‘இனி அமெரிக்க விசா வாங்க அதிக நாட்கள் காத்திருக்க வேண்டாம்’ - தூதரகம் வெளியிட்ட நல்ல செய்தி!

By kanimozhi
January 24, 2023, Updated on : Tue Jan 24 2023 08:01:32 GMT+0000
‘இனி அமெரிக்க விசா வாங்க அதிக நாட்கள் காத்திருக்க வேண்டாம்’ - தூதரகம் வெளியிட்ட நல்ல செய்தி!
அமெரிக்க செல்ல விரும்புவோர் இனி விசாவிற்காக அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அதற்காக அதிக பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாகவும் தூதரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • +0
  Clap Icon
Share on
close
 • +0
  Clap Icon
Share on
close
Share on
close

அமெரிக்கா செல்ல விரும்புவோர் இனி விசாவிற்காக அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அதற்காக அதிக பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாகவும் தூதரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


வேலை, படிப்பு, சுற்றுலா, மருத்துவம் என பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்கின்றனர். ஆனால், தற்போது அமெரிக்கா செல்வதற்கான விசா பெறுவதற்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமானதாக உள்ளது.


இதனை குறைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது தொடர்பாக அமெரிக்க தூதரகம் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டுள்ளது.

US Visa

அமெர்க்க விசா நேர்காணலுக்கு நிற்பவர்கள்

அடுத்த சில மாதங்களில் அமெரிக்க தூதரகம் மற்றும் இந்தியாவில் உள்ள ஐந்து துணை தூதரகங்கள் முழுவதும் விசா ஊழியர்களை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை பணியாளர்களை அதிகரிப்பதாகவும், விசா செயலாக்கத்தை அதிகரிக்க பல நடவடிக்கைகளை தொடங்க உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் சுற்றுலா அல்லது வணிகத்திற்கான சாதாரண பார்வையாளராக அமெரிக்க செல்லத் தேவையான விசாவிற்கான (B1/B2) காத்திருப்பு காலம் 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படியொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க விசா சிறப்பு ஏற்பாடு

இந்தியா முழுவதும் ஜனவரி 21ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் விசா அலுவலகம் திறந்திருக்கும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

முதல் முறையாக விசா விண்ணப்பிப்பவர்களுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள யு.எஸ். மிஷன், ஜனவரி 21ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் சிறப்பு நேர்காணல்களை தொடங்கியுள்ளது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தூதரகங்கள் அனைத்திலும் விசாவுக்காக விண்ணப்பித்த நபர்களுக்கு சனிக்கிழமைகளில் நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், வர உள்ள மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சனிக்கிழமைகளில் விசா நேர்காணலை கூடுதல் இடங்களில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

visa

மும்பை தூதரகத் தலைவர் ஜான் பல்லார்ட் கூறுகையில்,

"இந்தியா முழுவதும் உள்ள எங்கள் தூதரக குழுக்கள் சர்வதேசப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் கூடுதல் மணிநேரங்களைச் செலவிடுகின்றன. இது அமெரிக்காவிற்கு பயணத்தை எளிதாக்குவதற்கான புதுமையான தீர்வுகளைக் கண்டறியும் பணி அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாகும்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூடுதல் நேர்காணல் நாட்கள் கொரோனா காரணமாக விசா செயலாக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவை நிவர்த்தி செய்வதற்கான பல கட்ட முயற்சிகளின் முக்கியப் பகுதியாக கருதப்படுகிறது. ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் சனிக்கிழமைகளில் நேர்காணல்களை நடத்துவதைத் தவிர, அமெரிக்கத் தூதரகம் அதன் செயல்பாட்டு நேரத்தை நீட்டிக்கிறது.


 • முன்பு விசா வழங்கப்பட்டவர்களுக்கு “நேர்காணலை தள்ளுபடி செய்வது” அல்லது “தொலைநிலை நேர்காணல்கள்” (remote processing of interview) மூலம் அவற்றைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


 • ஜனவரி மற்றும் மார்ச் 2023க்கு இடையில், செயலாக்கத்திறனை அதிகரிக்க வாஷிங்டன் மற்றும் பிற தூதரகங்களில் இருந்து 12க்கும் அதிகமான தற்காலிக தூதரக அதிகாரிகள் இந்தியாவிற்கு வர உள்ளனர்.


 • தூதரகம் மற்றும் தூதரகங்களுக்கு நிரந்தரமாக நியமிக்கப்படும் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையையும் வெளியுறவுத் துறை அதிகரித்து வருகிறது.


 • இந்தியாவில் உள்ள யு.எஸ் மிஷன் 250,000 கூடுதல் B1/B2 விசாக்களை வெளியிட்டுள்ளது.


 • மும்பை துணைத் தூதரகம் கூடுதல் நேர்காணல்களை நடத்துவதற்காக அதன் வார நாட்களின் வேலை நேரத்தை நீட்டித்துள்ளது.


கொரோனா தொற்றுநோயால், விசாக்கள் வழங்கும் நடைமுறையின் செயலாக்கம் குறைக்கப்பட்டது. மேலும், பல தூதரகங்கள் மற்றும் தூதரகங்கள் சில நேரங்களில் அவசரச் சேவைகளை மட்டுமே வழங்க முடிந்தது.

Visa

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரகம் முறையான பயணத்தை எளிதாக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளது மற்றும் 2022 ஆம் ஆண்டில் 800,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர் மற்றும் வேலைவாய்ப்பு விசாக்களின் பதிவு எண்கள் அடங்கும்.


இனி மற்ற எல்லா விசா வகைகளிலும், இந்தியாவில் நேர்காணல் காத்திருப்பு நேரங்கள் தொற்றுநோய்க்கு முன்பிருந்தது போலவோ அல்லது குறைவாகவோ இருக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் கூடுதல் விவரங்களை அறிய https://www.ustraveldocs.com/in/en என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.