முருகப்பா நிர்வாகக் குழுவில் இடம்பெற வள்ளி அருணாச்சலம் எடுத்துள்ள உரிமைப் போராட்டம்!

முருகப்பா குழுமத்தின் முன்னாள் நிர்வாகத் தலைவர் எம்வி முருகப்பனின் மகளான வள்ளி அருணாச்சலம் முருகப்பா குழுமத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெறுவதற்காக போராடுவதுடன் பாலின பாகுபாடுகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார்.
1 CLAP
0

முருகப்பா குழுமத்தின் முன்னாள் நிர்வாகத் தலைவர் எம்வி முருகப்பன். இவரது மூத்த மகள் வள்ளி அருணாச்சலம். இவர் நிர்வாகக் குழுவில் இடம்பெறவேண்டும் என்று போராடி வருகிறார். அதுமட்டுமல்லாது இவர், ஆணாதிக்க முறைக்கு எதிராகவும் பாலின பாகுபாடுகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார்.

முருகப்பா குழுமம் சைக்கிள், சர்க்கரை, அப்ரசிவ், உரம், நிதிச்சேவை, தயாரிப்பு என பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. 120 ஆண்டு கால பழமையான இந்தக் குழுமம் ஆண் வாரிசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார் வள்ளி அருணாச்சலம்.

ஹெர்ஸ்டோரி உடன் அவர் பங்கேற்ற உரையாடலில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்தார்.

வள்ளி அருணாச்சலம் நியூக்ளியர் பிசிக்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டமும் எம்.பில் பட்டமும் பெற்றவர். நியூக்ளியர் பொறியயல் பிரிவில் பிஎச்டி முடித்துள்ளார். பல்வேறு ஃபார்சூன் 500 நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமிக்கவர்.

தற்போது செமி-கண்டக்டர் துறையில் சுயாதீன ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். முருகப்பா நிர்வாகக் குழுவில் இடம்பெறுவதற்குத் தேவையான தகுதிகள் தனக்கு முழுமையாக இருப்பதாக வள்ளி தெரிவிக்கிறார்.

வள்ளியின் தந்தையின் மறைவிற்குப் பின்னர் வள்ளியும் அவரது அம்மாவும் அவரது சகோதரியும் வணிகத்தில் இருந்து நியாயமான முறையில் விலக விரும்பியுள்ளனர்.

“மூன்றாண்டுகள் அலைகழித்தனர். நாங்கள் சுமுகமான முறையில் தீர்வுகாண தொடர்ந்து முயற்சி செய்தோம். ஆனால் பலனில்லை. வணிகத்தில் நாங்களும் பங்குதாரர்கள் என்பதால் நிர்வாகக் குழுவில் என்னை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டேன். அதையும் மறுத்துவிட்டார்கள். என்னை விண்ணப்பிக்குமாறும் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நடக்க இருக்கும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து கலந்தாலோசிப்பதாகவும் கூறினார்கள்,” என்கிறார் வள்ளி.

நிர்வாகக் குழுவில் இடம்பெறத் தேவையான தகுதியும் அனுபவமும் இருப்பதால் நியாயமான முறையில் நடந்துகொள்வார்கள் என்று வள்ளி நம்பியுள்ளார். அனைவரும் ஒருமனதாக நிராகரித்தது வள்ளிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தன்னுடைய போராட்டம் மட்டுமல்ல என்றும் தங்களது உரிமைக்காக போராடும் ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் போராட்டம் என்றும் வள்ளி குறிப்பிடுகிறார்.

“இதுபோன்ற சூழலைக் குறித்து வெறுமனே வருத்தம் தெரிவித்தால் போதாது. துணிந்து பெண்களின் உரிமைக்காக போராடவேண்டும். என்னுடைய நோக்கத்தில் நான் உறுதியாக இருக்கிறேன,” என்கிறார் வள்ளி.

அவர் மேலும் கூறும்போது,

“என் பெற்றோர் அறம், கல்வி, நிபுணத்துவம் ஆகியவற்றின் முக்கியத்தை உணர்ந்தவர்கள். இவற்றை வலியுறுத்தும் வகையில் எங்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார்கள். உரிமைக்காக போராடும் குணத்தையும் ஊட்டியே வளர்த்தார்கள். கல்வி வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொடுத்து, அறிவை விரிவடையச் செய்து வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்,” என்கிறார்.

பெண்கள் உயர்பதவி வகிக்கவேண்டும்

2021 காலகட்டத்திலும் நிர்வாகக் குழுவில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது.

தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் முன்னணி 500 நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு சுயாதீன பெண் இயக்குநர் இடம்பெற்றிருக்கவேண்டும் என்பதை 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியும் முன்னணி 1000 நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு சுயாதீன பெண் இயக்குநர் இடம்பெற்றிருக்கவேண்டும் என்பதை 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியும் செபி அமைப்பு கட்டாயமாக்கியது. இது வரவேற்கத்தக்கது என்றாலும் மாற்றத்தைக் கொண்டு சேர்க்கும் அளவிற்கு இது போதுமானதாக இல்லை.

”நிறுவன கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படவேண்டும். நிறுவனங்களில் கடைநிலை ஊழியர் தொடங்கி உயர்பதவி வரை அனைத்து பொறுப்புகளிலும் பெண்கள் நியமிக்கப்படவேண்டும்,” என்று தெரிவிக்கிறார் வள்ளி.

பெண்கள் தங்கள்முன் தோன்றும் தடைகளைத் தகர்த்தெறிந்து, பாலின பாகுபாடுகளைக் களைந்து, மாற்றத்தைக் கொண்டு சேர்க்க முற்படவேண்டும்.

“கொள்கை அளவில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும். பெண்கள் அடுத்தடுத்த கட்டமாக உயர்பதவிகளுக்கு முன்னேறவேண்டும். நியாயமான சட்டதிட்டங்கள் வகுக்கப்படுவதுடன் பெண்கள் முன்னேற்றத்திற்கு பயிற்சியும் வழிகாட்டலும் வழங்கப்படவேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

பெண்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட முக்கியத் தடையாக இருப்பது பயம். சமூக புறக்கணிப்பு, நிதி சார்புத்தன்மை போன்றவையே இந்த பயத்தை ஏற்படுத்துகிறது. சமூக கட்டுப்பாடுகள் தொடர்பான தவறான கற்பிதங்களை மாற்றி அமைக்கவேண்டும்.

“பெண்களுக்கு சக்தியளிக்கப்படவேண்டும். பெண்கள் மாறுபட்ட கண்ணோட்டத்தில் தனித்துவமானத் தீர்வுகளை முன்வைக்கும் திறன் கொண்டவர்கள். எனக்கு நிர்வாகக் குழுவில் வாய்ப்பு கிடைக்கும்போது இதை வெறும் வார்த்தைகளால் இல்லாமல் நிச்சயம் செயல்படுத்திக் காட்டுவேன்,” என்கிறார் வள்ளி அருணாச்சலம்.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world