பிரபலங்கள் பயணிக்கும் ‘சலூன் கோச்’ - இந்திய ரயில்வேயின் இந்த சொகுசு கோச்சின் சிறப்பம்சங்கள் என்ன?
தற்போது ஆடம்பர வசதிகளைக் கொண்ட ‘சொகுசு சலூன் கோச்’ புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதனால் அதில் பயணிப்பது எப்படி? எவ்வளவு செலவு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஆர்சிடிசி) பயணிகளைக் கவரும் விதமாக டூர் பேக்கேஜ்கள், சிறப்பு கட்டணங்கள், சொகுசு ரயில் பெட்டிகள், சிறப்பு ரயில்கள் என பல விஷயங்களை செய்து வருகிறது.
தற்போது ஆடம்பர வசதிகளைக் கொண்ட ‘சொகுசு சலூன் கோச்’ (Luxury Saloon coach) புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ரயிலில் பயணித்த முதல்வர்:
பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் ‘சொகுசு சலூன் கோச்’ பெட்டி, நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்ததை அடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென்காசியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இரவு சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், சலூன் கோச் பெட்டியில் பயணித்தார். இவருடன் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் பயணித்தனர். நட்சத்திர சொகுசு விடுதி போன்ற இந்த பெட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
சலூன் கோச் சிறப்பம்சங்கள் என்ன?
ஆடம்பரமான சலூன் கோச் ரயில் பெட்டியில் என்னென்ன மாதிரியான சிறப்பம்சங்கள் உள்ளன என பார்க்கலாம்...
- ஏசி வசதியுடன் கூடிய இரண்டு படுக்கைகள், அத்துடன் கழிப்பறை, தனி சமையலறை, பெரிய ஹால், சோபா, லக்கேஜ் ரேக்குகள், அலமாரிகள், நாற்காலியுடன் கூடிய ரைட்டிங் டேபிள் மற்றும் டிரஸ்ஸிங் டேபிள், வெந்நீர் என ஒரு சொகுசு வீட்டையே கண்முன் கொண்டு வந்துவிடுகிறது.
- படுக்கை அறைகளைத் தவிர, ஒவ்வொரு சலூன் பெட்டியிலும் 4 முதல் 6 கூடுதல் படுக்கைகள் உள்ளன.
- சமையலுக்குத் தேவையான பாத்திரங்களுடன் கூடிய விசாலமான சமையலறை, சுடுதண்ணீர், ஃப்ரிட்ஜ், சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஓ. வாட்டர் ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
- சலூன் கோச்சில் சொகுசாக பயணிக்கும் போது வெளியே உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக அகலமான ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- லிவிங் ரூம் மற்றும் டைனிங் டேபிள் உள்ள அறைகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, உறுதியான மரத்தால் ஆன பெரிய சோபா, நாற்காலிகளுடன் கூடிய டைனிங் டேபிள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
யாரெல்லாம் பயணிக்க முடியும்:
சலூன் கோச் சொகுசு பெட்டி குறிப்பாக குடியரசுத்தலைவர், ஆளுநர், முதலமைச்சர்கள் போன்றோர் விமானத்தில் பயணிக்க முடியாத இடத்திற்கு பயணிப்பதற்காக இந்தியன் ரயில்வேயால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் உயர் பதவியில் உள்ளவர்கள் தவிர சாமானிய மக்களும் பயணிக்க முடியும். சொகுசு சலூன் கோச்சில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டுமானால் ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கோச்களில் 18 பேர் வரை பயணிக்க முடியும்.
இந்திய ரயில்வேயிடம் மொத்தம் 336 சலூன் கோச்கள் உள்ளன. பொதுமக்கள் ஒரு குடும்பமாகவோ, அல்லது 2-3 குடும்பங்களாகவோ புக் செய்ய இந்தியன் ரயில்வே அனுமதி அளிக்கிறது.