பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

பொய்ச்செய்திகளை தடுக்க வாட்ஸ் அப் அதிரடி நடவடிக்கை...

cyber simman
11th Feb 2019
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

2019 மக்களவைத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மட்டும் தயாராகி கொண்டிருக்கவில்லை, மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப்’பும் வரிந்துக் கட்டிக்கொண்டு தயாராகிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகளின் நோக்கம், வாக்காளர்களை கவர்வது என்றால், வாட்ஸ் அப்பின் நோக்கம் தனது மேடை தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவும், குறிப்பாக பொய்ச்செய்திகளை பரப்ப ஒரு வாகனமாக பயன்படுத்தப்படுவதையும் தடுப்பதாக இருக்கிறது. இதை சாத்தியமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் வாட்ஸ் அப் நிறுவனம், அவற்றை விளக்கி வெள்ளை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப் சேவையை தவறாக பயன்படுத்தியதாக, கடந்த 3 மாதங்களில் மாதந்தோறும் 2 மில்லியன் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகள் பொதுமக்களால் பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் பெருக்கத்தால், இந்த சேவைகள் பயன்பாடும் பல மடங்கு அதிகரித்துள்ளது. வாட்ஸ் அப் உள்ளிட்ட சேவைகளை மக்கள் பலவிதமாக பயன்படுத்தி வருகின்றனர்.

சமூக ஊடக பயன்பாடு அதிகரித்து வரும் அதே நேரத்தில், இந்த சேவைகள் பொய்ச்செய்திகளையும், வதந்திகளையும் பரப்ப அதிகம் பயன்படுத்துவது புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு வாட்ஸ் அப் சேவையில் பகிரப்பட்ட வதந்திகள் அப்பாவிகள் கொல்லப்படுவதற்குக் காரணமானதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், வாட்ஸ் அப் சேவையை தவறாக பயன்படுத்தி பொய்ச்செய்திகள் பரப்பப்படுவதாகவும் கருதப்படுகிறது. இதனால் சர்ச்சையும், விவாதமும் ஏற்பட்ட நிலையில், வதந்திகளை பரப்ப வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு தரப்பில் நிர்பந்திக்கப்பட்டது.

இதனையடுத்து, வதந்திகள் மற்றும் பொய்ச்செய்திகள் பரப்ப தனது சேவை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வாட்ஸ் அப் பல்வேறு நடவடிக்ககளை எடுத்து வருகிறது.

குறிப்பிட்ட செய்தி ஃபார்வேர்டு செய்யப்பட்டது என்பதை உணர்த்தும் வசதி மற்றும் ஒரு செய்தியை அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை வாட்ஸ் அப் அறிவித்தது.

மேலும், வாட்ஸ் அப் சேவையை பொறுப்புடன் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் நாடு தழுவிய அளவில் மேற்கொண்டு வருகிறது. இந்தி உள்ளிட்ட மொழிகளில் வாட்ஸ் அப் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

மே மாதம் 2019 மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமூக ஊடகங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் பொய்ச்செய்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கவனமும் அதிகரித்துள்ளது.

இந்த நோக்கில் வாட்ஸ் அப்’பும், பொய்ச்செய்திகளுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தனது சேவை தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க உறுதியாக இருப்பதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை விளக்கமாக விவரித்து வெள்ளை அறிக்கையையும் வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது.

ஸ்டாப்பிங் அப்யூஸ்; ஹவ் வாட்ஸ் அப் பைட்ஸ் பல்க் மெசேஜிங் அண்ட் அட்டோமேடட் பிஹேவியர்’ எனும் தலைப்பிலான அந்த அறிக்கையில், வாட்ஸ் அப், தனது சேவை அடிப்படையில் தனிப்பட்ட தகவல் பகிர்வுக்கானது என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தனிநபர்கள் தகவல்களை பயனுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், தங்களுக்குள் உரையாடலில் ஈடுபடவும் உதவுதே வாட்ஸ் அப்பின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வாட்ஸ் அப், ஒரு ஒளிபரப்பு வசதி அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, வாட்ஸ் அப்பை ஒளிபரப்பு வசதியை கருத்தி அந்த நோக்கில் தகவல்களை வெளியிட வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நோக்கில், மொத்தமாக செய்திகளை பல்க் மெசேஜாக அனுப்பி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் மொத்தமாக பிரச்சார நோக்கில் செய்திகளை அனுப்பி வைப்பதற்கான கட்டுப்பாடு என்றும் இதை புரிந்து கொள்ளலாம். பொய்ச்செய்திகள் பரவுவதை தடுக்கவும் இது பெருமளவு உதவும் என கருதப்படுகிறது.

மொத்தமாக செய்திகளை அனுப்புவது மற்றும் தானியங்கி செயல்பாடுகள் மூலம் செய்திகளை அனுப்பி வைப்பதற்கும் வாட்ஸ் அப் கிடுக்கிப்பிடி போட தீர்மானித்துள்ளது. பதிவு போது, செய்திகளை அனுப்பும் போது மற்றும் புகார் அடிப்படையில் என மூன்று கட்டங்களாக வாட்ஸ் அப் இதை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் சேவையில், பதிவு செய்யும் போது போன் எண்ணை சமர்பிப்பது மற்றும் போனில் குறுஞ்செய்தி பெறுவது உள்ளிட்ட அம்சங்கள் ஆகியவறை முதல் கட்ட சரி பார்த்தலாக அமைகிறது. இரண்டாவது கட்டமாக, செய்திகளை அனுப்பும் போது ஒரு கணக்கு தவறான பயன்பாட்டிற்காக கண்காணிக்கப்படுகிறது. ஒரு கணக்கு துவக்கப்பட்ட உடனே அதிலிருந்து அதிக மேசேஜ்கள் அனுப்பி வைக்கப்பட்டால், அந்த கணக்கு கண்காணிப்புக்கு உள்ளாவதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

இந்த வகை கண்காணிப்பை உடனுக்குடன் சிறந்த முறையில் மேற்கொள்ள, மெஷின் லேர்னிங் எனப்படும் இயந்திர கற்றல் கையாளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அதே போல, சந்தேகத்திற்குறிய இணைய இணைப்புகள் பகிரப்படுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

மூன்றாவது கட்டமாக, வாட்ஸ் அப் செய்திகள் குறித்து புகார் செய்யும் வசதியும் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள வாட்ஸ் அப், அதிக அளவில் புகார்கள் பெறப்பட்டால் அந்த கணக்கு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. உண்மையான கணக்கு நடவடிக்கைக்கு உள்ளானால் அது தொடர்பாக முறையிடும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில், வாட்ஸ் அப்பை தவறாக பயன்படுத்திய 2 மில்லியனுக்கு மேற்பட்ட கணக்குகளை மாதந்தோறும் நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பயனாளிகள் பாதுகாப்பான முறையில் சேவையை பயன்படுத்த வழி செய்வதே நோக்கம் என்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

இதனிடையே அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அரசியல் கட்சிகள் வாட்ஸ் அப்பை தவறாக பயன்படுத்துவது தொடர்பாகவும் நிறுவனம் எச்சரித்துள்ளது.

”நாங்கள் எதிர்பாராத விதங்களில் அரசியல் கட்சிகள் வாட்ஸ் அப்’பை பயன்படுத்தும் முயற்சி அதிகரித்துள்ளது. இது தொடர்ந்தால் அவர்கள் கணக்கு முடக்கப்படும் என்பதே நாங்கள் உறுதியாக சொல்ல விரும்பும் செய்தி’ என வாட்ஸ் அப் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் கார்ல் வூக் தெரிவித்துள்ளார்.

 

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags