மருத்துவத் துறை சார்ந்தவர்களுக்கு முழுமையானத் தகவல்களை வழங்கும் தளம்!

மருத்துவத் துறை சார்ந்தவர்களுக்கான செய்திகள், பணி வாய்ப்புகள், கல்வி தொடர்பான தகவல்கள் போன்றவற்றை வழங்கும் முழுமையான போர்டலை நடத்தும் மேக்னா.

9th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

மேக்னா இதயநோய் மருத்துவரின் மகள் என்பதால் அப்பாவைப் போன்றே இவரும் மருத்துவர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் மருத்துவர் ஆக விரும்பவில்லை. ரத்தத்தை பார்த்தாலே இவருக்கு மயக்கம் வந்துவிடும்.

1

இருப்பினும் மருத்துவமனைகளின் செயல்பாடுகள், மருத்துவர்-நோயாளி இடையே இருக்கும் தகவல் தொடர்பு, தேசிய சுகாதாரத்தை பாதிக்கக்கூடிய சாதாரண பழக்கங்கள் போன்றவற்றில் இவருக்கு ஆர்வம் இருந்தது.


மருத்துவப் பிரிவைத் தேர்வு செய்யாமல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொருளாதாரம் படித்தார். எம்.எஸ்,சி பொருளாதாரம் படித்துக்கொண்டிருந்தபோது சுகாதார பொருளியல் (Health Economics) குறித்துத் தெரிந்துகொண்டார். அதிலுள்ள அதிகப்படியான வாய்ப்புகளால் கவரப்பட்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் ஃபேகல்டி ஆஃப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் பிஎச்டி படிப்பிலும் இணைந்துகொண்டார்.  


மேக்னா சுகாதாரப் பொருளியல் ஆய்வின் ஒரு பகுதியாக சுகாதாரப் பிரிவில் உள்ள பல்வேறு சிக்கல்களைக் கண்டறிந்தார். இதுவே இவற்றைக் குறித்து வலைப்பதிவு எழுதத் தூண்டுதலாக அமைந்தது.

வலைப்பக்கம் ஆன்லைன் போர்டலாக மாறியது

31 வயதான மேக்னா மருத்துவத் துறை சார்ந்தவர்களுக்கென சமீபத்திய தகவல்களை விரிவாக வழங்கும் போர்டல் இல்லாததைத் தெரிந்து கொண்டார். 2015ம் ஆண்டு அவர் தனது வலைப்பக்கத்தை ஆன்லைன் போர்டலாக மாற்றினார்.

”என்னுடைய அப்பா அதிக நேரம் செலவிட்டு செய்தித்தாள்கள், நாளிதழ்கள், பத்திரிக்கைகள், இணையம் என பல்வேறு இடங்களில் இருந்து தகவல்களை சேகரிப்பதைக் கவனித்திருக்கிறேன். மாறாக என்னுடைய கணவரோ தினசரி செய்தித்தாளை படித்ததும் பி2பி துறையின் அன்றாட செய்திகளைத் தெரிந்துகொள்ள சட்ட ரீதியான செய்திகளைத் தொகுத்து வழங்கும் போர்டலை பார்வையிடுவதை கவனித்தேன்,” என்றார்.

இதேபோன்று மருத்துவத் துறையிலும் தொடங்கலாம் என்பதை மேக்னா உணர்ந்தார். உடனே தனது அப்பாவிடமும் கணவரிடமும் உதவியைப் பெற்றுக்கொண்டு மருத்துவ செய்திகளைத் தொகுத்து வழங்கும் ’மெடிக்கல் டயலாக்ஸ்’ (Medical Dialogues) என்கிற ஆன்லைன் போர்டலைத் தொடங்கினார். இதில் மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பான அவ்வப்போதைய செய்திகள் வழங்கப்படுகிறது.

2

துவக்கம்

’மெடிக்கல் டயலாக்ஸ்’ ஆரம்பத்தில் வேர்ட்ப்ரெஸ் ப்ளாக் வடிவிலேயே தொடங்கப்பட்டது என்கிறார் மேக்னா.

இன்று ’மெடிக்கல் டயலாக்ஸ்’ மருத்துவ செய்திகளை தொகுத்து வழங்கும் போர்டல்களில் முன்னணி வகிக்கிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு மில்லியன் பயனர்கள் பார்வையிடுகின்றனர். 4 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் மருத்துவச் செய்திகளைப் பெறுவதற்கான தளமாக இருந்தது. பின்னர் மேக்னா இதை மூன்று குறிப்பிட்ட பிரிவுகளாக விரிவடையச் செய்தார். அதாவது 22 மருத்துவ சிறப்புப் பிரிவுகளில் கவனம் செலுத்தும் ’ஸ்பெஷாலிட்டி மெடிக்கல் டயலாக்ஸ்’, மருந்து, துறைசார் நிதி நிறுவனங்கள் போன்றவை தொடர்பான தகவல்களை வழங்கி வணிகக் கண்ணோட்டத்தில் கவனம் செலுத்தும் ’பிசினஸ் மெடிக்கல் டயலாக்ஸ்’, மருத்துவ மாணவர்களுக்கு தேர்வுகள், கல்லூரிகள் போன்றவை குறித்து முழுமையான தகவல்களை வழங்கும் ’எஜுகேஷன் மெடிக்கல் டயலாக்ஸ்’ ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் விரிவடைந்தது.

3

ஏற்ற இறக்கங்கள்

இந்த முயற்சிக்கான ஆரம்பகட்ட முதலீட்டை மேக்னாவின் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். மேக்னா புதுடெல்லியில் சுயநிதியில் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


பெரும்பாலானோரின் பயணத்தைப் போன்றே மேக்னாவின் தொழில்முனைவுப் பயணமும் சவால் நிறைந்ததாகவும் பல்வேறு மைல்கற்களுடனும் இருந்துள்ளது. வளர்ச்சி நிலையாகவே இருந்து வருகிறது. ஒரு லட்சம் பேர் பார்வையிட்ட போர்டல் ஒரு மில்லியன் பார்வையாளர்களுடன் வளர்ச்சியடைந்தது. தற்போது ஒரு மாதத்திற்கு இரண்டு மில்லியன் பேர் இந்த போர்டலைப் பார்வையிடுகின்றனர்.


தனது பயணத்தில் சாதனைகளைக் காட்டிலும் போராட்டங்கள் அதிகம் இருந்ததாக மேக்னா குறிப்பிடுகிறார். ஆசிரியராக இருந்த சமயத்தில் வாழ்க்கை அதிக சிக்கலின்றி இருந்ததாகவும் தற்போது 18 பேர் அடங்கிய குழுவுடன் தொழில்முனைவராக செயல்படுவதால் அதிக பொறுப்புகளை சுமக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

4

இவர் தனது பயணத்தில் மோசமானச் சூழலை சந்திக்க நேரும்போது சாதிக்கவேண்டும் என்கிற கூடுதல் உந்துதலுடன் தொடர்ந்து செயல்படுகிறார்.

”இந்தப் பயணத்தில் பல தருணங்களில் மோசமான சூழலை சந்தித்துள்ளேன். எங்களது பணி தொடர்வதால் இத்தகைய தடைகளை நாங்கள் இனியும் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பிட்டு சொல்லும்படியாக அத்தகைய சம்பவம் ஏதும் நினைவில் இல்லை. நினைவில் வைத்துக்கொள்ளவும் நான் விரும்பவில்லை. ஏனெனில் ஒவ்வொரு தோல்வியும் வெற்றிப்பயணத்தின் ஒரு பகுதியே. நான் வழக்கமாக ஒரு நாளைக்கு 11-12 மணி நேரம் பணிபுரிவேன். சூழல் சற்று மோசமாக இருப்பதாக உணரும் நாட்களில் கூடுதலாக ஒரு மணி நேரம் பணிபுரிவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்,” என்றார்.

எந்த ஒரு தொழில்முனைவோரும் நம்பிக்கையுடன் ஒரு சிறந்த திட்டத்தை உருவாக்கி அதற்கு வடிவம் கொடுக்கக் கடுமையாக உழைப்பார். அதில் சவால்களையும் சந்திப்பார். அதேபோன்று ஒரு பெண் தொழில்முனைவராக தானும் சவால்களை சந்திப்பதாக மேக்னா தெரிவித்தார்.


”சில குறிப்பிட்ட சிக்கல்கள் பற்றி போதுமான அளவிற்கு புரிதல் இல்லாமல் போவது சவாலாக இருக்கிறது. அத்துடன் எனக்குத் தொழில்நுட்பப் பின்னணி இல்லாத காரணத்தால் தொழில்நுட்பம் அல்லது மார்க்கெட்டிங் சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகாண்பதில் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது,” என்றார்.


மேக்னா தனது வெற்றிப் பயணத்தை சிறப்பாகத் தொடர, புதிய திறன்களைக் கற்றறிவது மட்டுமே தீர்வாகும் என கருதுகிறார்.

வருங்காலத் திட்டம்

மேக்னா தனது தளத்தில் கூடுதலாக இரண்டு சேவைகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். மருத்துவத் துறை சார்ந்தவர்கள் தங்களது பரபரப்பான வாழ்க்கைக்கிடையே புதிய பணி வாய்ப்புகளைக் கண்டறிய ’மெடிக்கல் ஜாப்’ சேவையையும் வாழ்க்கைத் துணையைக் கண்டறிய ’மெடிக்கல் மேட்ரிமோனி’ சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.


மருத்துவர்கள், மாணவர்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் போன்றோருக்கு சேவையளிக்கும் இவர், நோயாளிகளைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் செவிலியர்களின் தேவைகளையும் கருத்தில்கொண்டு சேவையளிக்க திட்டமிட்டுள்ளார். வரும் மாதங்களில் இந்தத் தளத்திற்கான செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

”மருத்துவர்கள் நோயாளிகளை சிறப்பாக பராமரிக்க உதவும் வகையில் அவர்களுக்குத் தேவையான முக்கியத் தகவல்களை தொகுத்து வழங்கவேண்டும் என்பதே ’மெடிக்கல் டயலாக்ஸ்’ முக்கிய நோக்கம்,” என்றார் மேக்னா.

ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கௌதமன் | தமிழில்: ஸ்ரீவித்யா

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India