‘தூங்கா இணையம்’ - இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்ன எல்லாம் நடக்கிறது தெரியுமா?

ஒரு நிமிடத்தில் என்ன எல்லாம் நிகழ்கின்றன என்பதை விளக்கும் தகவல் வரைபடம் உலகின் இணைய பயன்பாட்டை அழகாக உணர்த்துகிறது.
0 CLAPS
0

இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்ன எல்லாம் நடக்கிறது என்று தெரியுமா? இந்த கேள்விக்கான பதில் புள்ளிவிவரங்களாக அமைந்திருக்கும் என்பதை நீங்கள் ஊகித்திருக்கலாம்.

ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் நம்முடைய இணைய பழக்கம் பற்றி எந்த அளவு பொருள் பொதிந்த தகவல்களைக் கொண்டிருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டால் நீங்கள் நிச்சயம் வியந்து போவீர்கள்.

இப்படி இணையத்தில் நிகழ்பவை தொடர்பான தகவல்களை வியக்க வைக்கும் வகையில் அழகான தகவல் வரைபடமாக அளித்திருக்கிறது டோமோ நிறுவனம். ’தரவுகள் ஒரு போதும் தூங்குவதில்லை’ (Data Never Sleeps chart) எனும் தலைப்பில் வெளியாகியுள்ள இந்த தகவல் வரைபடம், இணையத்தில் ஒவ்வொரு நிமிடமும் கூகுள் வாயிலாக 57 லட்சம் தேடல்கள் நிகழ்வதாக தெரிவிக்கிறது.

இன்ஸ்டாகிராம்

புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் 65 ஆயிரம் புகைப்படங்கள் பகிரப்படுவதாகவும், குறும்பதிவு சேவையான டிவிட்டரில் 575 ஆயிரம் குறும்பதிவுகள் வெளியிடப்படுவதாகவும், டிக்டாகில் 167 மில்லியன் வீடியோக்கள் பார்க்கப்படுவதாகவும் இந்த தகவல் வரைபடம் தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ள ஆடியோ சமூக ஊடக சேவையான கிளப்ஹவுசில் ஒரு நிமிடத்தில் 208 அறைகள் உருவாக்கப்படுகின்றன.

ஃபேஸ்புக் பயனாளிகள் 2 லட்சத்து 40 ஆயிரம் படங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அமேசான் வாடிக்கையாளர்கள் 2 லட்சத்து 83 ஆயிரம் டாலர்களை செலவிடுகின்றனர். யூடியூப்பில் 6 லட்சத்து 94 ஆயிரம் மணி நேரம் ஸ்டிரீம் செய்யப்படுகின்றன. நெட்பிளிக்சில் 4 லட்சத்து 52 ஆயிரம் மணி நேரம் அளவு படங்கள் பார்க்கப்படுகின்றன.

இப்படி நீளும் புள்ளிவிவரங்கள், இணையத்தில் தரவுகள் தூங்காமல் இருக்கும் தகவலை உணர்த்துகிறது.

நெட்பிளிக்ஸ்

இந்தத் தகவல் வரைபடத்தை டோமோ நிறுவனம் கடந்த எட்டு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒன்பதாவது பதிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தகவல்களுடன் கடந்த ஆண்டு தகவலை ஒப்பிடும் போது, பொதுவான போக்கை காண முடிவதோடு முக்கிய வேறுபாடுகளும் இருப்பதை உணர முடிகிறது. இதன்படி பார்த்தால்

இன்ஸ்டாகிராமில் படங்கள் பகிர்வது 55 ஆயிரத்தில் இருந்து 65 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கூகுள் தேடல் 4.5 மில்லியனில் இருந்து 5.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.

அதே போல, வீடியோ சந்திப்பு சேவையான மைக்ரோசாப்ட் டீமில் பயனாளிகள் இணைவது நிமிடத்திற்கு 52 ஆயிரம் என்பதில் இருந்து ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால், நெட்பிளிக்சில் நிமிடத்திற்கு ஏழு லட்சம் மணி நேர வீடியோ ஸ்டிரீம் செய்யப்பட்டு வந்தது இந்த ஆண்டு 4.50 லட்சமாக குறைந்திருக்கிறது.

2021 ஜூலை மாதத்தில் இணையம் உலகின் 65 சதவீத மக்களை அடைந்துள்ளதாகவும் இந்த தகவல் வரைபடம் தெரிவிக்கிறது. இணைய பயனாளிகள் எண்ணிக்கை 5.17 பில்லியனாக உள்ள நிலையில், 92 சதவீதத்தினர் மொபைல் மூலம் இணையத்தை அணுகுகின்றனர் எனும் தகவலும் ஹைலைட்டாக அமைந்துள்ளது.

ஒரு நிமிடத்தில் இணையத்தில் நிகழ்பவற்றை இன்னும் விரிவாக அறிய:

Latest

Updates from around the world