7 இலக்க சம்பளத்தை விட்டு டிஜிட்டல் உலகில் 10 மடங்கு வளர்ச்சி, 2.5 கோடி ஈட்டும் அனுஜா!

By YS TEAM TAMIL|9th Mar 2021
அனுஜா டியோரா சான்க்டிஸ் தொடங்கிய Filter Coffee Co ஒரு சிறிய அலுவலகத்தில் தொடங்கப்பட்டு முழு வீச்சில் செயல்படும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியாக வளர்ச்சியடைந்து மிகப்பெரிய பிராண்டுகளுக்கு சேவையளிக்கிறது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

அனுஜா டியோரா சான்க்டிஸ் சிட்டிபேங்கில் பணியாற்றி வந்தார். 7 இலக்க எண்ணில் சம்பளம். இருப்பினும் தொழில்முனைவு ஆர்வத்தால் 2012-ம் ஆண்டு வேலை விட்டு விலகினார்.


2014ம் ஆண்டு ஸ்டார்பக்ஸ் அவுட்லெட்டிற்கு வெளியே அனுஜாவிற்கு Filter Coffee Co என்கிற டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான யோசனை உதித்துள்ளது.

ஆரம்பத்தில் சிறு வணிகங்கள் மற்றும் ஏஜென்சிக்களின் பிராண்டுகள் டிஜிட்டலில் செயல்படுவதற்கான பிராஜெக்டுகளை ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக நடத்தத் தொடங்கினார்.


அனுஜா குடும்பத்தினர் தொழில்முனைவு பின்னணி கொண்டவர்கள். இவர் மும்பை NMIMS-ல் படித்தார். கனவு மட்டுமே காணாமல் அவற்றிற்கு செயல்வடிவம் கொடுத்து நடைமுறைப்படுத்துபவரே உண்மையான தொழில்முனைவர் என்கிறார்.

“நான் ஆரம்பத்திலேயே இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினேன். இதனால் பிராண்டுகளுக்கு ஒரிஜினல் உள்ளடக்கம் சார்ந்த டிஜிட்டல் ஷாப் அவசியம் என்பதை உணர்ந்தேன்,” என்கிறார்.

வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளமுடிவதால் பிராண்டுகள் வெறும் பலகையில் விளம்பரப்படுத்துவதைக் காட்டிலும் டிஜிட்டலில் சிறப்பாக தங்களை விளம்பரப்படுத்த முடிகிறது என்கிறார்.

1

சந்தையில் முதலில் செயல்பட்டார் – நன்மைகள் மற்றும் சவால்கள்

சந்தையில் முன்னோடியாகச் செயல்படுவதால் மற்றவர்கள் பின்பற்றத்தக்க வகையில் செயல்படுகிறோம் என்கிற திருப்தி கிடைக்கும் என்கிறார் அனுஜா. அதேபோல் ஆரம்பகட்டத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.


சமூக வலைதளங்களில் செயல்படுவதற்கு மார்க்கெட்டிங் பட்ஜெட் ஒதுக்கவேண்டும். இதற்கு மிகப்பெரிய பிராண்டுகளை ஒப்புக்கொள்ள வைப்பது சவாலாக இருந்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்க்கமுடியும். ஆனால் பிராண்டுகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது மற்றுமொரு சவாலாக இருந்துள்ளது.

வளர்ச்சி

Filter Coffee Co ஒரு சிறிய அலுவலகத்தில் தொடங்கப்பட்டு முழு வீச்சில் செயல்படும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியாக வளர்ச்சியடைந்துள்ளது. அனுஜாவும் லைஃப்ஸ்டைல் இன்ஸ்டாகிராமராக உருவெடுத்துள்ளார். இவர் தனிப்பட்ட முறையில் ஆடம்பர பிராண்டுகளைப் பயன்படுத்தியவர் என்கிற வகையில் சரியான கிளையண்டை ஏஜென்சியுடன் இணைக்கிறார்.


தற்சமயம் Filter Coffee Co டிஜிட்டல் மற்றும் சமூக வலைதள சேவைகளை வழங்குகிறது. டிஜிட்டல் ஸ்ட்ராடெஜி, சமூக வலைதள மேலாண்மை, டிசைன் மற்றும் புரொடக்‌ஷன், செல்வாக்குள்ளவர்களுடன் தொடர்பு, பிரபலங்கள் மேலாண்மை போன்ற சேவைகள் இதில் அடங்கும்.

மிகப்பெரிய பிராண்டுகள்

Starbucks, Kellogg’s, Danone போன்ற உலகளவில் பிரபலமான பிராண்டுகளுக்கும் L’Oreal, Kiehl’s, Forest Essentials, L’Occitane, Clinique போன்ற பியூட்டி பிராண்டுகளுக்கும் அனுஜா டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவையளித்துள்ளார்.


#CommitedtoKiehls என்கிற பிரச்சாரத்தை Filter Coffee Co நிர்வகித்துள்ளது. இது Kiehl India பிராண்டின் முதல் அவுட்ரீச் இன்ஸ்டாகிராம் பிரச்சாரம் ஆகும். அதேபோல் #Starbucks100 என்கிற பிரச்சாரத்தை Starbucks பிராண்டிற்காகவும் #PowerofPro10 என்கிற பிரச்ச்சாரத்தை Protinex பிராண்டிற்காகவும் மேற்கொண்டுள்ளது.


மேலும் Forest Essentials, Clinique, Nature’s Basket போன்ற பிராண்டுகளுக்கு கண்களைக் கவரும் வகையில் பிரத்யேக உள்ளடக்கத்தை Filter Coffee Co உருவாக்கியுள்ளது.


“நுகர்வோரை ஊக்குவிக்க நான் கதை சொல்லலை ஒரு டூலாகப் பயன்படுத்துகிறேன். பெரிய ஐடியாக்கள் அனைத்துமே பெரிய தீர்வுகளாக இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்கிறார் அனுஜா.

1.5 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் Filter Coffee Co தொடங்கப்பட்டது. முதல் ஆண்டு வருவாய் 25 லட்ச ரூபாய். ஐந்தாண்டுகளில் ஆண்டுதோறும் 10 மடங்கு வளர்ச்சியுடன் 2.5 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

பெண் தொழில்முனைவோராக செயல்படுவது குறித்து குறிப்பிடும்போது,

“பாலின பாகுபாடுகளை உடைத்தெறிவதே பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்து, வெற்றிகரமான தொழில்முனைவோர்கள் உருவெடுக்க வழிவகுக்கும். நீங்கள் உங்கள் நிறுவனத்தை வெற்றியின் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வீர்களானால், பாலினம் என்பது முக்கியத்துவமற்றது,” என்கிறார்.

டிஜிட்டல் நிறுவனம் என்பதால் பெருந்தொற்று சமயத்தில் Filter Coffee Co செயல்பாடுகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை.

“என்னுடைய பயணத்தில் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறேன். டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நாங்கள் மிகச்சிறிய பகுதியை மட்டுமே கையிலெடுத்துள்ளோம். மிகப்பெரிய இலக்குகளை எட்டுவேன் என்கிற நம்பிக்கை என்னிடம் உள்ளது,” என்கிறார் அனுஜா.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா