‘எனக்கும் உலகத்துக்கும் நடுவுல இருந்த இடைவெளியை நிரப்பியது இசை’ - பார்வையற்ற ஷிபானி கோஷ்!
ஆட்டிசம் குறைபாடு, பார்வைத் திறன் குறைபாடு இரண்டும் இருந்தும் குறைபாடுகளை தூக்கியெறிந்துவிட்டு தனது திறமையை மெருகேற்றிக்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார் ஷிபானி கோஷ்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷிபானி கோஷ் ஆட்டிசம் குறைபாடு, பார்வைத் திறன் குறைபாடு இரண்டும் இருந்தும் குறைபாடுகளை தூக்கியெறிந்துவிட்டு தனது திறமையை மெருகேற்றிக்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஷிபானி கோஷ் மேற்கு வங்கத்தின் சிறிய நகரமான கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது அப்பா அசிம் குமார் கோஷ் பள்ளி தலைமை ஆசிரியர். அம்மா சுஜாதா கோஷ் அக்கவுண்டண்டாக இருந்தவர்.
ஷிபானியிடம் குறைபாடு இருப்பது தெரிந்ததும் ஷிபானியை எதற்கும் லாயக்கில்லாதவர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்றெல்லாம் அவரது உறவினர்கள் சொல்லியிருக்கின்றனர்.
“ஷிபானி என் பொண்ணு. அவளை நல்லபடியா வளர்க்கணும்னு முடிவு பண்ணேன். மத்தவங்க பேசின எதையும் நான் காது கொடுத்துக் கேக்கலை. எங்கம்மா எனக்கு ரொம்ப சப்போர்டா இருந்தாங்க. என்கூடவே இருந்து பார்த்துகிட்டாங்க. ஆறு வருஷம் கொல்கத்தால இருந்தோம். அங்கயே ஸ்கூல்ல சேர்த்தோம்,” என்கிறார் ஷிபானியின் அம்மா சுஜாதா கோஷ்.
குழந்தைப் பருவம்
ஷிபானியின் வயதில் இருக்கும் குழந்தைகள் எல்லோரும் ஆடி, ஓடி விளையாடிக் கொண்டிருக்க, ஷிபானி மற்றவர்களுடன் கலந்து இருப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். ஆட்டிசம் குறைபாடு இருந்ததால் சிறப்புப் பள்ளியைத் தேடி சேர்ப்பதும் சிரமமாக இருந்திருக்கிறது.
மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வைக்கலாம் என்று சுஜாதா கோஷ் அவரை வெளியில் அழைத்து செல்வதுண்டு. ஆனால், எதிரில் பார்ப்பவர்களின் கேள்வி காயப்படுத்தும் விதமாகவே இருந்துள்ளது.
”ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா கேள்வி கேப்பாங்க. அவங்க பேச்சும் பார்வையும் மனசுக்கு கஷ்டமா இருக்கும். பெத்தவங்களா மனசு லேசா சலனப்பட்டாகூட ஷிபானியைப் பார்த்தோம்னா எங்களுக்கு தெம்பு வந்துடும்,” என்கிறார் சுஜாதா.
சுற்றி இருப்பவர்கள் ஷிபானியை கிண்டல் செய்தபோதும் ஒவ்வொரு முறையும் ஷிபானி நம்பிக்கையுடன் முன்னேறி சென்றதை அவரது பெற்றோர் கவனிக்கத் தவறவில்லை. இந்த அர்ப்பணிப்பைப் பார்த்ததும் அவருக்கு பள்ளிப் படிப்பில் உதவுவதற்காக ஷிபானியின் அம்மா பிரெய்லி கற்றுக்கொண்டார்.
இசை மீது காதல்
ஷிபானிக்கும் இசைக்குமான சம்பந்தம் அவர் மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே ஆரம்பித்திருக்கிறது.
“எனக்கு மூணு மாசம் இருந்தப்ப எனக்கு நிமோனியா வந்துது. ராத்திரி முழுக்க தூங்காம இருந்தேன். காலையில எங்கப்பாவும் அம்மாவும் என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. போகற வழியில சாமியார் ஒருத்தர் பாடிகிட்டு இருந்திருக்காரு. பாட்டு சத்தம் கேட்டதும் நான் அழுகையை நிறுத்தியிருக்கேன்,” என்கிறார் ஷிபானி.
ஷிபானி பேசுவதற்கு முன்பே, அதாவது ரெண்டு வயதிலேயே பாட ஆரம்பித்திருக்கிறார்.
“எனக்கும் இந்த உலகத்துக்கும் நடுவுல இருந்த இடைவெளியை நிரப்பினது இசைதான்,” என்கிறார்.
அவரது பிறந்தநாளின்போது அவரது பெற்றோர் அவருக்கு கேசட் ஒன்றை பரிசாக அளித்துள்ளனர். அதை வைத்துக்கொண்டு ஆசையாக பாடியிருக்கிறார். தினமும் ரேடியோவில் பாட்டு கேட்பார். கேட்பது மட்டுமல்ல அவரும் சேர்ந்து பாடுவார்.
“அவளுக்கு மியூசிக் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சுகிட்டோம். வீட்லயே மியூசிக் டீச்சர் ஏற்பாடு பண்ணோம். அதுக்கப்புறம் ஜீ டிவியில கிளாஸ் சேர்ந்து கிளாசிக் மியூசிக் கத்துகிட்டா,” என்கிறார் சுஜாதா.
பாட்டு கற்றுக்கொண்டு போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். குறைபாடு இல்லாத சாதாரண மக்களுடன் போட்டியிட்டார். மெல்ல அவரது திறமைக்கு பின்னால் குறைபாடுகள் மறைந்துகொண்டன. திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது.
முதல் ஆல்பம்
ஷிபானி, ஹெலன் கெல்லர் ஸ்மிரிதி வித்யாமந்திர் பள்ளியில் படித்தார். அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் நடிகராகவும் எம்பி-யாகவும் இருந்த தபோஷ் பால் அவரது பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது ஷிபானி விருந்தினர்களை வரவேற்க பாட்டு பாடியிருக்கிறார். அவரது திறமையைப் பார்த்து ஆச்சரியப்பட்ட தபோஷ் பால் Dhoom என்கிற பிரபல டிவி இசை சானலுடன் ஷிபானிக்கு இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அவர்கள் ஷிபானிக்காக ஒரு ஆல்பம் ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். தாகூரின் பாடல்களும் மேற்கத்திய இசையும் கலந்த ஒரு தனித்துவமான ஃப்யூஷன் ஆல்பம் வெளியானது.
“என் கனவு நனவான மாதிரி இருந்துது. 2013-ல் Tagore Vision சிடி ஆல்பம் வெளியிட்டு புரொஃபஷனல் சிங்கரா அறிமுகமானேன்,” என்கிறார் ஷிபானி.
சொந்தமாக சிடி வெளியிட்டது மட்டுமல்லாமல் ஆல் இந்தியா ரேடியோ ஆகாசவாணி கொல்கத்தாவில் ரபீந்திர சங்கீத் பாடினார்.
இது வெறும் தொடக்கம் மட்டுமே. Rupasi Bangla, ETV, Channel One, Orange Bangla, High News போன்றவற்றில் பாடினார். மேலும் 94.3 Radio One, 101 Fever FM, 92.7 Big FM, 91.9 Friends FM என பல்வேறு ரேடியோ சானல்களில் தன் திறமையை வெளிப்படுத்தினார்.
இசைப்பயணம்
ரபீந்திர சங்கீத்தில் ஷிபானி மாநில அளவில் சாம்பியன். அசோக் பத்ரா, அபிஷேக் தாஸ், சுஜோய் பட்டாச்சாரியா, அமீத்-அஞ்சன், ப்ரீதம் தே உள்ளிட்ட ஏராளமான இசையமைப்பாளர்களுடன் பிளேபேக் ஸ்டூடியோ சிங்கராக பணியாற்றியிருக்கிறார்.
“Colors Bangla சானல்ல Talentino Award வாங்கினேன். சிறப்பா பாடினதுக்காக மேற்கு வங்க அரசாங்கம் ’ரோல் மாடல் அவார்ட்’ கொடுத்தாங்க,” என்கிறார்.
தற்போது 23 வயதாகும் ஷிபானி ரபீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் Vocal Music (Hons) படித்து வருகிறார். ஆல் இந்தியா ரேடியோ, ஆகாஷ்வாணி கொல்கத்தாவில் ரபீந்திரசங்கீத் பாடி வருகிறார்.
இசைப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற வேண்டும் என்பதும் பின்னணிப் பாடகி ஆகவேண்டும் என்பதும் அவரது கனவாக இருக்கிறது. சில மாதங்களில் சொந்தமாக பாடல் வெளியிட இருக்கிறார்.
மாற்றுத்திறனாளி கலைஞர்களை ஊக்குவிக்கும் Mini Concerts தளத்தில் பாடகியாக பங்கேற்றிருக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா