'பங்குதாரர்களிடையே வணிகத் தலைவர்கள் ‘நம்பிக்கை’-யை உருவாக்கவேண்டும்’ - வலா அஃப்ஷர்

வலா அஃப்ஷர் இந்தியா மீது நம்பிக்கை கொண்டிருப்பதற்கான காரணங்கள் பற்றியும் சமூக வலைதளங்கள் பற்றியும் டிஜிட்டல் செயல்பாடுகளுக்கு மாறுவது பற்றியும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
6 CLAPS
0

உலகளவில் செயல்படும் மிகப்பெரிய நிறுவனமான 'SalesForce' நிறுவனத்தின் சீஃப் டிஜிட்டல் இவான்ஜலிஸ்ட் வலா அஃப்ஷர். இவர் ட்விட்டர், லிங்க்ட்இன் என சமூக வலைதளங்களில் மக்களிடையே மிகவும் பிரபலமானவர்.

எளிதாகவும் சிறியளவிலும் மக்களிடையே இவர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பலருக்கு உந்துதலாக இருக்கின்றன. 2015-ம் ஆண்டு ’சேல்ஸ்ஃபோர்ஸ்’ நிறுவனத்தில் இணைந்தபோது சீஃப் டிஜிட்டல் இவான்ஜலிஸ்ட் என்கிற பதவியே இல்லை. இந்தப் பதவியை இவரே செதுக்கிக்கொண்டதுடன் மற்றவர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறார்.

வலா அஃப்ஷர்

இவர் Disrupt TV என்கிற வாராந்திர வீடியோ தொடரை இணைந்து வழங்குகிறார். The Pursuit of Social Business Excellence என்கிற இவரது புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் இந்தியா மீது நம்பிக்கை கொண்டிருப்பதற்கான காரணங்கள் பற்றியும் சமூக வலைதளங்கள் பற்றியும் டிஜிட்டல் செயல்பாடுகளுக்கு மாறுவது பற்றியும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவருடன் நடந்த உரையாடல் தொகுப்பிலிருந்து:

யுவர்ஸ்டோரி: Freshworks நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் (NASDAQ) பட்டியலிடப்பட்டுள்ளது ஸ்டார்ட் அப் உலகத்தின் வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த உங்களது பார்வை என்ன? இந்தியாவில் SaaS நிறுவனங்களின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வலா அஃப்ஷர்: வரும் நாட்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் மேலும் பல நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு குறித்து அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறப்பாக வளர்ச்சியடையவேண்டும் என்பதே சேல்ஸ்ஃபோர்ஸ் விருப்பம். இதற்காகவே சேல்ஸ்ஃபோர்ஸ், இந்தியா உட்பட பல ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளது.

இந்தியா தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கட்டமைப்பு மற்றும் திறன் கொண்டிருப்பதால் செயற்கை நுண்ணறிவு புரட்சியை சிறப்பாக எதிர்கொள்ளும்.

இந்தியாவில் 2,700 செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப்கள் செயல்படுவதை இந்த ஆண்டின் மத்தியில் தெரிந்துகொண்டேன்.  மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 400-க்கும் குறைவாக இருந்தது. எங்களது இந்திய செயல்பாடுகள் சேல்ஸ்ஃபோர்ஸ் வெற்றிக்கு பெரும் பங்களிக்கிறது என நம்புகிறேன்.

யுவர்ஸ்டோரி: வணிகத் தலைவர்களுக்கு சமூக வலைதள மார்க்கெட்டிங் சார்ந்த உத்திகளாக எதைப் பரிந்துரைக்கிறீர்கள்?

வலா அஃப்ஷர்: நான் வலியுறுத்த விரும்பும் வார்த்தை ‘நம்பிக்கை’. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியை ரேச்சல் போட்ஸ்மேன் எழுதியுள்ள Who Can You Trust புத்தகத்தின்படி நம்பிக்கை என்கிற வார்த்தையை செயல்திறன், குணம் ஆகியவற்றின் கலவையாகப் பார்க்கலாம்.

அவர் செயல்திறன் என்கிற வார்த்தையை மேலும் நுணுக்கமாக திறன், நம்பகத்தன்மை என விவரிக்கிறார். உங்களிடம் திறன் இருப்பதை வெளிப்படுத்தும் அதேசமயம் நீங்க நம்பகத்தன்மையுடனும் இருக்கவேண்டும். அதேபோல் குணம் என்பதை நேர்மை, கருணை என விவரிக்கிறார். கருணை என்கிற வார்த்தை என்னைப் பெரிதும் கவர்ந்தது. உங்கள் நோக்கம் என்ன என்பதை இதுவே உணர்த்தும்.

ஊக்கமளிப்பதற்கும் சாதகமான வகையில் பயன்படுத்திக்கொள்வதற்கும் இடையே ஒரு மெல்லிய இழை மட்டுமே வித்தியாசம் உள்ளது. அந்த மெல்லிய இழையை நம் நோக்கம் விவரித்துவிடும்.

நான் ஒரு உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது மற்றவர்கள் அதுபற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கத்தை முன்னிறுத்தியே பகிர்ந்துகொள்வேன். எனவே நீங்கள் சமூக வலைதளங்களில் வலைப்பதிவு இடுபவராகவோ பாட்காஸ்ட் வழங்குபவராகவோ அல்லது உள்ளடக்கம் உருவாக்குபவராகவோ இருந்தால் உங்கள் செயல்திறனை வெளிப்படுத்துங்கள்; அது நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் நேர்மையாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆன்லைனில் தகவல்களைப் பெறுபவர்கள் அதன் உண்மைத்தன்மையைத் தெரிந்து கொள்வதற்கு நேரம் செலவிட்டு அக்கறை காட்டுவதில்லை. இதனால் பல தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன. அதேசமயம் நான் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் அனைத்துமே நூறு சதவீதம் துல்லியமானது என்று நான் சொல்லவில்லை. ஒருவேளை அதில் தவறு இருப்பது தெரியவந்தால் உடனடியாக டெலிட் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிடுவேன்.

யுவர்ஸ்டோரி: 80% தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் ரீதியான செயல்பாடுகளுக்கு மாறும் பயணத்தை தொடங்கியுள்ளன. ஆனால் சுமார் 3% மட்டுமே அதை நிறைவு செய்துள்ளதாக மெக்கின்சே ஆய்வு தெரிவிக்கிறது. உங்கள் பார்வையில் கடந்த ஆண்டில் டிஜிட்டல் செயல்பாடுகளுக்கான மாற்றம் எப்படி உள்ளது?

வலா அஃப்ஷர்: டிஜிட்டலில் செயல்பட்டால் நல்லது என்கிற எண்ணத்தை மாற்றி கட்டாயம் டிஜிட்டல் ரீதியாகத்தான் செயல்படவேண்டும் என்கிற சூழலை கோவிட் ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் செயல்பாடுகளுக்கான மாற்றத்தை கோவிட் துரிதப்படுத்தியுள்ளது.

பணிக்கலாச்சாரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் வீட்டிலிருந்தே திறம்பட பணிகளை செய்துமுடிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மின்வணிக செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் நுகர்வோர் வாங்கும் விதத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் உள்ள 60 சதவீத நுகர்வோர் சிறந்த மதிப்பையும் தரத்தையும் எதிர்பார்த்து பிராண்டுகளை மாற்றியுள்ளனர். நுகர்வோரிடம் காணப்படும் இந்த மாற்றத்திற்கு இந்தியா முன்னோடியாக விளங்குகிறது.

இதுபோன்ற பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் அணுகுமுறைகளால் கிளவுட் பயன்பாடு அதிகரித்துள்ளது. நிறுவனங்கள் டிஜிட்டல் செயல்பாடுகளுக்கு மாறுவதில் கிளவுட் கம்ப்யூடிங் முக்கியப் பங்கு வகிப்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அடுத்த ஐந்தாண்டுகளில் சேல்ஸ்ஃபோர்ஸ் தொடர்புடைய நிறுவனங்கள் புதிதாக 1.6 ட்ரில்லியன் டாலர் வருவாயை உருவாக்க இருப்பதாக இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (IDC) தெரிவிக்கின்றன. இதன் காரணமாக 9.3 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

யுவர்ஸ்டோரி: தவறான தகவல்கள் பரவுவதாகவும் சமூக நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் மீது நம்பிக்கையில்லா நிலை காணப்படுவதாகவும் 2021 Edelman Trust Barometer தெரிவிக்கிறது. நம்பகத்தன்மையை கட்டாயமாக்குவது எப்படி?

வலா அஃப்ஷர்: மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் பச்சாதாப உணர்வு நமக்கு அவசியம். நாம் அதிகம் கேட்கவேண்டும். அனைவரும் போராட்டத்தை சந்தித்து வருவதால் மற்றவர்களுக்கு உதவ முன்வரவேண்டும். கொரோனா பெருந்தொற்றால் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளோம்.

சுகாதாரம், பொருளாதாரம், பருவநிலை என ஏராளமான நெருக்கடிகளை சந்திக்கிறோம். வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அதிகரித்ததால் பணியாளர்கள் தொடர்பாக மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது.

15 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வருகிறார்கள். பெரும்பாலான ஊழியர்கள் வராத நிலையிலும் நிறுவனங்கள் உள்கட்டமைப்பை நிர்வகிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. பலர் வேலையை ராஜினாமா செய்கிறார்கள். பல வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்கிறார்கள். பெண்கள் அதிகளவில் வேலையை விட்டு விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி பல்வேறு நெருக்கடிகளில் நம்பகத்தன்மை மிகப்பெரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

வணிகத் தலைவர்கள் தங்கள் பங்குதாரர்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்த நம்பிக்கை என்கிற அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்தி தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும். இந்த இரண்டுமே முக்கியமானது.

யுவர்ஸ்டோரி: வாடிக்கையாளர்களைப் பொருத்தவரை தனித்தேவைக்கேற்ப சேவையளிப்பது முக்கியமாகிறது. எனவே இன்றைய போட்டி நிறைந்த சூழலில் பிராண்டுகள் எப்படி தங்களை வேறுபடுத்திக் காட்டலாம் என நினைக்கிறீர்கள்?

வலா அஃப்ஷர்: இணையம் புரட்சியை ஏற்படுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில் இண்டர்நெட் நிறுவனங்கள் மிகவும் மதிப்புவாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. நான் பிறக்கும்போதே மொபைல், இணையம், சமூக ஒருங்கிணைப்பு, கிளவுட் அப்ளிகேஷன் போன்றவற்றுடன் பிறக்கவில்லை. ஆனால் என் 17 வயது மகன் டிஜிட்டல் ரீதியாக சிறப்பாகக் கையாள்கிறார்.

எனவே இதுபோன்ற சூழலில் பிராண்டுகள் தாங்கள் உறுதியளிக்கும் விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இல்லையெனில் வாடிக்கையாளர்களியும் பங்குதாரர்களையும் இழக்க நேரிடும்.

ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி டி | தமிழில்: ஸ்ரீவித்யா