பெருந்தொற்று சமயத்தில் அபார சேவை; ஊத்துக்குளி மருத்துவருக்கு இங்கிலாந்து உயரிய விருது!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த மருத்துவர் பாலச்சந்திரனுக்கு இங்கிலாந்து நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
5 CLAPS
0

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த மருத்துவர் பாலச்சந்திரனுக்கு இங்கிலாந்து நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

யார் இந்த பாலச்சந்திரன்?

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 1964ம் ஆண்டு பிறந்தவர் பாலா என்கிற பாலச்சந்திரன். இவரது தந்தை சுப்பிரமணியம், கார்பென்டராக பணியாற்றி வந்துள்ளார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன், ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

அதன் பின்னர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவ பட்டமும், மதுரை மருத்துவக் கல்லூரியில் மயக்கவியலில் நிபுணர் பட்டமும் பெற்றுள்ளார்.

2002ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்து நாட்டின் கார்டிஃப் மற்றும் வேல் யுஹெச்பி மருத்துவமனையில் கிட்டதட்ட 20 ஆண்டுகளாக மயக்க மருந்து மருத்துவராகப் பணியாறி வருகிறார்.

மருத்துவர் பாலச்சந்திரனுக்கு இங்கிலாந்து அரசு இப்படியொரு உயரிய கெளரவத்தை வழங்கியுள்ளது குறித்து ஊத்துக்குளியில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். பிரபல ஆங்கில பத்திரிகைக்கு பாலச்சந்திரனின் மைத்துனரான எம்.ரவி அளித்த பேட்டியில்,

“பாலச்சந்திரன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துவிட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 1989ல் அங்கேயே எம்.டி., டிப்ளமோ இன் அனஸ்தீசியா முடித்தார். இங்கிலாந்துக்கு செல்லும் முன் கரூர் அரசு மருத்துவமனையிலும், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலும் பல ஆண்டுகள் பணியாற்றினார். இப்போது, ​​அவர் அதே பல்கலைக்கழகத்தில் தொற்று கட்டுப்பாட்டு வாரியத்தை வழிநடத்துகிறார்,” எனத் தெரிவித்தார்.

பத்மஸ்ரீக்கு நிகரான இங்கிலாந்து அரசின் உயரிய விருது:

மருத்துவர் பாலச்சந்திரனுக்கு இங்கிலாந்து மகாராணி கையால் பிரிட்டிஷ் அரசின் கெளரவ உயரிய விருதான “மெம்பர் ஆப் தி ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர்” (Member of the British Empire) விருது வழங்கப்பட உள்ளது. MBE என அழைக்கப்படும் இந்த விருதானது பிரிட்டிஷ் எம்பயர் வரிசையில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்.

கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் (சிபிஇ) மற்றும் ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் (ஓசிஇ) அதிகாரிகளுக்குப் பிறகு, “மெம்பர் ஆப் தி ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர்” என்பது மூன்றாவது மிகப்பெரிய விருதாகும். இந்த உயரிய விருது அவர்களின் துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒருவருக்கு வழங்கபட்டு வருகிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதுக்கு நிகரானது இங்கிலாந்து அரசால் மருத்துவர் பாலச்சந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ள ‘மெம்பர் ஆப் தி ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ விருது.

பாலச்சந்திரனுக்கு MBE விருது வழங்கப்பட காரணம்:

தமிழகத்தின் அரசுப் பள்ளி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்ற மருத்துவர் ஒருவருக்கு இங்கிலாந்து நாட்டின் உயரிய விருது வழங்கப்பட காரணம் என்ன என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். கொரோனா பெருந்தோற்று காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் மிகப்பெரிய அளவில் இருந்தது.

அப்படிப்பட்ட கொரோனா பெருந்தோற்று காலத்தில் அரும்பணியாற்றியதற்காகவே மருத்துவர் பாலச்சந்திரனுக்கு இப்படியொரு உயரிய கெளரவிப்பை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

கார்டிஃப் மற்றும் வேல் யுஹெச்பி மருத்துவமனையின் தொற்று கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மருத்துவர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது கொரோனா தொற்றிலிருந்து சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்களை பாதுகாக்க தேவையான PPE எனப்படும் கவச உடைகளில் அவர் அதிகம் கவனம் செலுத்தினார்.

அவரது PPE வழிகாட்டுதல் நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களது சக ஊழியர்களுக்கு இடையே கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதில் பெரும் பங்காற்றியது. இதனால் சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் பணிச்சூழலில் பாதுகாப்பாக உணர்ந்தனர், இது கார்டிஃப் மற்றும் வேல் யுஎச்பியில் உள்ள பணியாளர்களின் பராமரிப்பிற்கு உதவியது.

மேலும், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் மருத்துவர் பாலச்சந்திரன் மற்றும் அவரது குழுவினர் பல்வேறு ஃபில்டரிங் ஃபேஸ் பீஸ் 3 (FFP3) முகமூடிகளில் 3200க்கும் மேற்பட்ட முகமூடிகளை சோதனையிட்டு, சரியானதை கண்டறிந்தனர். UHB இல் உள்ள ஊழியர்களைப் பாதுகாக்க மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுவாசக் கருவிகளை கண்டறிவதிலும் இவர்கள் பங்கு சிறப்பானதாக இருந்தது.

கொரோனா பெருந்தோற்று காலத்தில் தொற்றைக் கட்டுப்படுத்துவதும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதும் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் மருத்துவப் பணியாளர்களுக்குள் தொற்று பரவால் கட்டுப்படுத்துவதும் இன்றியாமையாதது ஆகும்.

மருத்துவர் பாலாவின் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளால் கார்டிஃப் மற்றும் வேல் யுஎச்பியில் உள்ள பணியாளர்களிடையே கொரோனா தொற்று பரவுவது குறைக்கப்பட்டது. இந்த சிறந்த சேவையை பாராட்டியே இங்கிலாந்து அரசு அவருக்கு ’மெம்பர் ஆப் தி ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ என்ற விருதை அறிவித்துள்ளது.

தற்போது லண்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் தொற்று கட்டுக்குள் வந்த பிறகு இங்கிலாந்து ராணி கையால் பாலச்சந்திரனுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.

Latest

Updates from around the world