ஆடியோ செய்திகளை எழுத்து வடிவில் தரும் வசதி - வாட்ஸ் அப் அறிமுகம்!
புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் வாட்ஸ் அப் மெசேஜிங் சேவை ஆடியோ குறிப்புகளை எழுத்து வடிவில் மாற்றிக்கொள்ளும் வசதியை புதிதாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் வாட்ஸ் அப் மெசேஜிங் சேவை ஆடியோ குறிப்புகளை எழுத்து வடிவில் மாற்றிக்கொள்ளும் வசதியை புதிதாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த வசதி உலகம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு படிப்படியாக அறிமுகம் ஆக உள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் சேவையில், எழுத்து வடிவில் செய்திகளை அனுப்புவதோடு, குரல் பதிவாக ஆடியோ வடிவிலும் அனுப்பி வைக்கலாம். ஆடியோ செய்திகள் பயனுள்ளது என்றாலும், அலுவலக கூட்டம் போன்ற சில தருணங்களில் ஆடியோ செய்திகளை கேட்பதில் சிக்கலாக அமையலாம். அதே போல, இறைச்சல் மிகுந்த சூழலிலும் ஆடியோ செய்திகளை கேட்க முடியாமல் போகலாம்.
இத்தகைய தருணங்களில் ஆடியோ செய்திகளில் எழுத்து வடிவில் மாற்றி வாசிக்க வழி செய்யும் மொழியாக்க வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்கிறது.
மொழியாக்க வசதி பயனாளிகள் சாதனத்தில் செயலாக்கம் பெறுவதால் வேறு யாரும் அவற்றை வாசிக்க முடியாது என வாட்ஸ் அப் இது தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தனியுரிமை பாதுகாப்பிற்கு ஏற்றதாக அமையும்.
இந்த வசதியை அணுக பயனாளிகள் , செட்டிங்ஸ் - சாட் பகுதியில் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் எனும் வசதியை கிளிக் செய்து இதை செயலாக்கம் பெறச்செய்யலாம். அதன் பிறகு, தேவை ஏற்படும் போது ஆடியோ செய்தியை நீளமாக அழுத்தி டிரான்ஸ்கிரைப் எனும் மொழியாக்க வசதியை நாடி, எழுத்து வடிவில் செய்திகளை வாசிக்கலாம்.
ஏற்கனவே, அடித்து முடிக்காத செய்திகளை முன்னோட்ட வடிவில் சேமிக்கும் வசதியை வாட்ஸ் அப் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் அப்பின் அப்டேட் வடிவில் இந்த அம்சங்களை அணுகலாம்.
Edited by Induja Raghunathan