கூகுளுக்கு போட்டியா? கேட்டதைக் கொடுக்கும், இணையத்தை கலக்கும் 'ChatGPT' பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

ஏஐ நுட்பத்தின் ஆற்றலையும், ஆபத்தையும் ஒரு சேர புரிய வைத்திருக்கும், சாட்ஜிபிடி மென்பொருள் சேவை தொடர்பான அடிப்படையான விஷயங்கள் பற்றிய விரிவான அறிமுகம்.

கூகுளுக்கு போட்டியா? கேட்டதைக் கொடுக்கும், இணையத்தை கலக்கும் 'ChatGPT' பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

Friday January 27, 2023,

5 min Read

இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் 'ChatGPT' பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதுவரை அறிந்திருக்கவில்லை அல்லது அறிந்தும் மேற்கொண்டு தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றாலும், இனி வரும் காலத்தில், சாட்ஜிபிடி பற்றி நீங்கள் நிச்சயம் ஆர்வம் கொள்வீர்கள்.

ஏனெனில், இணையத்தில் சாட்ஜிபிடி செய்திகள்,சர்சசைகள், முன்னேற்றம், கணிப்பு தொடர்பானவற்றை நீங்கள் எதிர்கொண்டபடி இருப்பீர்கள்.

ஏன் இப்படி எல்லோரும் சாட்ஜிபிடி பற்றி பேசுகிறார்கள், பேசப்போகிறார்கள் என்றால், இந்த ஏஐ அரட்டை மென்பொருள் தான் எதிர்காலத்தின் அடையாளமாக இருப்பது தான்.

ChatGPT explainer

இவ்வளவு ஏன், இதுவரை இணைய தேடலில் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்படும் கூகுளுக்கு மாற்று என சாட்ஜிபிடி வர்ணிக்கப்படுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம். இணைய தேடலின் எதிர்காலமும் ஏ.ஐ சார்ந்து தான் இருக்கும் என்கின்றனர்.

கூகுளில் தேடுவதற்கு பதில் சாட்ஜிபிடியில் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என பலரும் சொல்லத்துவங்கியுள்ளனர் என்றால் இன்னொரு பக்கம் பார்த்தால், சாட்ஜிபிடி கதை எழுதுகிறது, கட்டுரை எழுதுகிறது, அறிக்கை உருவாக்கித்தருகிறது, இன்னும் என்ன எல்லாமோ செய்து அசத்துகிறது என வியப்பை ஏற்படுத்துகின்றனர்.

ஆச்சர்யங்களுக்கு நடுவே, ChatGPT-யால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் கவலைகளும், கணிப்புகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கல்வி நிலையங்களில் மாணவர்கள் வீட்டுப்பாடங்களுக்கு வினையாக அமைவதோடு, கலை, எழுத்து, கட்டுரை, எல்லாவற்றுக்கும் சாட்ஜிபிடி சவாலாக விளங்கும் என்கின்றனர்.

இதற்காக சுட்டிக்காட்டப்படும் உதாரணங்கள் அச்சத்தை ஏற்படுத்தாமல் இல்லை. ஏ.ஐ ஆதிக்கம் துவங்கிவிட்டதன் அறிகுறிதான் சாட்ஜிபிடியா என்றும் கூட பயங்க்கொள்ளலாம். இத்தகைய மிகை அச்சம் தேவையில்லை என்பது தான் உண்மை என்றும் சொல்லப்படுகிறது.

எல்லாம் சரி, ChatGPT என்றால் என்ன, இந்த ஏஐ மென்பொருள் அப்படி என்ன செய்கிறது, இதன் பயன் என்ன? இதன் தாக்கம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்து கொள்ள, சாட்ஜிபிடி மென்பொருள் அடிப்படை அம்சங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

ChatGPT என்றால் என்ன?

ChatGPT என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏ.அ) சார்ந்த அரட்டை மென்பொருள். மனிதர்கள் போலவே மனிதர்களுடன் உரையாடக்கூடிய ஆற்றலை இந்த மென்பொருள் பெற்றிருக்கிறது. இதனுடன் அரட்டை வடிவில் உரையாடும் போது கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறன் பெற்றிருக்கிறது. பதில் சொல்வது மட்டும் அல்ல, தேவையான குறிப்புகளை கொடுத்தால், அவற்றின் அடிப்படையில் கதை, கட்டுரை, அறிக்கைகளை உருவாக்கித்தருகிறது.

மனிதர்கள் போலவே எழுதித்தருவதோடு, கோடிங் எழுத்திருவது போன்றவற்றையும் செய்கிறது. இப்படி ஒரு மென்பொருளே எல்லாவற்றையும் செய்யத்துவங்கிவிட்டால், இனி மனிதர்களுக்கான வேலையின் நிலை என்ன? இதுவும் சாட்ஜிபிடி உண்டாக்கியிருக்கும் அச்சங்களில் ஒன்று.

ChatGPT எப்படி செயல்படுகிறது?

சாட்ஜிபிடியின் செயல்திறன் ரகசியங்களை தெரிந்து கொள்வதற்கு முன், இதன் பெயர் காரணம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை பார்த்துவிடலாம்.

சாட்

ChatGPT அறிமுகம்!

சாட்ஜிபிடி என்பது, ஜிபிடி-3 நுட்பம் கொண்டு, ’ஓபன்.ஏஐ’ நிறுவனத்தால், உருவாக்கப்பட்டுள்ள ஏஐ அரட்டை மென்பொருள். ஆங்கிலத்தில் இந்த வகை மென்பொருள் சாட்பாட் என குறிப்பிடப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் சாட்பாட்கள் இருந்தாலும், சாட்ஜிபிடி, அதி திறன் வாய்ந்த சாட்பாட்டாக கருதப்படுகிறது.

மனிதர்களோடு உரையாடலை மேற்கொள்வது தான் சாட்பாட்களின் வேலை என்றாலும், சாட்ஜிபிடி மனிதர்கள் போலவே, உரையாடக்கூடிய திறன் பெற்றுள்ளது. என்.எல்.பி என சொல்லப்படும் இயல்மொழியாக்கத்திறன் கொண்டு செயல்படுகிறது. அதாவது, பேச்சு மொழியை புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

பேச்சு மொழி எப்படி சாத்தியம்?

பொதுவாக, சாட்பாட்கள் உரையாடல் திறன் கொண்டவை என்றாலும், அவற்றின் செயல்பாடுகளுக்கு வரம்பு உண்டு. எழுதிக்கொடுத்ததை படிப்பது போல, அவை தங்களிடம் உள்ள தரவுகளுக்கு ஏற்ப பதில் சொல்லும். அவற்றின் எல்லைகளை கடந்து எதைக்கேட்டாலும், பதில் சொல்லும் ஆற்றல் இருக்காது.

ஆனால், சாட்ஜிபிடியோ, எதுவாக இருந்தாலும் என்னிடம் கேளுங்கள் என பதில் சொல்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது எனும் கேள்விக்கான பதில் அதன் பெயரில் இருக்கிறது.

GPT என்றால், ’ஜெனரேட்டிவ் பிரிடிரைண்ட் டிரான்ஸ்பார்மர்’ (Generative Pretrained Transformer) என பொருள். முன் பயிற்சி அளிக்கப்பட்ட உருவாக்குத்திறன் மென்பொருள் என இதை புரிந்து கொள்ளலாம்.

இன்னொருவிதமாக சொல்வது என்றால், இதை ’மொழி மாதிரி’ (language model) என்கின்றனர். மிகவும் மேம்பட்ட மொழி மாதிரி.

மொழி மாதிரிக்கான தொழில்நுட்ப விளக்கம் சிக்கலாக அமையலாம் என்பதால், சொற் தொடர்களில், அடுத்து வரக்கூடிய சொல்லை யூகிக்கக் கூடிய நிரல் என எளிதாகக் குறிப்பிடலாம். அதாவது, குறிப்பிட்ட தொடர்களில், அடுத்த சொல் என்னவாக இருக்கும் என்பதை யூகிப்பதன் அடிப்படையில், மென்பொருளால் மனிதர்கள் போலவேம், எழுதவோ பேசவோ முடியும் என கொள்ளலாம்.

உதாரணமாக ‘மதில் மேல்...’ எனும் தொடரில் அடுத்து வரக்கூடிய சொல் ’பூனை’ என நாம் சுலபமாக யூகிக்கலாம். மென்பொருளுக்கு பயிற்சி அளித்தால் அதுவும், பூனை என யூகிக்கும். பூனை மட்டு அல்ல, இன்னும் எந்த ஒரு சொல்லையும் யூகிக்கும். இப்படி தான் சாட்ஜிபிடி செயல்படுகிறது.

இது வெறும் கணிப்பு தானா?

சாட்ஜிபிடி செயல்பாடு பின் பெரும் பயிற்சி இருக்கிறது. கேள்விகளை புரிந்து கொண்டு உரிய பதில் அளிக்க, சொற்களை யூகிக்க, அதற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண பயிற்சி அல்ல. விக்கிபீடியா தகவல்கள் உள்ளிட்ட எண்ணற்ற தரவு பட்டியல்கள் சமர்பிக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் பயிற்சி பெற்றுள்ளது.

அதோடு, உரையாடலின் போது கிடைக்கும் கருத்துகள் அடிப்படையில் கற்றுக்கொள்ளும் ஆற்றலும் பெற்றிருக்கிறது. மனித எதிர்வினையோடு மறு உறுதி கற்றல் (Reinforcement Learning with Human Feedback ) என இதை சொல்கின்றனர்.

களஞ்சியங்கள் மட்டும் அல்லாமல், இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும் கரைத்துக் குடித்திருப்பதாலும், அவற்றின் அடிப்படையில் புதிதாக உருவாக்கி கொடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதால், கேள்விகளுக்கு பதில் சொல்கிறது, எதை கேட்டாலும் உருவாக்கித்தருகிறது.

சாட்

இதன் பிரம்மா யார்?

ஜிபிடி ஏ.ஐ நுட்பத்தை ஓபன் ஏ.ஐ எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. பெரும் ஆய்வுகளின் துணையோடு பல கட்டமாக இந்த நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் ஜிபிடி-3 துணை கொண்டு சாட்ஜிபிடி உருவாக்கப்பட்டுள்ளது.

ஓபன் ஏஐ நிறுவனம், சாம் ஆல்ட்மேன், பீட்டர் தியல், எலான் மஸ்க் உள்ளிட்ட சிலிக்கான் வேலி ஆளுமைகளால் 2015ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மஸ்க் இதன் ஆரம்ப முதலீட்டாளர்களில் ஒருவர் என்றாலும், தற்போது இதன் இயக்குனர் குழுவில் இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதில் கணிசமாக முதலீடு செய்துள்ளது. நம் நாட்டின் இன்போசிஸ் நிறுவனமும் முதலீடு ஆரம்பத்தில் முதலீடு செய்திருப்பதாக அறிய முடிகிறது.

ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி போலவே, உருவங்களை உருவாக்கித்தரும் டாலே (DALL-E) மற்றும் Whisper எனும் பேச்சு உணர்தல் மென்பொருள் உள்ளிட்ட ஏஐ சேவைகளையும் கொண்டுள்ளது. இவற்றில் டாலே, நாம் சொல்வதற்கு ஏற்ப படங்கள் அல்லது தோற்றங்களை உருவாக்கி கொடுத்து அசத்துகிறது.

ஆனால், ஒன்று சாட்ஜிபிடி, 2021 வரையான தரவுகளை கொண்டே இயங்குகிறது. அதனிடம் நடப்பு விஷயங்களை கேட்டால் பயன் இருக்காது.

சரி, சாட்ஜிபிடியை எதற்கு எல்லாம் பயன்படுத்தலாம்?

ChatGPT-யை எண்ணற்ற வழிகளில் பயன்படுத்தலாம். ஒருவகையில் பார்த்தால், இணையத்தில் தகவல்களை தேட கூகுளுக்கு பதிலாக பயன்படுத்தலாம் என்கின்றனர். கூகுள் சிறந்த தேடியந்திரமாக அறியப்பட்டாலும், அதில் தகவல்களை தேடும் போது அது முடிவுகளை பட்டியலிட மட்டுமே செய்கிறது.

ஆனால், சாட்ஜிபிடியில், கேள்வியாகக் கேட்டால் அது அழகாக பொருத்தமான ஒற்றை பதிலை சொல்வதாகக் கருதப்படுகிறது. அதிலும், குறிப்பாக, இயற்பியல், கணிதம், பொது நடப்புகள் போன்ற சரியான பதில்கள் கொண்ட துறைகளில் கேள்வி கேட்டால், அதற்கேற்ற பதிலை அளிக்கிறது. எனவே, கூகுளில் தேடுவதை விட சாட்ஜிபிடியில் கேட்பது சிறந்தது என சொல்லத்துவங்கியுள்ளனர்.

சாட்ஜிபிடி

மேலும், ChatGPTயில் எந்த உரையாடலையும் மேற்கொள்ளலாம். மனிதர்கள் போலவே பதில் சொல்லும். மற்றபடி, செய்திக்கட்டுரை துவங்கி அலுவலக கடிதம் வரை எதையும் எழுதித்தர கேட்கலாம். நம்முடைய தேவையை குறிப்பிட்டால் அதற்கேற்ப உள்ளடக்கத்தை உருவாக்கித்தரும்.

இப்படி, நாவல்களை, திரைக்கதைகளை கூட உருவாக்கிக் கொள்ளலாம். கோடிங் எழுதித்தர வைக்கலாம். ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு, வாடிக்கையாளர் சேவைக்கு, மொழிபெயர்ப்புக்கு என இன்னும் பல விதங்களில் பயன்படுத்தலாம். கட்டுரைகளை, புத்தகங்களை சுருக்கித்தர கேட்கலாம்.

ChatGPT கொண்டு உப சாட்பாட்களையும் உருவாக்கி, பல வேலைகளை தானியங்கிமயமாக்கலாம்.

அப்படி என்றால், பலரது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமே?

பல துறைகளில், பல வித செயல்களை சாட்ஜிபிடி செய்துவிடும் என்பதால் வேலையிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சாட்ஜிபிடி புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித்தரும் என்பதை மறந்துவிடக்கூடாது.

வேலைவாய்ப்பை விட, ஒரு ஏஐ மென்பொருள் கதை எழுதும், திரைக்கதை எழுதும் நிலையில், படைப்பூக்கம் என்னாவது, கலையின் பாத்திரம் என்ன? என்பது போன்ற தத்துவார்த்தமான கேள்விகள் தான் முக்கியமாக எழுகின்றன.

ChatGPTயை எப்படி பயன்படுத்துவது?

ஓபன் ஏஐ இணையதளத்தில் கணக்கு உருவாக்கிக் கொண்டு, அதன் இடைமுகத்தில் கேள்விகளைக் கேட்கலாம். இப்போதைக்கு இலவச சேவை என்றாலும் கட்டணம் அறிமுகமாகலாம். நீங்களும் ChatGPTயை முயன்று பாருங்கள். https://openai.com/blog/chatgpt/


Edited by Induja Raghunathan