உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திரா நூயி பெயர் பரிந்துரைக்கப்படுகிறதா..?
உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்திரா நூயி பெயரை வெள்ளை மாளிகை முன்மொழிய உள்ளதாக முன்னணி அமெரிக்க நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த 63 வயதான இந்திரா நூயி, பன்னிரண்டு ஆண்டுகள் பெப்சிகோ நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி விலகினார்.
இந்நிலையில் உலக வங்கியின் தலைவரை தேர்வு செய்யும் தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான, அமெரிக்க அதிபரின் மூத்த மகள் இவாங்கா ட்ரம்ப் இந்திரா நூயியை பரிந்துரைப்பதாக ’தி நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தலைவர் பதிவியைத் தீர்மானிக்கும் செயல்முறையில் அதிபரின் (டொனால்ட் ட்ரம்ப்) இறுதியான தீர்மானத்திற்கு முன்பு ஆரம்பக்கட்ட பரிந்துரைகள் நிலையற்றது என்றும் பலரது பெயர்கள் பின்னர் திரும்பப் பெறப்படும் என்றும் இந்த செயல்முறை குறித்து நன்கறிந்த பலர் தெரிவிப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் நிர்வாகத்தில் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் இந்திரா நூயி இந்த முன்மொழிதலை ஏற்றுக்கொள்வாரா என்பதும் தெளிவாகவில்லை.
இந்திரா நூயி சிறந்த வழிகாட்டி என்றும் உத்வேகம் அளிப்பவர் என்றும் ட்விட்டரில் கருத்து தெரிவித்த இவாங்கா ட்ரம்ப் உலவ வங்கியின் தலைவர் பதவிக்குத் தகுந்தவராக அவரை பரிந்துரை செய்துள்ளார்.
உலக வங்கியின் தற்போதைய தலைவர் ஜிம் யாங் கிம் ஒரு தனியார் உள்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனத்தில் இணைய உள்ளதால் பிப்ரவரி மாதம் பதவி விலக உள்ளதாக அறிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் நிறைவடைய இன்னமும் மூன்றாண்டுகள் உள்ள நிலையில் எதிர்பாராத விதமாக பதவி விலகப்போவதாக அவர் அறிவித்தார்.
ஜிம் யாங் கிம்மை அடுத்துத் தலைவர் பதிவியேற்கும் நபரை தேர்வு செய்யும் செயல்முறைக்கு அமெரிக்க அரசு கருவூலத் துறை செயலாளர் ஸ்டீவன் நூச்சின், வெள்ளை மாளிகை பணியாளர்களின் தற்காலிகத் தலைவர் மிக் முல்வானி, இவாங்கா ட்ரம்ப் ஆகியோர் பொறுப்பேற்பார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்தது.
இந்த நிலையில் சர்வதேச பொருளாதார விவகாரங்களில் அதிபரின் மகள் தலையிடுவது குறித்தும் இந்தத் தேர்வு செயல்முறையில் இவாங்காவின் பங்களிப்பு குறித்தும் சிலர் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளனர்.
அதிபர் ட்ரம்ப் அவர்களிடம் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக தேர்வுக் குழு நேர்காணல்களை துவங்க திட்டமிட்டுள்ளது.
இந்திரா நூயி ட்ரம்பின் வணிக கவுன்சிலில் இணைந்தார். 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சார்லட்ஸ்வில் பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்கு ’பல தரப்பினரும்’ பழியை ஏற்கவேண்டும் என்று அதிபர் குறிப்பிட்டதை அடுத்து முதன்மை அதிகாரிகள் பலர் ட்ரம்பின் வணிக கவுன்சிலில் இருந்து வெளியேறினர்.
2016-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு இந்திரா நூயி தெரிவித்த எதிர்மறை கருத்துக்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவர் எந்த வேட்பாளருக்கும் பகிரங்கமாக ஆதரவளிக்கவில்லை. அவர் பரிந்துரைக்கப்பட இது ஒரு தடையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 2016-ம் ஆண்டு என்ஒய்டி-யின் டீல்புக் மாநாட்டில் அவர் கூறுகையில், “எங்கள் ஊழியர்கள் அனைவரும் அழுகின்றனர். ஊழியர்கள், குறிப்பாக வெள்ளையர் அல்லாதவர்கள் கேட்கும் கேள்வி இதுதான்: நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா? பெண்கள் கேட்கும் கேள்வி இதுதான்: நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா? எல்ஜிபிடி சமூகத்தை சேர்ந்தவர்கள் கேள்வியும் இதுதான்: நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா? அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டியிருக்கும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை,” என்றார்.
பெப்சிகோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபார்ச்சூன் பத்திரிக்கைக்கு தெரிவிக்கையில், “தேர்தலின் முடிவு குறித்த பயம் சில ஊழியர்களுக்கு இருந்தது. இந்திரா நூயி பேசியபோது அந்த குறிப்பிட்ட ஊழியர்கள் ஆற்றிய எதிர்வினையையே அவர் மேற்கோளிட்டுக் காட்டினார். அனைத்து ஊழியர்களும் அதேபோல் உணர்ந்ததாக அவர் தெரிவிக்கவில்லை,” என்றார்.
உலக வங்கித் தலைவர் பதவிக்கு சர்வதேச விவகாரங்களின் கருவூலத் துறை அதிகாரியான டேவிட் மால்பாஸ் மற்றும் ஓவர்சீஸ் பிரைவேட் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ரே வாஷ்பர்ன் ஆகியோரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரால் மட்டுமே உலக வங்கித் தலைவரை நியமிக்கமுடியாது. வங்கியின் குழுவால் அவர் அங்கீகரிக்கப்பட வேண்டும். இருப்பினும் இந்தச் செயல்முறையின் வழக்கப்படி அந்தப் பதவிக்கு அதிபர் தனது பரிந்துரையையும் முன்மொழிந்துள்ளார்.
ட்ரம்ப் தனது மகளை வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நியமித்ததற்காக ஏற்கெனவே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
இவாங்கா வெற்றிகரமான தொழிலதிபர், ஃபேஷன் டிசைனர், எழுத்தாளர், ரியாலிட்டி தொலைக்காட்சி பிரபலம். அமெரிக்காவின் முன்னணி டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் துணி, கைப்பை, ஷு, ஆக்சசரிஸ் போன்ற ஃபேஷன் பொருட்களை வடிவமைத்துள்ளார்.