தமிழக அரசியலில் முதல் முறை; பார்வை மாற்றுத்திறனாளி மாவட்ட செயலாளராக நியமனம்!

தமிழக அரசியலில் மாற்றுத்திறனாளி ஒருவர் கட்சியின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
1 CLAP
0

தமிழக அரசியலில் மாற்றுத்திறனாளி ஒருவர் கட்சியின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்திலேயே முதன் முறையாக பார்வையற்ற ஒருவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக நியமித்துள்ளது. இதுவரை எந்த கட்சியும் செய்யாத வகையில் துணிச்சலாக முடிவெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பார்வை மாற்றுத்திறனாளி பி.எஸ்.பாரதி:

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.எஸ். பாரதி அண்ணா, சென்னை அம்பேத்கர் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்துள்ளார். இவருக்கு 3ம் வகுப்பு படிக்கும் வரை கண்பார்வை நன்றாக இருந்துள்ளது. திடீரென கண்பார்வை தெளிவில்லாமல் செல்ல, மொத்தமாக கரும்பலகையில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று கூட பார்க்க முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

பார்வை குறைபாடு தொடர்பாக சிகிச்சை எடுத்த பி.எஸ்.பாரதி அண்ணாவிற்கு 3ம் வகுப்பு படிக்கும் போதே கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை ஜெயின் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 1989ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தவர், கிராமம், கிராமமாக சென்று கம்யூனிச கொள்கைகளை பரப்பும் அளவிற்கு தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.

இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உறுப்பினரானார். அதன் பின்னர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைச் செயலாளராக பதவியாற்றி வந்தார். கண்ணாடியின் உதவியுடன் பார்வை குறைப்பாட்டை சமாளித்து வந்த பி.எஸ்.பாரதி அண்ணாவிற்கு 2014ம் ஆண்டு பேரிடியாய் அமைந்தது. ஆம், கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட காரணத்தால் அவரது முழு பார்வையும் பறிபோனது.

100 சதவீத பார்வை பறிபோனதால் கட்சி பணியாற்ற முடியாமல் போனதை எண்ணி மனம் நொந்த பி.எஸ்.பாரதி அண்ணா, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதுகுறித்து பி.எஸ்.பாரதி அண்ணா கூறுகையில்,

"முழுவதுமாக பார்வை இழந்தது என்னை வேலை செய்ய விடாமல் தடுத்தது, நான் ராஜினாமா செய்தேன். மன அழுத்தத்தையும் தாங்கினேன். ஆனால், நவீன தொழில்நுட்பம் கைக்கு வந்ததால், உடல் ஊனமுற்றோருக்கான பிரிவில் பணியாற்றத் தொடங்கினேன்,'' என்கிறார்.

தற்போது 51 வயதாகும் பி.எஸ். பாரதி அண்ணா பார்வை மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அவரது அயாரத உழைப்பு மற்றும் திறமையை கெளரவிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சி அவருக்கு செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியுள்ளது.

பி.எஸ்.பாரதி அண்ணா, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான தமிழ்நாடு சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு குவியும் பாராட்டுக்கள்:

தமிழ்நாட்டில் இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத அளவிற்கு 100 சதவீதம் பார்வை மாற்றுத்திறனாளியான பி.எஸ்.பாரதி அண்ணாவிற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கியுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு சோசியல் மீடியாக்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஒருவரின் குறைகளை மட்டும் பார்க்காமல், அவரது திறமைக்கு உரிய அங்கீகாரம் கொடுத்த மார்க்சிஸ்ட் கட்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Latest

Updates from around the world