிவெடுக்கிறார்கள். குறிப்பாக வீட்டுச் செலவுகளைப் பொறுத்தவரை அவர்கள் மிகச்சிறப்பாக முடிவெடுக்கிறார்கள். குடும்பத்தின் எதிர்காலத்தில் முதலீடு செய்வார்கள். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதையும், முறையான உணவும் ஊட்டச்சத்தும் கிடைப்பதையும் சுகாதாரமான வாழ்க்கை கிடைப்பதையும் உறுதி செய்வார்கள். இதனால் அவர்களது குடும்பம் மட்டுமின்றி சமூகமும் பலனடையும்,” என்றார் க்ளெமெண்ட்.

அவர் மேலும் கூறுகையில் 2030-ம் ஆண்டு ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் இளம் சமூகத்தினர் அடங்கிய மக்கள்தொகை அதிகமாக இருக்கும் என்கிறார்.

”இந்த நாடுகளில் திறன் பெற்ற தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை இருக்கும் என்பதையும் இந்தியாவில் இந்த பற்றாக்குறையை தீர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதையும் இது உணர்த்துகிறது. ஆனால் இந்தியா திறன் மிகுந்த நாடாக மாறுவதற்கு நம் இளம் சமூகத்தினரிடையே போதுமான திறன் இல்லை,” என்றார்.

UNDP-யின் திஷா திட்டம் பெண்களுக்கான திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்தி இந்த இடைவெளியை நிரப்புவதற்காக துவங்கப்பட்ட முயற்சியாகும்.

பெண்களை பணிபுரிவதற்கு ஏற்றவர்களாக மாற்றுதல்

திஷா திட்டம் UNDP, இந்தியா, IKEA Foundation மற்றும் India Development Foundation ஆகியவற்றிடையே இருக்கும் பார்ட்னர்ஷிப் வாயிலாக செயல்படுகிறது. சந்தையில் நிலவும் தேவைக்கு ஏற்றவாறான திறன் பெற்று பெண்கள் வேலையில் சேர இந்தத் திட்டம் உதவும். நலிந்த பிரிவினைச் சேர்ந்த ஒரு மில்லியன் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். க்ளெமெண்ட் கூறுகையில்,

“பெண்கள் பொருளாதார ரீதியாக தற்சார்புடன் இருக்க திஷா ஆதரவளிக்கிறது. இதனால் அவர்களது குடும்பங்களும் வாழ்க்கையில் சம வாய்ப்புகளைப் பெறமுடியும்,” என்றார்.

இது மட்டுமல்லாது வளர்ச்சியடையக்கூடிய வகையிலான புதுமையான பொது மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப் மாதிரிகளை உருவாக்குவது, கல்வியுடன் திறன், பணி, வளர்ச்சி போன்றவற்றை இணைப்பது போன்ற முயற்சிகளும் இந்தத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

2015-ம் ஆண்டு இறுதியில் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் கடந்த மூன்றாண்டுகளில் 70 சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதில் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த நலிந்த பிரிவினைச் சேர்ந்த ஏழு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயனடைந்துள்ளனர். இது நான்கு மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

“திறன் மேம்பாடு தொடர்பாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்க புதுமையான தீர்வுகளை ஆராய்வது தொடர்பாகவும் பணிபுரிந்த பிறகு பணியிலமர்த்துவோர், வேலை தேடுவோர், சந்தை ஆகியவற்றுக்கிடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதை உணர்ந்தேன். விவசாயிகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடையேயும் இத்தகைய இடைவெளி இருப்பதையும் இது அவர்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதையும் கவனித்தேன். எனவே நாங்கள் நான்கு வெவ்வேறு மாதிரிகளை உருவாக்கினோம். இதன்மூலம் பெண்கள் ஒரே மாதிரியாக பணிபுரியும் சூழல் மாறும். பெண்கள் தொழில்முனைவராக மாறவும் விவசாயத் துறையில் சோர்ஸிங் மேலாளராக பணிபுரியவும் வேலைவாய்ப்பு தொடர்பான சந்தைப்பகுதியில் ஆலோசகர்களாக உருவாகவும் உதவினோம். தகவல்களில் இருக்கும் இடைவெளியை முதலில் குறைக்கவேண்டும். தனியார் துறை, பயனாளர்கள், அரசாங்கம், வேலைதேடுவோர் ஆகியவற்றை இணைக்கவேண்டும். இதுவே நான் தெரிந்துகொண்ட படிப்பினை ஆகும்,” என்றார்.

முதல் மாதிரியில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தொழில் சார்ந்த வாழ்க்கைக்கான வழிகாட்டலும் ஆலோசனையும் வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் நலிந்த பிரிவினைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கான வாய்ப்புகளை சிறப்பாகத் தேர்வுசெய்யமுடியும்.

இரண்டாவது மாதிரி சந்தைப்பகுதியாக செயல்படுகிறது. அதாவது ஆர்வமுள்ள இளம் பெண்கள் பணியிலமர்த்துவோருடன் பல்வேறு தளங்களின் கூட்டு முயற்சிகள் மூலம் இணைக்கப்படுவார்கள். உதாரணத்திற்கு இந்த மையங்களில் ஒன்றில் கம்ப்யூட்டர் வகுப்பிற்குச் சென்ற 17 வயது மாணவியான சாந்தினி ஆசிரியராகவேண்டும் என விரும்பியதால் இதற்கான பயிற்சி வகுப்பிற்கு கட்டணம் செலுத்த இவர் தையல் கற்றுக்கொள்ளப் போகிறார்.

மூன்றாவது மாதிரி சிறு தொழில்முனைவு சார்ந்ததாகும். இதில் சிறு வணிகங்கள் துவங்க பெண்களுக்கு வணிக ரீதியாகவும் சமூகம் சார்ந்த ஆதரவினையும் வழங்க வழிகாட்டிகள் அடங்கிய நெட்வொர்க்கை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

நான்காவது மாதிரி மதிப்பு சங்கிலி சார்ந்ததாகும்.

“இதில் மதிப்பு சங்கிலியின் அடி நிலையில் இருக்கும் பெண் தயாரிப்பாளர்களின் மதிப்பை உயர்த்துவதே நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதை சாத்தியப்படுத்த விவசாய உற்பத்தி, கைத்தறி மற்றும் ஆடைகள், கைவினைப் பொருட்கள் போன்ற பகுதிகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையுடன் பெண்களின் குழு இணைக்கப்படுகிறது,” என்றார் க்ளெமெண்ட்.

IKEA ரீடெயில் ஆதரவளிக்கும் மூன்று சோதனை முயற்சிகளுக்கு இந்த மாதிரிகள் ஒன்றிணைக்கப்படுகிறது. இதில் பெண் விவசாயிகளிடையே ஆர்கானிக் விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு அவர்களது விளைச்சல் ஹைதராபாத்தில் உள்ள அதன் கஃபேக்கு பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாது வேலைக்கான பயிற்சியும் நியமனமும் வழங்கப்படுகிறது. மேலும் UrbanClap உடன் இணைந்து மாடுலர் ஃபர்னிச்சர் அசெம்பிளியில் பெண்களுக்கு திறன் உருவாக்கப்படுகிறது.

சோதனை முயற்சியின்கீழ் திறன் இல்லாத அதேசமயம் ஆர்வமுள்ள 30 பெண்களுக்கு மாடுலர் ஃபர்னிச்சர் அசெம்பிளியில் திறன் வழங்கப்பட்டது என்றார் க்ளெமெண்ட். ”பயிற்சியும் சான்றிதழும் வெற்றிகரமாக வழங்கப்பட்ட பிறகு பெண் அசெம்ப்ளர்கள் UrbanClap உடன் இணைக்கப்படுவார்கள். தெலுங்கானா அரசாங்கத்தின் National Academy of Construction இந்த சோதனை முயற்சிக்கான பயிற்சி ஏஜென்சியாக தேர்வு செய்யப்பட்டது,” என்றார்.

வெற்றிகரமான நிலையான மாதிரி

2018-ம் ஆண்டின் இறுதியில் திஷா திட்டம் நாட்டின் 7.7 லட்சம் பெண்களைச் சென்றடைந்துள்ளது. “சிலர் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் வாய்ப்புகளைக் கொண்டு சிறப்பான பணி வாழ்க்கையைத் தேர்வு செய்யலாம். சிலர் சுய தொழில் துவங்கலாம்,” என்றார். 2019-ம் ஆண்டின் இறுதியில் திஷா திட்டம் ஒரு மில்லியன் பெண்களைச் சென்றடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

”எங்களைப் பொறுத்தவரை ஒரு மில்லியன் என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே. சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது போன்றே மீண்டும் பெரியளவில் செயல்படுத்தும் வகையில் நிலையான தீர்வை உருவாக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்றார்.

இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் தனிநபர்களின் வெற்றிக் கதைகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. உதாரணத்திற்கு IKEA உடனான 45 நாள் ரீடெயில் பயிற்சி திட்டத்திற்கு பிறகு, 21 வயது ஷிரீன் பேகத்திற்கு IKEA Food Function துறையில் பணி கிடைத்துள்ளது. இவரது சகோதரி சம்ரீனும் பயிற்சிக்குப் பிறகு உணவகத்தில் இணைந்துகொண்டார். இருப்பினும் பெரியளவில் செயல்படவேண்டும் என்கிற கனவு தொடர்கிறது. “வருங்காலத்தில் மேலாளர் பதவியேற்கவேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் ஷிரீன்.

திறன், பயிற்சி, பணி வாழ்க்கைக்கான வழிகாட்டல் போன்றவற்றை UNDP திட்டத்தின் வாயிலாகவும் பிற நிறுவனங்கள் வாயிலாகவும் அதிகளவிலான பெண்கள் பெறும் நிலையில் பெண்களிடம் திறமையும் ஆர்வமும் இருக்கிறது என்பதும் தேவையான திறன் வழங்கப்படும் பட்சத்தில் ஷிரீன் போன்ற எண்ணற்ற பெண்கள் தங்களது லட்சியத்தை எட்டலாம் என்பது தெளிவாகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : தன்வி துபே | தமிழில் : ஸ்ரீவித்யா