பலாப்பழ பாஸ்தா, சாக்லெட், சேமியா, கேக்: பலாவில் 400 வகை பொருட்கள் தயாரிக்கும் கேரள தொழில் முனைவர்!
பாஸ்தா, சாக்லெட், சேமியா, கேக் என பலவகையான பொருட்களை பலாப்பழத்தில் இருந்து தயாரித்து விற்பனை செய்கிறார் கேரளாவின் ராஜஸ்ரீ.ஆர்.
கார்டியன் நாளிதழில் 2019 ல் வெளியான ஒரு செய்தி, பலாப்பழத்தை, அழகற்ற பழம் என்றும், லாட்டரியில் வென்ற பழம் என்றும் வர்ணனை செய்திருந்ததால், இந்திய பலாப்பழ ரசிகர்கள் கொந்தளித்தனர்.
ஆனால், இந்தியாவில் கேரளா உள்பட பல மாநிலங்களில் இல்ல தோட்டங்களில் காணப்படும் பலாப்பழம், தனக்குத்தானே சிரித்துக்கொண்டு தலை நிமிர்ந்து நிற்கிறது. கார்டியனால் அழகற்ற பழம் எனக் கூறப்பட்ட பலாப்பழம் இன்று மேற்கத்திய நாடுகளில் இறைச்சிக்கு மாற்றாக நாடப்படும் பழமாக மாறியிருக்கிறது.
பலாச்சுளை முதல் அதன் மேல் பகுதியில் உள்ள முற்கள் வரை, அதன் அனைத்து பகுதிகளும் பலவித உணவுப்பொருட்களாக பயன்படுகின்றன. கேரளாவைச்சேர்ந்த விவசாய தொழில்முனைவோரான ஆர்.ராஜஸ்ரீயை தவிர வேறு யாரும் இதை சிறப்பாக அறிந்திருக்கமுடியாது..
இவர் பலாப்பழத்தில் இருந்து 400 வகையான பொருட்களை உருவாக்கியிருக்கிறார்.
’புரூட் என் ரூட்’ (Fruit N Root ) எனும் பிராண்ட் பெயரில் அவர் இந்த பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறார். பல வகை சோதனைகள் மூலம் இந்த பொருட்களை உருவாக்கியவர் தொடர்ந்து புதுமையாக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவை எல்லாமே, இயற்கை மீதான காதலின் வேரில் இருந்து தற்செயலாக உருவானது.
“எனக்கு திருமணம் ஆனதும் மும்பையிலும் பின் கத்தாரிலும் என் கணவருடன் வசிக்கத்துவங்கினேன். ஒவ்வொரு ஆண்டும் வீட்டிற்கு விடுமுறைக்கு வரும் போது, அம்மா உலர் பலாப்பழங்களை, அதன் சுளை மற்றும் கொட்டையில் இருந்து தயாரான பொருட்கள பேக் செய்து கொடுப்பார். அதை ஆண்டு முழுவதும் வைத்து சாப்பிடுவேன்,” என்கிறார் ராஜஸ்ரீ.
புதுமை எண்ணம்
இருப்பினும், சில ஆண்டுகளுக்கு பின் இந்தியா திரும்பிய போது தான், இதை வர்த்தகமாக்கும் எண்ணம் உண்டானது. ஆலாப்புழை மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் பலாப்பழம் கொட்டிக்கிடப்பது ராஜஸ்ரீக்கு தெரியும்.
அதிகமாக இருப்பதால் பலாப்பழங்கள் பெரும்பாலும் வீணாகும். இந்நிலையில், பலாப்பழ பாயாசத்திற்கு பதிலாக அவர் புதுமையாக பதப்படுத்தலை முயற்சித்து பார்க்க நினைத்தார்.
பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற ராஜஸ்ரீ, இந்த பழம் கொண்டு வர்த்தகம் செய்ய வேண்டும் எனில் புதுமையாக்கம் தேவை என உணர்ந்தார்.
“இந்தியா திரும்பி வந்ததும், பலாப்பழத்தை உலர வைத்து பொருட்கள் தயாரிப்பதற்கான உணவு உரிமம் பெற்றேன். ஆனால், புதுமையாக செயல்பட வேண்டும் என விரும்பினேன். பலாப்பழத்தில் இருந்து பாஸ்தா செய்தால், இளம் தலைமுறை மற்றும் சூப்பர் உணவு மீது ஆர்வம் கொண்டவர்களை கவரலாம் என நினைத்தேன்,” என்கிறார் ராஜஸ்ரீ.
கயம்குளத்தில் உள்ள கேவிகே மையத்தில் அவர் பலாப்பழத்தை உலர வைக்கும் நுட்பத்தை பயின்றார்.
“பலாப்பழத்தை உலர வைத்து தூள் தயாரிக்க கற்றுத்தந்தனர். பல வகையான பலாப்பங்களுக்கான போட்டியிலும் பங்கேற்க ஊக்குவித்தனர்,” என்கிறார்.
வழக்கமான பொருட்களை செய்வதற்கு பதில் ராஜஸ்ரீ சோதனைகள் மேற்கொண்டு, சூப், சப்பாத்தி, போண்டா, சாகெலெட், பர்கர். லட்டு போன்றவற்றை பலாப்பழம் கொண்டு செய்தார்.
போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வெல்லத்துவங்கினார். இந்த வெற்றிகள் தந்த ஊக்கத்தால், பலாப்பழ பாஸ்தா முயற்சியில் ஈடுபட்டார். பாஸ்தா இயந்திரம் தேடியவருக்கு அத்தகைய இயந்திரம் கிடைக்கவில்லை.
400 வகை பொருட்கள்
திருவனந்தபுரம் மாவடத்தில் ஸ்ரீகுளத்தில் உள்ள சிடிசிஆர்.ஐ ஆய்வு நிறுவனம் மரவெள்ளிக்கிழங்கில் இருந்து பாஸ்தா தயாரித்தது பற்றி கேள்விபட்டிருந்தார். இங்கு பயிற்சி பெற்று, தொழில்நுட்ப மாற்ற உரிமை பெற்று தனது கிராமத்திற்கு திரும்பினார்.
அவரது கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆலை, உலர் பழத்தில் இருந்து மாவு தயாரிக்கிறது. மற்ற பொருட்கள் அவரது திருவனந்தபுரம் இல்லத்தில் இருந்து தேவைக்கேற்ப தயாரிக்கப்படுகின்றன.
பலாப்பழம் தவிர, அரசி மற்றும் கேரள வாழைப்பழத்தை அவர் தனது குடும்ப நிலத்தில் பயிரிடுகிறார்.
முள்களில் இருந்து தயாரிக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட தக்ஷாமினி தூள், பிசினில் இருந்து கன்மாஷி, கொட்டையில் இருந்து பாயாசம், கேக், சாக்லெட் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட பொருட்களை பலாப்பழத்தில் இருந்து தயாரிக்கிறார்.
“பலாப்பழ பொருட்களில் இருந்து செய்தவை கொண்டு உணவு பார்சலையும் அளிக்கிறேன். அவித்த வாழை இலையில், சாதம், பலா அவியல், உலர் கறி ஆகியவை இடம்பெறுகின்றன. தேவை எனில் மீனும் உண்டு,” என்கிறார்.
ஆர்கானிக் அரிசி மாவாகும் நவாரா தானியம், வாழை அல்லது பலா பொருட்கள் அனைத்தும் எந்த செயற்கை பதப்படுத்தல் பொருளும் இல்லாமல் செய்யப்படுவதாக ராஜஸ்ரீ கூறுகிறார்.
தற்போது உள்ளூர் சந்தையில் விற்பனை செய்து வருகிறார். mydukaan.com மூலம் ஆன்லைனிலும் நுழைந்துள்ளார்.
“இப்போது உள்ளூர் சந்தையில் கவனம் செலுத்தி வருகிறோம். பிளாஸ்டிக் பாக்கெட்டிற்கு மாற்று முயற்சிக்க விரும்பியதால் ஆன்லைனில் தாமதமாக நுழைந்தோம். இறுதியாக அலுமியம் பாயில் மற்றும் காகிதம் தேர்வு செய்தோம்,” என்கிறார்.
தயாரிப்பு செயல்முறை நீளமானதாக இருப்பதால் அரசு மானியத்தை மீறி லாபம் அதிகம் இல்லை என்கிறார்.
“ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பலாப்பழ பருவம். அதன் பிறகு, பழங்களை அறுவடை செய்கிறோம். அதன் பிறகு வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு வருகின்றன. ஆண்டு முழுவதும் சரியாக இருக்கும். மிக்சர், முருக்கு, பக்கோடா போன்றவற்றை கிழங்கில் இருந்து தயாரிக்கிறோம்,” என்கிறார்.
பலாப்பழ தயாரிப்பிற்காக மாநில அரசு விருது பெற்ற பிறகு அவருக்கு பல இடங்களில் இருந்து ஆர்டர்கள் வரத் துவங்கினாலும், அவை அனைத்தும் விற்பனையாக மாறவில்லை.
“இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வது தான் எங்கள் நோக்கம். கண்காட்சிகளில் தொடர்ந்து பங்கேற்கிறேன். விரைவில் சர்வதேச அளவில் இவற்றை கொண்டு செல்வேன்,” என்கிறார்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்