கொரோனா தொற்று நிவாரணத்தில் பங்களிக்கும் வால்மார்ட், ஃபிளிப்கார்ட் மற்றும் ஃபோன்பே!

3,000 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் விநியோகிக்க திட்டம்!
0 CLAPS
0

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிகரித்து வரும் நிலையில் பல நிறுவனங்கள் இந்திய மக்களுக்கு உதவ முன்வந்துள்ளன. அந்த வகையில், உலகளாவிய சில்லறை நிறுவனமான வால்மார்ட் மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களான Flipkart மற்றும் PhonePe மற்றும் வால்மார்ட் அறக்கட்டளை ஆகியவை கோவிட் -19 தொற்றுநோயின் கடுமையான இரண்டாவது அலைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தங்கள் பங்களிப்புகளைச் செய்ய முன்வந்துள்ளன.

இது தொடர்பாக வால்மார்ட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

“உலகெங்கிலும் உள்ள எங்கள் வணிக நிறுவனங்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிற உபகரணங்களை வாங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுகின்றன. வால்மார்ட் 20 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள், 20 கிரையோஜெனிக் கொள்கலன்கள், அத்துடன் 3,000க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் 500 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நன்கொடையாக அளிக்கும். இந்த உபகரணங்கள் உலகளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கப்படும்," என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக பேசியுள்ள வால்மார்ட்டின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டக் மெக்மில்லன், ”வால்மார்ட் ஒரு உலகளாவிய குடும்பம். இந்த அழிவுகரமான எழுச்சியின் தாக்கத்தை இந்தியா முழுவதும் உள்ள எங்கள் கூட்டாளிகள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் மீது நாங்கள் உணர்கிறோம், எங்களால் முடிந்தவரை ஆதரவளிக்க நாங்கள் ஒன்றிணைவது முக்கியம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, கொரோனா மையங்கள், தொண்டு மருத்துவமனைகள் மற்றும் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆக்ஸிஜன், பிபிஇ கிட் கருவிகள், கை சுத்திகரிப்பு மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க நிதி திரட்ட வால்மார்ட்டுக்கு சொந்தமான ஃபிளிப்கார்ட் கிவ்இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ஃபிளிப்கார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,

“தொற்றுநோய் காலத்தில், எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் முயற்சித்துள்ளோம். அதே நேரத்தில் எங்கள் வணிக கூட்டாளர்களை பாதுகாப்பான விநியோகச் சங்கிலி மற்றும் நம்பகமான தளம் மூலம் ஆதரிக்கிறோம்.”
”இந்த சவாலான நேரத்தில் மக்களுக்கு உதவுவதற்கும், எங்கள் தளவாட திறன்களை மேம்படுத்துவதற்கும், நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களின் மிக முக்கியமான தேவைகளுக்கு வளங்களைத் திரட்டுவதற்கும் நாங்கள் மற்றும் ஃபோன்பேவில் உள்ள எங்கள் சக ஊழியர்களும் உறுதிபூண்டுள்ளோம்," என்றுள்ளார்.

இதற்கிடையே, வால்மார்ட், ஃபிளிப்கார்ட் மற்றும் ஃபோன்பே ஆகியவை COVID-19 தடுப்பூசியை ஊக்குவிக்கும் முயற்சிகளைத் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கூட்டாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு எந்த கட்டணமும் இன்றி தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட் மற்றும் ஃபோன்பேவின் முழுநேர ஒப்பந்தக்காரர்கள் மற்றும் விநியோக தொழிலாளர்கள் - 200,000 க்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, வால்மார்ட், ஃபிளிப்கார்ட் குழுமம் மற்றும் வால்மார்ட் அறக்கட்டளை ஆகியவை இந்தியாவில் 2 மில்லியன் டாலர் நிதி மற்றும் உபகரணங்களை நன்கொடையாக அளித்துள்ளன. இதில் 1 மில்லியனுக்கும் அதிகமான பிபிஇ கிட் மற்றும் சிபிஇ கிட் கவுன்கள், 600,000 என் 95 மாஸ்க்குகள்மற்றும் 88 வென்டிலேட்டர்கள் ஆகியவை அடங்கும்.

Latest

Updates from around the world