’எங்கள் கடமை அல்ல; மக்களுக்காக இதைச் செய்தோம்' - விபத்துகளை தடுக்க போலீஸார் உதவிக்கரம்!

விஜயவாடா மக்களை நெகிழவைத்த இரண்டு அதிகாரிகள்!
1 CLAP
0

விஜயவாடா - நுஸ்விட் நெடுஞ்சாலை மற்றும் விஸ்ஸன்னப்பேட்டை, மயிலாவரம் மற்றும் அகிரிப்பள்ளியை இணைக்கும் பிற சாலைகள் முக்கியமான போக்குவரத்து மிகுந்த சாலைகள். ஆனால் இங்கு ஏற்பட்டுள்ள பள்ளங்கள், போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தன.

இதனை பழுதுபார்க்க மக்கள் முறையிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்காதது தான் மிச்சம். இந்த நிலையில் தான் நுஸ்விட் துணைப் பிரிவு போலீஸார் இருவர் இந்த பள்ளங்களை தங்களது சொந்த ஏற்பாட்டில் சரி செய்ய முன்வந்தனர்.

நுஸ்விட் டிஎஸ்பி பி சீனிவாசுலு மற்றும் ஸ்டேஷன் அதிகாரிகள் (எஸ்ஹெச்ஓ) இணைந்து தங்களின் தலைமையின் கீழ் செயல்படும் மற்ற காவல்நிலைய அதிகாரிகள், அவர்களின் காவல் நிலைய எல்லைகளில் உள்ள அனைத்து பள்ளங்கள் மற்றும் விபத்து ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு, ஒரு விரிவான அறிக்கையைத் தயாரித்து அவரிடம் சமர்ப்பித்தனர். கிருஷ்ணா மாவட்ட எஸ்பி சித்தார்த் கவுஷலுக்கும் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

நுஸ்விட் டிஎஸ்பி பி சீனிவாசுலு மற்றும் கிருஷ்ணா மாவட்ட எஸ்பி சித்தார்த் கவுஷலும் இணைந்து சாலைகளை சரி செய்ய பணத்தை சேகரித்த பிறகு, சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். இதுதொடர்பாக பேசிய டிஎஸ்பி சீனிவாசுலு,

“மக்கள் தங்கள் கிராமங்களில் உள்ள சாலைகளின் மோசமான நிலையை பலமுறை முறையிட்டும் அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர்களின் அவலநிலை அறிந்து தேவையான இடங்களில் உடனடியாக பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தோம். திங்கள்கிழமை மட்டும் 25 இடங்களில் பள்ளங்களை நிரப்பினோம்.”

பணிகளை நிறைவேற்ற, சாலைகளை குழிகள் இல்லாததாக மாற்ற மக்கள் உதவிக்கரம் நீட்டினார்கள்.

“பள்ளங்களை நிரப்புவது எங்கள் கடமை அல்ல, ஆனால் சில கட்டுமானத் தொழிலாளர்களின் உதவியுடன் நாங்கள் இதைச் செய்தோம், அவர்கள் பயணிகளுக்கு வசதியாக பயணம் செய்ய மற்றும் சாலை விபத்துகளைத் தவிர்க்க முன்வந்தனர்," என்றார்.

தொடர்ந்து பேசியவர், “விஜயவாடா- நுஸ்விட் சாலை மற்றும் திருவனூர் - மயிலாவரம் சாலை, விஸ்ஸன்னப்பேட்டை வழியாக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. கிருஷ்ணா மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் மொத்த சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளில், 30 சதவீதத்திற்கும் அதிகமான விபத்துகள் பொதுவாக இந்த மூன்று சாலைகளிலேயே நடக்கின்றன. எனவே, விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவும், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவும், நுஸ்விட் துணைப் பிரிவில் சாலைப் பழுதுபார்க்கும் பணியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்," என்று விளக்கினார்.

கட்டுரை: Think Change India | தமிழில்: மலையரசு