தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியின் விலை மத்திய அரசு நிர்ணயம் செய்தது!

தடுப்பூசிகளின் விநியோகத்தை அதிகரிக்கவும் முடிவு!
1 CLAP
0

கொரோனாவை எதிர்த்து தற்போது இந்தியா நடத்தி வரும் போரில் நம்மிடம் இருக்கும் ஆயுதமாக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் கைகொடுத்து வருகிறது. இதையடுத்து, மூன்றாவது தடுப்பூசியாக ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இந்த மாத மத்தியில் வர்த்தக ரீதியில் பயன்பாட்டுக்கு வருகிறது.

நேற்றுமுன்தினம் பேசிய பிரதமர் மோடி, புதிய தடுப்பூசி கொள்கையை அறிவித்தார். தொடர்ந்து ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் இலவச தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் அவர் அறிவித்தார், மேலும், எதிர்வரும் நாட்களில் நாட்டில் தடுப்பூசி வழங்கல் கணிசமாக அதிகரிக்கும் என்றும் பேசினார்.

இந்தநிலையில் தான், தற்போது தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்பூட்னிக் வி ஆகியவற்றின் கட்டணங்களை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி, தனியார் மருத்துவமனைகள் கோவிஷீல்ட் ரூ.780, கோவாக்சின் ரூ.1,410, மற்றும் ஸ்பூட்னிக் வி ரூ.1,145 என கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை அதிகரிப்பது குறித்து முடிவு செய்த பின்னர் இந்தக் கட்டண அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தடுப்பூசி என்ற பெயரில் நோயாளிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை காணப்படுகிறது.

இதேபோல், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் விநியோகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் இதுதொடர்பாக பேசும்போது,

“25 கோடி டோஸ் கோவிஷீல்ட் மற்றும் 19 கோடி டோஸ் கோவாக்சின் வாங்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. 30 கோடி அளவிலான உயிரியல் மின் தடுப்பூசி (Biological E's vaccine)யை வாங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும்," என்றுள்ளார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும், இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இதற்கு ஆகும் செலவு விவரங்களும் வெளியாகியுள்ளன.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஆகும் செலவு ரூ.1.45 லட்சம் கோடிக்கும் அதிகம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதில்,

இலவச தடுப்பூசித் திட்டத்துக்காக மட்டும் ரூ.45 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்றும், இது கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடியை விட அதிகமாகும். இதைப்போல இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் நவம்பர் வரை வழங்கும் திட்டத்துக்கு ரூ.1.1 லட்சம் கோடி முதல் ரூ.1.3 லட்சம் கோடி வரை செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.