திக்குவாய்; மனைவி, மகள், மகன் இழப்பு: 9 மணிநேர அறுவை சிகிச்சை; போராட்டக் குணத்தால் மீண்ட அதிபர் ‘ஜோ பைடன்' கதை!

By malaiarasu ece|21st Jan 2021
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி ஏற்றிருக்கிறார் ஜோ பைடன். அவ்வளவு ஒன்றும் எளிதாக அவர் இந்த இடத்தை அடைந்துவிடவில்லை. இதற்காக அவர் கொடுத்த விலையோ கொஞ்ச நஞ்சமல்ல... ஜோ பைடனின் கடந்த கால வாழ்க்கையை இந்நேரத்தில் புரட்டிப்பார்ப்பது சரியாக இருக்கும்...

பிறப்பு :

அது ஒரு வசதியான குடும்பம் தான். 1942ம் ஆண்டு பென்சில்வேனியாவில் உள்ள அந்த குடும்பத்தில் ஜோஸப் பைடன் பிறப்பதற்கு முன்பு வரை வசதியாக்கதான் இருந்தார்கள். அவரது பிறப்பைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் வறுமையை சந்ததித்தது அந்த குடும்பம்.


பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் தான் ஜோ பைடனின் தந்தை செய்துவந்தார். ஆனால், கடுமையான உழைப்பாளி. அவரிடமிருந்த தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தான் பைடனை வலுப்பெற வைத்தது. 

திக்கிப்பேசும் பைடன் :

நண்பர்கள், 'திக்குவாய் பைடன்’ என்று கிண்டல் செய்தபோது வலியுடன் கடந்தவர், அதை உடைக்க எண்ணினார். அதற்காக வேண்டி, மிக நீண்ட கவிதைகள், கட்டுரைகளைச் சத்தமாகச் சொல்லிப் பார்த்து தன் திக்கிப்பேசும் பழகத்தைத் தானே மாற்றிக்கொண்டார் பைடன்.


1961-ம் ஆண்டு டெலாவர் (Delaware) பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் பாடப்பிரிவில் சேர்ந்தார். பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணியிலும் சிறந்து விளங்கினார். கல்லூரியில் படிக்கும்போதுதான் அரசியல் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார் பைடன்.

பைடன்

இளம் வயதில் ஜோ பைடன்

கல்லூரிக் காதலி நீலியாவை (Neilia) கரம் பிடித்தார். 1968-ல் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். பின்னர், தன்னை ஜனநாயகக் கட்சியில் இணைத்துக் கொண்டார். 1972ம் ஆண்டு செனட் சபை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டார்.


பலம் மிகுந்த குடியரசுக் கட்சி வேட்பாளர் கேலப் பாக்ஸ் (Caleb Boggs) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். வாக்குச் சேகரிப்பதற்கான பண பலமும், ஆள் பலமும் இல்லாதவர் என்பதால் குடியரசுக் கட்சியினர் அலட்சியமாக இருந்தனர். தன் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டவர், வென்றும் காட்டினார்.

ஆம்! மிக இளம் வயதிலேயே செனட் உறுப்பினராக தேர்வானார் ஜோ பைடன்.

விபத்து :

பைடனுக்கு மகிழ்ச்சி என்பது நீண்ட நேரம் நிலைக்கக் கூடிய ஒன்றாக இருந்ததில்லை. செனட் சபை உறுப்பினரான மகிழ்ச்சியைக் கொண்டாடி முடிப்பதற்குள் அந்த செய்தி அவர் காதுக்கு வந்தது. அதிர்ந்து போனார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக மூன்று குழந்தைகளுடன் ஷாப்பிங் சென்றிருந்தார் பைடனின் மனைவி நீலியா. அப்போது நீலியாவின் காரின் மீது சரக்கு லாரி ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

பைடன்

அந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரின் மனைவியும் மகளும் உயிரிழந்தனர். அவரின் மகன்கள் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். பின்னர், தன் மகன்கள் சிகிச்சை பெற்றுக்கொண்ட அறையிலிருந்தே செனட் உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார் பைடன்.

தினமும் டெலாவரிலிருந்து வாஷிங்டனுக்கு ரயில் மூலம் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து, செனட் சபைக்கான பணிகளைச் செய்துவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார்.

36 ஆண்டுக் காலமும் ஆம்ட்ராக் ரயிலிலேயே (Amtrak train) பயணம் மேற்கொண்டு வாஷிங்டனுக்குச் சென்று வந்தார்.


1987-ம் ஆண்டு அதிபர் வேட்பாளருக்காக விண்ணப்பித்து அதற்கான பிரசாரத்தை ஜனநாயகக் கட்சியினரிடம் தொடங்கினார் பைடன். அந்தச் சமயத்தில் பைடனுக்கு மூளையின் ரத்த நாளங்களில் ஏற்பட்ட பிரச்னை கண்டறியப்பட்டு, அதற்கான அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

அதன் பக்கவிளைவாக நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. அதற்காக மீண்டுமொரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. 9 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் பைடன் உயிர் பிழைப்பதே கடினம் என்று சொல்லப்பட்டது.

அதையெல்லாம் கடந்து வந்தார் பைடன். ஏழு மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அதிபர் வேட்பாளருக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவர் நெயில் கின்னாக்கின் (Neil Kinnock) பேச்சைக் காப்பியடித்து பைடன் பேசினார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து விலகிறனார்.


அதிலிருந்து 2008-ம் நடைபெறவிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்க முடிவு செய்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயகக் கட்சி சார்பில் நடத்தப்படும் அதிபர் வேட்பாளர் யார் என்பதற்கான தேர்தலில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றார், இதனால் அதிபர் தேர்தலிலிருந்து மீண்டும் விலகினார். ஒபாமாவின் அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டார்.

பைடன்

2015-ம் ஆண்டு பைடன் துணை அதிபராக இருந்தபோது அவரது இரு மகன்களுள் ஒருவர் மூளைப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அந்தச் சோகத்திலிருந்து சில காலம் கழித்தே பைடனால் மீள முடிந்தது. அந்தச் சமயத்தில்,

“2016 அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை,” என்று கூறி அரசியலிலிருந்து ஒதுங்கினார் பைடன்.

2020ம் ஆண்டு தேர்தல் பைடன் போட்டியிடுவார் என்று பேசப்பட்டபோது,

“நான் இன்னும் என் மகனின் இழப்பிலிருந்து மீளவில்லை. அதனால் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை,'' என்று சொல்லியிருந்தார் பைடன். இருப்பினும் காலம் அவரை தேர்தலை நோக்கித் தள்ளியது. அதிபராக்கி அழகு பார்த்துள்ளது.

திக்குவாய் பழக்கத்திலிருந்து தானாகவே முயன்று மீண்டு, வறுமையிலிருந்து தன் குடும்பத்தை மீட்டெடுத்தது, அறுவை சிகிச்சையிலிருந்து போராடி உடல்நலம் பெற்று மனைவியை இழந்து, குழந்தையை இழந்து தன் போராட்டக் குணத்தால் மீண்டுவந்தவர் பைடன்.


அந்தப் போராட்டக் குணம் தான் அவரை அதிபராக்கியது. மிகவும் வயதான அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார் பைடன்.


வாழ்த்துகள் பைடன்!