5,000 ரூபாயில் தங்கம், வைர நகை ஆன்லைன் விற்பனையை துவக்கி 50 லட்சம் டர்ன்ஓவர் செய்யும் பெண்!

டிஷி சோமனி, 2015 ல் ரூ,5,000 முதலீட்டில் தனது சொந்த ஆன்லைன் பிராண்டான டிஷிஸ் டிசைனர் ஜுவல்லரியை துவக்கினார். இன்று இந்த பிராண்ட் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களை கொண்ட, ரூ.50 லட்சம் விற்றுமுதல் ஈட்டும் வகையில் வளர்ந்துள்ளது. அவரது வெற்றிக்கதை இதோ:
1 CLAP
0

வசதியான மண்டலம் அழகானதாக அமைந்தாலும், அங்கு எதுவும் வளர்வதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 36 வயதான டிஷி சோமனி மேலும் வளர்ச்சியை விரும்பி தனது வசதியான வங்கி வேலையை விட்டு விலகினார்.

கலாச்சார பாரம்பரியம் மற்றும் அரண்மனைகளுக்காக அறியப்படும் மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரைச் சேர்ந்த டிஷி, அம்மா மற்றும் பாட்டிக்கு டிசைனர் நகைகள் செய்து கொடுக்க கைவினைக் கலைஞர்கள் தங்கள் வீட்டிற்கு வருவதை பார்த்து வளர்ந்திருக்கிறார்.

சிறுவயதில் இருந்தே அவருக்கு கலை ஆர்வம் இருந்தாலும், பின்னர் பரபரப்பான வாழ்க்கை சூழலில், படைப்பூக்கத்திற்கு அதிக இடம் இல்லாமல் ஆனது. இருப்பினும், 2015ல் ஐசிஐசிஐ வங்கி வேலையை விட்டு விலகி, தொழில்முனைவில் ஈடுபட்ட தீர்மானித்து, தனது சொந்த ஜுவல்லரி பிரண்ட் டிஷிஸ் டிசைனர் ஜுவல்லரியை துவக்கினார்.

“என்னுடைய வேலையில் திருப்தி இல்லை, எம்பிஏ படித்து நல்ல சம்பளம் வாங்கினாலும், என் வாழ்க்கையில் கலைக்கான பகுதி இல்லாமல் இருந்தது. நான் படைப்பூக்கம் கொண்டவள் என்பதால் 9-5 வேலை சரியாக வரவில்லை. வேலையை விட்ட போது என் தந்தை ஆதரிக்கவில்லை என்றாலும், தொழில்முனைவு பாதையை தேர்வு செய்து, என் சொந்த லேபிலை துவக்கினேன்,” என்கிறார் டிஷி.

டிஷி தனது பிராண்டை ரூ.5,000 முதலீட்டில் துவக்கினார். தங்கம், வரைம் மற்றும் வெள்ளி நகைகளை காட்சிப்படுத்திய முதல் ஆன்லைன் பிராண்ட்களில் ஒன்றாக தனது பிராண்ட் விளங்கியதாகக் கூறுகிறார்.

இப்போது ஏழு ஆண்டுகளில், ஆன்லைனில் அவர் 5,000 டிசைனர் பொருட்களை விற்பனை செய்கிறார். ஆண்டு விற்றுமுதல் ரூ.50 லட்சம் என்கிறார்.

நல்ல துவக்கம்

தில்லியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது அவருக்கு சொந்த பிராண்ட் துவக்கும் எண்ணம் உண்டானது.

“2015ல் ஆன்லைன் மார்க்கெட் வளரத்துவங்கியது. கேரட்லேன் மற்றும் புளுஸ்டோன் போன்ற பிராண்ட்கள் ஆன்லைனில் பிரிமியம் நகைகளை மட்டும் விற்றுக்கொண்டிருந்தன. வர்த்தகத்தில் எனக்கு குடும்பப் பின்னணி இல்லை என்பதாலும், முதலீடு செய்ய பெரிய அளவில் பணம் இல்லை என்பதாலும் தொழில் துவங்குவது இடர் மிக்கதாக இருந்தது. ஆனால் துணிந்து தொழில் துவங்கினேன்,” என்கிறார்.

டிஷி தனது நண்பர்கள் துணையோடு இணையதளத்தை உருவாக்கினார். தில்லியைச்சேர்ந்த பிசி ஜுவல்லர் மற்றும் ஸ்னேப்டீல் ஆகியவற்றுடன் தனது நகைகளை விற்க ஒப்பந்தம் செய்து கொண்டார்.

தனது தொழிலில் நிபுணத்துவம் தேவை என்பதால், 2014ல் நகை பிரிவில் டிப்ளமோ படித்திருந்தார்.

முதலில் இணையதளத்தில் நகை படங்களை பதிவேற்றி, ஆர்டர் பெற்று பின்னர் ஏழு நாட்களில் அவற்றை நிறைவேற்றினார். இதனால் அவர் கையிருப்பு பற்றி கவலைப்படாமல் செயல்பட்டார்.

இணையதளம் துவங்கிய ஒரு மாதத்தில் ரூ.10,000 க்கான ஆர்டரை பெற்றார். அதன் பிறகு, அமேசான், ஃபிளிப்கார்ட்டிலும் தனது பிராண்டை இடம்பெறச்செய்தார்.

நிறுவனம் தற்போது 20 முழு நேர ஊழியர்களைக் கொண்டுள்ளது. உள்நாட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளின் வாடிக்கையாளர்களுக்கும் சேவை அளிக்கின்றனர்.

சவால்கள்

டிஷி துவங்கிய போது ஆன்லைன் பிரிவில் ஒரு சில பிராண்ட்களே இருந்தன. மேலும், வாடிக்கையாளர்கள் விலை உயர்ந்த நகைகளை ஆன்லைனில் வாங்கத்தயங்கியதால் முதல் சில ஆண்டுகளில் வாடிக்கையாளர் பங்கேற்பும் மந்தமாகவே இருந்தது.

பெரிய நிறுவனங்கள் இந்தப் பிரிவில் நுழைந்தது, இந்த மனநிலையை மாற்றியது.

“தனிஷ்க், மலபார், கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற பெரிய பிராண்ட்கள் ஆன்லைனில் வந்ததை அடுத்து மக்கள் இணையம் மூலம் தங்கம், வெள்ளி நகைகளை வாங்கத்துவங்கினர். இது ஆன்லைன் விற்பனையை அதிகமாக்கி போட்டியையும் அதிகமாக்கியது,” என்கிறார் டிஷி.

2019ல் 850 மில்லியன் டாலராக இருந்த இந்த ஆன்லைன் ஜுவல்லரி சந்தை 2025ல் 3.7 பில்லியன் டாலராக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெருந்தொற்று காரணமாக ஆன்லைன் ஜுவல்லர்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த காலத்தில் டிஷிஸ் ஜுவல்லர் 30 சதவீதம் விற்பனை உயர்வை கண்டுள்ளதாக டிஷி கூறுகிறார்.

இதுவரை ஆர்டர் ரத்து செய்யப்பட்ட சவாலை எதிர்கொண்டதில்லை என்கிறார்.

எதிர்காலத் திட்டம்

ஜப்பானில் விற்பனை செயல்பாடுகளில் விரிவாக்குவது தனது எதிர்காலத் திட்டம் என்கிறார்.

புதிய வடிவமைப்புகளை உருவாக்குவது தொடர் செயல்பாடாகும். இந்த பிராண்டை சர்வதேச பிராண்டாக வளர்க்க விரும்புகிறார். முக்கியக் கூட்டு மற்றும் முதலீடுகளுக்கும் திட்டமிட்டுள்ளார்.

ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்